Total Pageviews

Friday, May 08, 2015

ஃப்லிம் ஷோ மற்றும் பிளாஞ்செட்– பள்ளி வாழ்க்கையிலிருந்து இன்னொரு பக்கம்

ஃப்லிம் ஷோ பற்றி

நான் எட்டாவதோ ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த நேரம் என்று நினைக்கிறேன்.  திருநெல்வேலி அம்மன் சன்னதித் தெரு. எங்கள் வீட்டுக்கு எதிர் புறமாக புதியதாக ஒரு குடும்பம் குடியேறியது. அந்தக் குடும்பத்தின் தலைவர் மறைந்த திரு. சுப்பிரமணியன் வேலூர் பக்கத்திலிருந்து திருநெல்வேலிக்ரு அருகிலிருக்கும் பேட்டை ஐ.டி.ஐக்கு மாற்றலாகி வந்திருந்தார். பெரிய குடும்பம். மூன்று பையன்கள், இரண்டு பெண்கள். பெண்களில் ஒருவள் எங்களுக்கு ஒன்றிரண்டு வயது பெரியவள், மற்றவள் ஐந்து வயதுக்கும் கீழே. பெரிய பையன் வெங்கடேசன் என்ற டேச்சு என் வகுப்பு, ஸ்ரீனிவாசன் இரண்டாவது ஒன்றிரண்டு வயது சிறியவன். மூன்றாவது ராம்குமார் என்று ஞாபகம்.

அவர்கள் வந்த நாட்களிலிருந்தே எங்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்கிவிட்டனர். முக்கியமாக டேச்சு என்னுடைய நெருங்கிய நண்பன். பல முறை சேர்ந்தே பாடங்களைப் படிப்போம். அவன் கணக்கில் கொஞ்சம் வீக். அவனுக்கு கணக்கில் உதவ அவன் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டார்கள். பல முறை அடிக்கடி நானும் அவனும் அவன் வீட்டு மாடியில் தரையில் சாக் பீசை பயன்படுத்தியே கணக்குகளைப் போட்டுக்கொண்டிருப்போம். இரண்டாவது பையன் ஸ்ரீனிவாசன் நன்றாகப் படிப்பான். பிற்காலத்தில் மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சிக்கனம் என்றால் அந்தக் குடும்பத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்க வேலையென்றாலும் வருமானம் என்னவோ மிகக் கம்மிதான். ஏழு பேர் மூன்று வேளை சாப்பிட வேண்டுமே. மாலை நேரங்களில் திருமதி. சுப்பிரமணியன் (பெயர் மறந்து விட்டது) எங்கள் தெருவிலிருந்த எல்லா குழந்தைகளுக்கும் நல்ல ஸ்லோகங்களை தினமும் சொல்லிக்கொடுப்பார்கள். வரலட்சுமி விரத பூஜை தவறாமல் அனுஷ்டிப்பார்கள்.

திரு. சுப்பிரமணியன் ஐ.டி.ஐயில் வேலை பார்த்ததால் பல டெக்னிகல் சமாச்சாரங்களைத் தெரிந்து வைத்திருந்தார். சிறு வயதில்  நாங்கள் எல்லோருமே சினிமா பித்து பிடித்து அலைந்திருக்கிறோம். நான் பல சினிமாப் படங்களை முதல் வாரத்திலேயே பார்த்து விடுவேன். ஆனால், அவர்கள் வீட்டில் பொதுவாக எந்தப் படத்துக்கும் அழைத்துச் செல்ல மாட்டார்கள். ஆனாலும் சினிமாவைப் பற்றிய பேச்சு மட்டும் தினமும் தொடர்ந்து கொண்டிருக்கும்.

“நாம் ஏன் ஃப்லிம் ஷோ போடக்கூடாது?” என்று ஒரு நாள் திரு.சுப்பிரமணியன் எங்களைக் கேட்டார்.

“வீட்டிலேயே திரைப்படமா? எப்படி முடியும்?”

முடியும் என்றார். திரு.சுப்பிரமணியன் அவர்கள்தான் தொழில் நுட்ப வல்லுனர் ஆயிற்றே. அட்டையில் ஒரு சிறிய பெட்டி தயார் செய்தார். கடையிலிருந்து கைப்பிடியோடு கூடிய பூதக்கண்ணாடி வாங்கி வந்தோம். அதன் கைப்பிடியை ரம்பம் கொண்டு அறுத்தெடுத்தார். அட்டையால் பூதக்கண்ணாடி நிற்கக்கூடிய ஒரு குழலையும் தயார் செய்தார். அட்டைப் பெட்டியில் அந்தக் குழலை செருகும் அளவுக்கு பெரிய துளை போட்டார். குழல் துளைக்குள் செருகப்பட்டது. நூறு வாட்ஸ் மின்சார பல்ப் அட்டைப்பெட்டிக்குள்ளே நிறுத்து வைக்கப்பட்டது. ப்ரொஜக்டர் பெட்டி தயார்.

டவுண் வாகையடி முக்கில் ஒரு கடையில் ஃப்லிம் ரோல்களிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஃப்லிம் துண்டாகவோ அல்லது சிறிய ரோலாகவோ கிடைக்கும். தியேட்டர்களில் ப்ரொஜக்டரில் படம் ஓட்டும் பொழுது அடிக்கடி ஃப்லிம் ரோல் துண்டு பட்டுவிடும். அப்பொழுது ஆப்பரேட்டர் அதை ஒட்டி, மீண்டும் ப்ரொஜக்டரில் செருகி ஓட்ட வைப்பார். அவ்வப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் வெட்டிவிடவும் வேண்டியிருக்கும். அந்தத் துண்டுகளைத்தான் அந்தக் கடையில் விற்று வந்தார்.  எல்லாம் ஐந்து பைசா சமாச்சாரம்தான். ஆனால், அந்த ஐந்து பைசாவுக்கு ஒரு நாளைக்கு ஒரு வீட்டுக்குத் தேவையான கீரை வாங்கிவிடுவார்கள். அதனால் ஐந்து பைசா என்பதும் பெரிய சமாச்சாரம்தான்.

ஃப்லிம் துண்டுகளை சேகரிப்பது அந்தக் காலத்தில் (1950களில்) பல சிறுவர்களுக்கு ஒரு பொழுது போக்கு. அதில் ஒரு நடிகரையோ, நடிகையையோ பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த காலம். சில சமயம் தியேட்டரில் ஓடும் படத்தில் இல்லாத காட்சியின் ஃப்லிம் கூடக் கிடைக்கும். அதைப் பற்றி பெரிய சர்ச்சையே நடக்கு,ம்.

அப்படியாக ஃப்லிம்களை சேகரித்து, அந்த ஃப்லிம் துண்டுகளை தாங்குவதற்கு வாக்காக இன்னொரு அட்டையில் அதற்கேற்றாற் போல பாக்கெட் தயார் செய்தோம். ஒவ்வொரு ஃப்லிம் துண்டாக ப்ரொஜக்டர் பெட்டியின் முன் பக்கத்தில் பூதக்கண்ணாடியைத் தாங்கும் குழலுக்குப் பின்னே நாங்கள் கொடுத்திருந்த இடைவெளி வழியாக செலுத்த வேண்டும். மின் விளக்கின் ஒளி பூதக்கண்ணாடியின் மூலமாக ஃப்லிம் துண்டின் பிம்பங்களை சுவரில் பெரியதாகத் தெரியவைக்கும். முதல் முயற்சி ஓரளவுதான் வெற்றி. கொஞ்சம் ஏமாற்றம்தான். அவ்வளவு தெளிவாக சுவரில் பிம்பங்கள் தெரியவில்லை.

பூதக்கண்ணாடிகளின் எண்ணிக்கையை அதிகரித்தோம். ஐந்து ஆறு பூதக்கண்ணாடிகளைக் கொண்டு முயன்ற பொழுது படங்கள் மிகத் தெளிவாகத் தெரிந்தன. ஃப்லிம் துண்டுகள் குவியத் தொடங்கின. அட்டைப் பெட்டிக்கு பதிலாக மரத்தினாலான பெட்டியை திரு.சுப்பிரமணியன் ஐ.டி.ஐயில் மரப் பலகைகளை வெட்டி தயார் செய்து கொண்டு வந்தார். சனி, ஞாயிறன்று எங்களுக்கு வேறு வேலை கிடையாது. ‘ஃப்லிம் ஷோ’ தான் எங்களுக்கு மிகப் பெரிய பொழுது போக்கு.

பிளாஞ்செட் பற்றி

திரு.சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு பிளாஞ்செட் என்று அழைக்கப்பட்ட ‘இறந்தவர்களின் ஆவியுடன் பேசும்’ பலகையை பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஒரு பலகையில் ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களையும் ஒவ்வொரு கட்டமாக எழுதி வைத்திருப்பார்கள். ஐந்தாறு வயதே ஆன அவர்களது கடைசிப் பெண் குழந்தையைத்தான் பயன் படுத்திக்கொள்வார்கள். அந்தப் பலகையின் முன்னே அந்தச் சிறுமி தன் ஆள் காட்டி விரலை ஒரு சிறிய வட்டத் தகடின் மீது வைத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொள்வாள். திரு.சுப்பிரமணியன் அவர்கள் குடும்பத்தில் இறந்து போன ஒருவரின் ஆவியை கண்ணை மூடி அழைப்பார்.  பின்பு கண்களைத் திறந்தபடியே கேள்விகளைக் கேட்பார். பதிலுக்குக் காத்திருக்க வேண்டும். சிறுமி கண்ணை மூடிய நிலையிலேயே இருப்பாள். தானாகவே மெதுவாக அந்த வட்டத் தகடு நகரத் தொடங்கும். ஒவ்வொரு எழுத்தாக நகரும். உடன் உடனேயே எழுதி வைத்துக்கொள்வார். ஒரு இடத்தில் விரல் நகருவது நின்று போகும். பதில் வந்து விட்டது என்று அர்த்தம். காகிதத்தில் எழுதி வைத்ததை சேர்த்துப் படித்துப் பார்த்தால் கேட்ட கேள்விக்கு பதில் இருக்கும். அந்த சிறுமிக்கு ஆங்கிலம் தெரியாது. கேள்விக்குப் பதிலும் தெரியாது. ஆனால், எப்படி சரியான பதில் வருகிறது என்பது புரியாது. இதைப் பல முறை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமில்லையென்றால் சில சமயம் விரல் நகராது. சில சமயம் விரல் கன்னா பின்னாவென்று அர்த்தமில்லாமல் சுற்றும். சில சமயம் ‘முட்டாள்தனமான கேள்வி கேட்கக்கூடாது’ என்று கூட பதில் வரும்.

அருகில் குடியிருந்த பலர் கூட இந்தப் பிளாஞ்செட்டை நம்பிக்கையோடு அணுகியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். அந்த சிறுமியைத்தான் பெரும்பாலும் உட்காரச்சொல்வார்கள். அந்த ஆவியுடன் அந்த சிறுமிக்குத் தான் சரியான தொடர்பு கிடைக்கிறது என்று சொல்வார்கள்.

எங்களுக்கு பதில்கள் தெரிந்த சில கேள்விகளுக்கும் பிளாஞ்செட் சரியான பதிலைக் கொடுக்கும் பொழுது மிகவும் ஆச்சரியமாக இருக்கும் இது எப்படு சாத்தியம் என்று. எதிர்காலத்தைப் பற்றி, பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் பதில் கொடுக்கும். தொடர்ந்து பல மாதங்கள் பிளாஞ்செட்டைப் பயன் படுத்தியிருக்கிறார்கள். ஆனால் ஒரு முறை அந்த சிறுமிக்கு மிகக் கொடுமையான் ஜுரம் வந்தது. மிகவும் அவஸ்தைப் பட்டுப் போனார்கள். அப்பொழுது அவர்கள் எடுத்த தீர்மானத்தின் காரணமாக அவர்கள் பிளாஞ்செட்டை பயன்படுத்துவதை முழுவதுமாக நிறுத்தி விட்டார்கள். விஞ்ஞான மயமான உலகத்தில் இப்படியும் நடக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என்பதை இன்றும் என்னால் நம்ப முடியவில்லை.


அந்தக் குடும்பம் இருந்த வரை எங்களுக்கு போர் அடிப்பது என்றால் என்னவென்று தெரியாமலேயே வளர்ந்தோம். மறைந்த திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் நன்றி. இரண்டு மூன்று வருடங்களிலேயே மீண்டும் மாற்றலாகிச் சென்று விட்டனர். எங்களுக்கும் தொடர்பும் அற்றுப் போய்விட்டது. என்னுடைய நெருங்கிய நண்பன் வெங்கடேசன் என்கிற டேச்சுவைப் பற்றி அதன் பிறகு தகவல் எதுவுமில்லை. ஒரே ஒரு முறை மதுரையில் பின்னால் ஒரு நாளில் ஸ்ரீனிவாசனை கோவிலில் சந்தித்தாக ஞாபகம். அப்பொழுது அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். டேச்சு ஏதோ ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதாக கூறினார். 

No comments:

Post a Comment