Total Pageviews

Monday, May 14, 2018

14.05.18 INSIDE EDGE: Amazon Prime Serial – ஒரு பார்வை


“BREATHE” என்ற மற்றொரு அமேசான் ப்ரைம் சீரியலைப் பற்றி என்னுடைய கருத்தை முன்னம் தெரிவித்திருந்தேன். INSIDE EDGE அதே ஃபார்முலாவைப் பின்பற்றி தயாரிக்கப்பட்ட இன்னொரு ‘ஹாட்’ சீரியல். (அல்லது இதுதான் அண்ணனா என்று தெரியவில்லை.)

ஐ. பி. எல்-லைப் போல இந்தத் தொடரில் பி. பி. எல் (POWER PLAY LEAGUE) கிரிக்கெட் போட்டிகள். நிதி நெருக்கடியில் தவிக்கும் மும்பை மாவரிக்ஸ் பெண் உரிமையாளர் (அடிக்கடி புகைத்துக் கொண்டு) தன்னுடைய அணியைத் தக்கவைத்துக் கொள்ள இன்னொரு ‘ஃபைனான்சியரை’த் தேடுகிறார். அங்கே ஒரு வில்லன் உள்ளே நுழைகிறார். வில்லன் சொல்வதற்கெல்லாம் (பல குறுக்கு வழிகளுக்கு) விருப்பமில்லாமல் மும்பை மாவரிக்ஸ் உரிமையாளர் ஆடுகிறார். ஒவ்வொரு போட்டியும் ஃபிக்ஸ் ஆகிறது. மேட்ச் ஃபிக்சிங், ஸ்பாட் ஃபிக்சிங் இரண்டும் வெற்றிகரமாகச் செய்யப்படுகிறது. பெயர் தெரியாத கிராமத்திலிருந்து வரும், ஆனால், திறமையான, பந்து வீசும் ஓரு விளையாட்டு வீரரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு விருப்பமில்லாமல் அவருடைய கனவுகளை பகடையாக்கி மேட்ச் ஃபிக்சிங் நடக்கிறது. இதில் ஒன்றிரண்டு விளையாட்டு வீரர்களும் உடந்தை. ‘பெட்டிங்’ பன்னாட்டு அளவில் பல்லாயிரம் கோடி ரூபாய்க் கணக்கில் நடக்கிறது. இதில் நேர்மையான கேப்டன், ஏதோ ஒரு தவறை செய்துவிட்டு குற்ற உணர்ச்சியில் தவிக்கும் கோச் போன்ற பலர் பலியாகின்றனர். பெரிய கனவில் விளையாடும் தடாலடி பேட்ஸ்மேன் வாயு ராகவன் – இவருக்கு எல்லா (நல்ல) பழக்கங்களும் உண்டு – செக்ஸ், பாட், தண்ணீர், முன்கோபம், ஆத்திரம், இத்யாதி – ஒவ்வொரு மேட்சின் போக்கையும் மாற்றியமைக்கக் கூடியவர் – இவர்தான் இறுதி ‘PLAY-OFF’ –ல் கடைசி பலியாக வேண்டும். இவரும் மேட்ச் ஃபிக்சிங்கில் விழுந்தாரா, இல்லையா இதுதான் சஸ்பென்ஸ்.

விறுவிறுப்புக்குக் குறைவில்லை என்பதை கண்டிப்பாக ஒத்துக் கொள்ளவேண்டும். ஆனால், சென்சார் போர்டு என்று தொலைக்காட்சி சீரியல்களுக்கு இருந்தால் அவர்களின் கத்திரியிலிருந்து இந்த சீரியல் தப்பித்திருக்குமா என்பது முக்கியமான கேள்வி. நெகடிவாகவும், குரூரமாகவும், செக்ஸ் சமாச்சாரங்கள் கொஞ்சம் தாராளமாகவும் இருந்தால்தான் ஒரு படமோ, சீரியலோ வெற்றியடைய முடியும் என்று யாரோ தயாரிப்பாளர்களுக்கு அறிவுரை கூறியிருக்க வேண்டும். அதை முழுவதுமாக பின்பற்றியிருக்கிறார்கள். அமெரிக்காவில் வெளி வந்திருக்கும் பல வெற்றிகரமான சீரியல்களை பைத்தியம் போல தொடர்ந்து பார்க்கும், ஏங்கித் தவிக்கும் பல இளைஞர்களுக்கு (வயதான என்னையும் சேர்த்து) INSIDE EDGE சீரியல் நல்ல தீனி.

முடிவுரை: இந்த சீரியலையும் பார்த்த பிறகு இந்தியாவில் ஆண்டு தோறும் நடக்கும் ஐ. பி. எல் மேட்சுகளை, ஏதோ உண்மையில் போட்டி போடுகிறார்கள் என்று நம்பி வேறு வேலையே இல்லை என்பது போல பார்க்கும் லட்சக் கணக்கான மக்களைப் போல முட்டாள்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.  லலித் மோதி ஓடி ஓளிந்த நாட்களுக்குப் பிறகு நான் ஐ. பில் எல் மேட்சுகளை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

No comments:

Post a Comment