Total Pageviews

Sunday, May 17, 2015

தெரிந்ததும் தெரியாததும்: ராக்கெட்

அறிமுகம்
நமக்குத் தெரிந்த பல பொதுவான விஷயங்களைப் பற்றி பல தெரியாத தகவல்கள் இருக்கின்றன. ஏற்கெனவே ‘இரும்பு’,’பருத்தி’,’அச்சு இயந்திரம்’ பற்றி எழுதியிருக்கிறேன். படிப்பவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எவ்வளவோ இருக்கிறது எழுத.

இன்றைய பகுதியில் நான் எடுத்துக் கொண்டது ‘ராக்கெட்’ பற்றி.

வான் ஹூவின் ராக்கெட்
வானத்தில் பறந்து விண்ணுக்குள் புகுந்து சந்திர மண்டலத்துக்கும் நட்சத்திரக் கூட்டங்களுக்கும் போக வேண்டும் என்ற ஆசை மனிதனுக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்திருக்கிறது.

சீனாவின் மிங் பரம்பரையினரின் ஆட்சியில் (கி.பி 1368 - 1644) வான் ஹூ என்ற அரசு அதிகாரிக்கு விண்மீன்களுக்குப் போக வேண்டும் என்று தீவிர ஆசை. கி.பி 9-ஆம் நூற்றாண்டிலேயே வெடிமருந்து சீனர்களால் கண்டு பிடிக்கப்பட்டிந்திருக்கிறது. விண்ணிலிருந்து உலகத்தை ஒரு பருந்துப் பார்வை காணவேண்டும் என்ற நோக்கத்தோடு திடமான ஒரு மூங்கில் நாற்காலியில் அவர் அமர்ந்து கொண்டார். வெடிமருந்து அடைக்கப்பட்ட 47 மூங்கில் குழாய்கள் இருக்கைக்கு அடியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர் ‘ரெடி’யென்று கண்ணசைத்தவுடன் அவருடைய 47 உதவியாளர்கள் எல்லா குழாய்களுக்கும் நெருப்பு பற்ற வைத்தவுடன் பாதுகாப்பைத் தேடி ஓடினர். மிகப் பெரிய சத்தத்துடன் அந்தக் குழாய்கள் வெடித்து  பயங்கரமான புகை மண்டலத்தைத் தோற்றுவித்தது. சிறிது நேரத்துக்கு எதுவுமே புலப்படவில்லை. புகை மண்டலம் அடங்கியவுடன் வான் ஹூவைத் தேடினால் அவரைக் காணவில்லை. மேலே சென்று விட்டார். வானுக்குள் போவதற்கு மனிதனின் முயற்சிகளில் வான் ஹூவின் முயற்சிதான் பதியப்பட்ட சரித்திரத்தில் முதல் முயற்சி.

சீனர்கள் வெடிமருந்துகள் தாங்கிய அம்புகளையும், வெடிமருந்துகள் அடைக்கப்பட்டிருந்த மூங்கில் குழாய்களால் எய்தப்பட்ட அம்புகளையும் ஏவக் கற்றிருக்கிறார்கள். 1232-ல் மங்கோலியர்களுடன் ஏற்பட்ட போரில் அவற்றை பயன்படுத்தி எதிரிகளை பயமுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த ராக்கெட்டுகளை துல்லியமாக அனுப்ப இயலாததால், போர்க்களத்தில் எதிரிகளை மிரட்ட மட்டுமே இவை பயன்பட்டிருக்கின்றன. எதிரிகளை அழிக்க முடியவில்லை. சீனாவின் கடற்படை பல்முனை ராக்கெட்டுகளை பயன்படுத்தியிருக்கிறது. வெடி மருந்துகளைப் பற்றி மென்மேலும் தெரிந்துகொண்ட பின்பு ராக்கெட்டுகளைப் பயன்படுத்துவதிலும் பல முன்னேற்றங்களை சீனர்கள் கண்டிருக்கிறார்கள்.

அந்தக் காலக் கட்டத்தில், விஞ்ஞான ஆராய்ச்சிக்கு பொதுவாக சீனாவில் முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்படாததால் ராக்கெட்டுகளைப் பற்றி முதன்முதலாக அறிந்திருந்தாலும் பிற்காலத்தில் சீனர்களால் ராக்கெடு துறையில் பெரிய முன்னேற்றத்தை காண முடியவில்லை.

ராக்கெட் தொழில்நுட்பம் சீனாவிலிருந்து மங்கோலியர்களுக்கும் பின்பு மங்கோலியர்கள் ரஷ்யாவையும் ஐரோப்பாவின் சில பகுதிகளையும் கைப்பற்றிய போது ஐரோப்பாவுக்கும் பரவியது. 1453-ல் துருக்கியின் கான்ஸ்டாண்டினோபிள் நகரைக் ஓட்டோமேன் அரசர்கள் கைப்பற்றியபோதும் இந்த ராக்கெட் தொழில்நுட்பம் ஐரோப்பாவுக்கு சென்றடைந்திருக்கிறது. அதன் பின்னரும் ராக்கெட்டுகள் பல போர்களில் ஒரு போர்க் கருவியாகவே பயன்பட்டு வந்திருக்கின்றன.

சர். ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்பு
அதே நேரம், ஐரோப்பாவில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தன. பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சர். ஐஸக் நியூட்டன்.

நியூட்டனின் கற்பனையில் தோன்றிய ஒரு ‘எண்ணப் பரிசோதனை’யில் (Thought Experiment) நமது பூமியின் வளிமண்டலத்தை (Atmosphere) விட சற்று உயரமான ஒரு மலையுச்சியிலிருந்து பக்கவாட்டை நோக்கி அமைந்திருக்கும் ஒரு பீரங்கியிலிருந்து ஒரு குண்டு வெளியேற்றப்பட்டால் என்ன  நடக்கும் என்று யோசித்தார். சுமாரான வேகத்தில் வெளிப்பட்டால் பூமியின் புவியீர்ப்பு விசையைத் தவிர வேறெந்த சக்தியும் இயங்காத நிலையில் அந்த குண்டு மலையுச்சியிலிருந்து கீழ் நோக்கிச் சென்று மலையடிவாரத்தில் விழும். குண்டு வெளிவரும் வேகத்தை அதிகப்படுத்த, அதிகப்படுத்த அது மலையடிவாரத்திலிருந்து சற்றுத் தள்ளித் தள்ளி விழத் தொடங்கும்.  நியூட்டனின் கணக்குப்படி ஒரு வினாடிக்கு 7.9 கி.மீ வேகத்தில் (அல்லது மணிக்கு 17500 மைல் வேகத்தில்) ஒரு குண்டு மலையுச்சியிலிருக்கும் அந்த  பீரங்கியிலிருந்து வெளிப்பட்டால், அந்த குண்டு தரையில் விழாமல் பூமிக்கு மேலேயே பறந்து கொண்டிருக்கும். ஏனென்றால், அந்த வேகத்தில் குண்டு கீழே விழும் வேகமும், பூமி (சூரியனைச் )சுற்றி வரும் சராசரி வேகமும் (Orbital Speed) ஒன்றாக இருக்கும். இன்னும் கொஞ்சம் வேகத்தை அதிகப்படுத்தினால் - அதாவது, வினாடிக்கு 11 கி.மீ அல்லது மணிக்கு 25000 மைல் வேகத்தில் - அந்த குண்டு பூமியில் புவியீர்ப்புவிசையைக் கடந்து வெளியேறிவிடும். அதாவது பூமிக்கு திரும்பவே திரும்பாது.

நியூட்டனின் ‘எண்ணப் பரிசோதனை’யின் விளைவாக அவர் கண்டுபிடித்த புவியீர்ப்பு விசையின் விதிகளும் (Laws of Gravitation) அசைவியக்கத்தின் விதிகளும் தான் (Laws of Motion) சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் விண்வெளிப் பயணத்துக்காக ராக்கெட் செலுத்துவதற்கு அடிப்படையாக அமைந்தது.

இருபதாம் நூற்றாண்டு

ஜூல்ஸ் வெர்னே மற்றும் ஹெச். ஜி. வெல்ஸ் அவர்களின் எழுத்துக்களால் உந்தப்பட்டு விண்வெளியை நோக்கிப் பயணிக்கும் எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல விஞ்ஞானிகளுக்குத் தோன்றியிருக்கிறது. அதில் முதன்மையானவர் ரஷ்யாவைச் சேர்ந்த கன்ஸ்டெண்டைன் சியோல்கோவ்ஸ்கி

போலந்த் நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் என்பவருக்கும்  மரியா என்ற ரஷ்ய பெண்மணிக்கும் பிறந்த கன்ஸ்டெண்டனுக்கு அவரது பத்தாவது வயதில் ஸ்கார்லெட் ஜுரம் வந்ததில் காது கேளாமல் போனது. அவரது 13-ஆவது வயதில் தாயார் காலமாகிப் போனார். இவரது காது கேளாமையைக் காரணம் காட்டி ஆரம்பப் பள்ளிகளில் இவரை சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர். அதனால் பெரும்பாலான இளமைக்காலத்தை வீட்டிலிருந்தே கழித்த இவருக்கு பல நல்ல நூல்களை படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.  கணக்கு மற்றும் புவியியலில் அதிக ஆர்வம் காட்டத்தொடங்கினார். தனது 14-15 வயதிலேயே விண்வெளிப் பயணத்தைப் பற்றி கற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார். பின்னால், மாஸ்கோ பொதுநூலகத்தில் மூன்று ஆண்டுகளை கழித்த பொழுது நிகோலாய் ஃப்யோடோரோவ் என்ற அறிஞருடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  நிகோலாயின் சிந்தனைகளில் வசப்பட்ட கன்ஸ்டண்டைன் மனித இனம் கவலையில்லாமல் இறப்பில்லாமல் வாழ வேண்டுமானால் விண்வெளியில் குடியேற்றங்கள் மூலமாகத்தான் அடைய முடியும் என்று நம்பத் தொடங்கினார்.

கன்ஸ்டண்டைனின் மூளையில் உதித்ததுதான் ராக்கெட்டை மேல் நோக்கித் செலுத்துவதற்கான சமன்பாடு (Rocket Equation). அதற்கு முன்பேயும் இந்த சமன்பாட்டை தனியாக இங்கிலாந்தில் வேறொரு விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தாலும் இந்த சமன்பாடு கன்ஸ்டெண்டைன் பெயராலேயே அவரை கௌரவிக்கும்படியாக அழைக்கப்பட்டு வருகிறது. 1895-ல் பாரீசில் கட்டப்பட்ட ஐஃபல் கோபுரத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதைப் போலவே விண்வெளிப் பயணத்துக்கு ஒரு படிக்கட்டு (Space Escalator) எப்படிக் கட்டுவது என்பதைப் பற்றி ஆராய்ந்திருக்கிறார். அவரது 19-ஆவது வயதில் தகப்பனாரின் கட்டாயத்தினால் ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சியடைந்து ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

இவ்வளவுக்கும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவரது தனி வாழ்க்கையில் பல துன்பங்கள். 1902-ல் சிறிய வயதில் இவரது மகன் தற்கொலை செய்துகொண்டான். 1908-ல் ஒரு வெள்ளத்தில் இவரது முக்கியமான பல ஆராய்ச்சி எழுத்துக்கள் அழிந்து போயின. 1911-ல் புரட்சியில் ஈடுபட்டதற்காக இவரது மகள் கைது செய்யப்பட்டாள். இருந்தும், ஒரு சிறிய நகரத்தில் தனது காலத்தை கழித்தே அவரது சிந்தனையின் சக்தியினால் பல முக்கியமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்திருக்கிறார்.

கன்ஸ்டண்டைனின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது ராக்கெட்டை முன்னோக்கி செலுத்துவதற்கு திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜன் வாயுவை பயன்படுத்துவது பற்றியும் அந்த வாயுக்களின் அதிக பட்ச வெளியேற்றும் சக்தி பற்றியதுமாகும். ரஷ்யாவுக்கு வெளியே இவரைப் பற்றி அதிகமாக பலர் அறிந்திருக்காவிட்டாலும் ரஷ்யாவுக்குள்ளே இவரது பெயர் பிரபலமாகியிருக்கிறது. பல விண்வெளிப் பயண ஆராய்ச்சிகளுக்கு இவரது சிந்தனைகள் பயன்பட்டிருக்கின்றன.

ஹெச். ஜி. வெல்ஸின் எழுத்துக்களால் உந்தப்பட்ட இன்னொருவர் ராபர்ட் கோடார்ட் என்ற அமெரிக்கர். 200-க்கும் மேற்பட்ட காப்புரிமை பட்டயங்களைப் பதிவு செய்த அவரது முதலாவது கண்டுபிடிப்பு திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் ராக்கெட், மற்றும் பல்முனை ராக்கெட்டுகளைப் பற்றியதானது. 1926-ல் மூன்று வினாடிகளில் 184 அடி உயரம் பறந்த ‘நெல்’ என்றழைக்கப்பட்ட இவரது ஒரு சிறிய ராக்கெட் இவருக்குப் பெயரைத் தேடித்  தந்தது. தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து  ராக்கெட் வடிவமைப்பில் பல மாறுதல்களைச் செய்து, பல மைல் உயரம் பறக்கக்கூடிய 36-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை விண்ணில் அனுப்பியிருக்கிறார்.

கன்ஸ்டாண்டினைப் போலவே - ஆனால் அவரைப் பற்றி அறியாமலேயே - ஜூல்ஸ் வெர்னேயின் எழுத்துக்களால் 1920-களில் ஹெர்மன் ஒபெர்த் என்ற இன்னொரு விஞ்ஞானி, விண்வெளியில் பறப்பது பற்றி கனவு கண்டிருக்கிறார். ப்ரஷ்யா நாட்டு போர் மந்திரிக்கு முன்னே திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட்டை விண்வெளியில் செலுத்திக் காட்டியிருக்கிறார்.

வெர்ன்ஹெர் வான் பிரௌண், ராக்கெட் சரித்திரத்தில் சர்ச்சைக்குள்ளான ஜெர்மன் விஞ்ஞானி. ஜெர்மனி நாட்டு விவசாயத்துறை அமைச்சரின் மகனான இவர் தனது 12-ஆவது வயதில்  நாஜி அரசால் ராக்கெட் மூலம் உந்தப்பட்ட அதி வேகமாகச் செல்லும் மோட்டர் கார்களைக் கண்டு வியந்து, அதைப் போலவே தானும் சாலையில் பல பொம்மைக் கார்களை ராக்கெட் மூலம் ஏவிவிட்டு வாகனப் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார்.

1934-ல் முனைவர் பட்டத்துக்கு இவர் தயாரித்த அறிக்கைகளை தேசியப் பாதுகாப்பு குறித்து 1960-வரை ரகசியமாகவே வைத்திருந்தனர்.  நாஜி அரசாங்க ராணுவத்துக்காக Vengeance Weapon 2 என்ற ஏவுகணையை தயாரித்து செலுத்திக்காட்டியிருக்கிறார். அதன் பிலிம் சுருளைப் பார்த்த ஹிட்லர் 31 வயதேயான இவரை ஒரு பேராசிரியராக்கி கௌரவித்தார்.  இவர் தயாரித்த ஏவுகணை ராக்கெட் V2 குறிக்கோளை துல்லியமாகத் தாக்காவிட்டாலும் எதிரிகளை பலமாக அச்சுறுத்தியது. இங்கிலாந்தையும் பெல்ஜியம் நாட்டின் ஆண்டெவெர்ப் நகரத்தையும் நாஜி படைகள் தாக்கும்பொழுது 9000-க்கும் மேற்பட்ட சாதாரண மக்களை இவரது V 2 ராக்கெட் கொன்றிருக்கிறது. 1945-ல்  நட்பு நாடுகளின் படைகள் ஜெர்மனியை சூழ்ந்துகொண்டபோது ரஷ்யர்களிடம் சரணடையப் பிடிக்காமல் அமெரிக்க துருப்புக்களிடம் வேண்டுமென்றே சரணடைந்தார். மிகவும் தேடப்பட்ட எதிரி விஞ்ஞானியாகக் கருதப்பட்டு, அமெரிக்கப் படைகளினால் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டியவராக இருந்த வான் பிரௌன் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு மறுவாழ்வு கொடுக்கப்பட்டு டெக்சஸ் நகரத்தில் அமெரிக்காவுக்காக விஞ்ஞானியாக பணியாற்றினார்.

அமெரிக்காவின் முன்னேற்றத்தில் வான் பிரௌன் போன்ற பல வெளிநாட்டுக்காரர்களின் பங்கு மிக முக்கியமானது. எதிரியாக இருந்தாலும் கூட தங்கள் நாட்டின் நலனுக்காக பல வெளிநாட்டுக்காரர்களுக்கு குடியுரிமை அளித்து வளர்ந்த நாடு அமெரிக்கா.

விண்வெளிப் பயணத்தில் போட்டி
இரண்டாம் உலகப் போரில் ஒரே பக்கத்தில் சேர்ந்திருந்து ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்  நாடுகளின் கூட்டை முறித்து வென்றாலும் போர் முடிவடைந்த பிறகு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (ரஷ்யாவுக்கும்) கடுமையான பனிப்போர் துவங்கியது. இரண்டு நாடுகளுமே விண்ணில் ஏவக்கூடிய ‘பலிஸ்டிக் மிசைல்ஸ்’ (Ballistic Missiles) ஏவுகணைகளை அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின. அணுசக்தி ஆயுதங்களைக் குவிக்கத் தொடங்கின. இந்த ஏவுகணைகள் மூலம் ஒருவருக்கொருவர் மற்ற நாட்டின் குறிப்பிட்ட நகரங்களைத் தாக்கக்கூடிய வலிமையைக் கொண்டிருந்தனர். இரு நாடுகளுமே செயற்கைக் கோள்களை விண்ணில் பறக்கவிடும் திட்டங்களை அறிவிக்கத் தயாராகினர்.

ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்தைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளைத் தயாரிப்பதில் அமெரிக்காவை விட சோவியத் யூனியன் தீவிரமாக இருந்தது. செர்கேய் கோரோலோவ் என்பவர் அமெரிக்காவிடம் இருந்த ராக்கெட்டுகளை விட சக்தி வாய்ந்த V 7 என்ற ராக்கெட்டை தயாரித்தார். அக்டோபர் 4, 1957-ல் கடற்கரையில் விளையாடும் பந்து அளவும், ஒரு வளர்ந்த மனிதனின் எடையும் (84 கிலோ) கொண்ட ஸ்புட்னிக் 1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது குறைந்த உயரத்தில் ஸ்புட்னிக் 1, 90 நிமிடமே பூமியை சுற்றி வந்தாலும் உலகமே ரஷ்யர்களின் விஞ்ஞான வளர்ச்சியைக் கண்டு பிரமித்து நின்றது.

அமெரிக்கர்களுக்கு பெருத்த அவமானம்.  உடனே செயலில் இறங்கினார்கள். அவர்களும் Vanguard  செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தினார்கள். ஆனால், விண்ணில் ஒரு சில வினாடிகளே பறந்த அந்த செயற்கைக் கோள் வெடித்துச் சிதறியது. வான் ப்ரௌண் தலைமையில் இன்னொரரு குழு அதி தீவிரமாக செயல்பட்டது. ஜனவரி 31, 1958-ல் ஐந்து கிலோ எடையேயுள்ள Explorer 1 செயற்கைக் கோளை வெற்றிகரமாக பூமியைச் சுற்றிவர அமெரிக்கா விண்ணில் பறக்கவிட்டது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் 1 பூமியைச் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர், அமெரிக்காவின் ஒரு முக்கிய கல்வி நிறுவனமான M. I. T-யின் தலைவராக இருந்த ஜேம்ஸ் கிலியன் என்பவரை தனது விசேஷ காரியதரிசியாக விஞ்ஞானத் துறைக்கு நியமித்தார். அக்டோபர் 1, 1958-ல் NASA நாசா என்ற விண்வெளிக் கழகத்தை அமைதியான வழிகளுக்காக ஐசன் ஹோவர் நிறுவினார். 340 மில்லியன் டாலர் பட்ஜெட்டுடனும், 8200 அலுவலர்களுடனும்  ‘நாசா’ தன் வேலைகளை ஆரம்பித்தது. இருந்தும் காலப் போக்கில் நாசாவின் பட்ஜெட் பல மடங்கு குறைந்து விட்டது. சோவியத் யூனியனும் பல நாடுகளாக உடைந்து விட்டது.  நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் வைத்த சில ஆண்டுகளுக்குள்ளேயே சந்திரனில் மனிதனை இறக்க வேண்டும் என்ற ஆசைகள் இரு நாடுகளுக்கும் பலவீனப்பட்டுப் போயின.

முடிவுரை
அமெரிக்க, ரஷ்ய அரசாங்கங்கள் விண்வெளியில் பறக்கும் எண்ணங்களை வெகுவாகத் துறந்து விட்டாலும் ஒரு புதிய அத்தியாயம் ‘விண்வெளி சுற்றுலா‘ என்ற பெயரில்  பல தனி மனிதர்களுடையே வேறூன்றத் தொடங்கியிருக்கிறது. இது ஒரு மிகப் பெரிய வியாபாரமாக மாறும் என்று நம்புகிறார்கள். 
அது ஒரு தனிக்கதை.

இன்னும் எவ்வளவோ சொல்லலாம், எழுதலாம்…….


இந்தக் கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

இதே போன்ற என்னுடைய மற்ற கட்டுரைகளைப் படிக்க:

No comments:

Post a Comment