Total Pageviews

Friday, March 15, 2019

16.03.19 பயம் மற்றும் பதட்ட உணர்ச்சியை எப்படிப் போக்குவது?


முன் பயத்தால் (anticipatory fear) பல ஆண்டுகள் அவதிப் பட்டிருக்கிறேன் என்று என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

வங்கியில் பணி புரிந்த காலங்களில் முக்கியமான பல பதவிகளை –உயர் பதவி வரை - வகிக்க நேர்ந்ததால் பல விதமான பிரச்சினைகளையும், சோதனைகளையும் சவால்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு பிரச்சினை அல்லது சவால் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் எனக்கு எப்படியோ தெரிந்து வயிற்றுக்குள் ஒரு பட்டாம் பூச்சி பறந்து பிசையத் தொடங்கி விடும். அந்தப் பிரச்சினையைப் பற்றிய எண்ணங்கள் அடுக்கடுக்காக ஒன்றன் பின் ஒன்றாக வரும். அதிலேயே மூழ்கி விடுவேன். BROODING என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அந்தப் பிரச்சினையினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று வரிசையாக எண்ணங்கள் வரும். மனம் வேறெதிலும் ஈடுபடாது. எதிலும் மனதை செலுத்தவது கடினமாக இருக்கும். இந்த நிலை ஒரு சில நிமிடங்கள் நீடிக்கும். சமயத்தில் ஒரு சில மணிகள், ஒரு சில நாட்கள் கூட நீடித்திருக்கிறது.

பிரச்சினைகளின் எதிர் விளைவுகளை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி பல விதமாக மனதுக்குள் திட்டம் தீட்டுவேன். கோபம் வரும். பல நேரங்களில் அதை வெளிக்காட்டிக் கொள்ள முடியாது. எப்படியும் எங்கேயோ ஒரு இடத்தில் அது வெடிக்கும்.

இந்த ANTICIPATORY FEAR என்னை விட்டு பல ஆண்டுகளாகப் போகவேயில்லை. அதை எப்படிப் போக்குவது என்றும் எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி யாரிடமும் நான் சொன்னதுமில்லை. ஆலோசனையும் கேட்டதில்லை. என்ன காரணத்தினால் எனக்கு அப்படி ஒரு பயம் வருகிறது என்றும் ஆலோசனையும் செய்து பார்த்ததில்லை.  

ஆனால், ஏதோ ஒரு சக்தி என்னைப் பாதுகாப்பதாக மட்டும் நான் என்றுமே உணர்ந்திருக்கிறேன். அதற்கு ஒரு முக்கிய காரணம் என்னுடைய இறை நம்பிக்கை. பல ஆண்டுகளாக, படிப்படியாக பலவிதமான ஸ்லோகங்களை தினமும் விடாமல் மனப்பாடமாக சொல்லி வந்திருக்கிறேன். ஒரு நாள் கூட தவறியதில்லை. அந்த இறைவன் என்னை எப்படியும் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை என்னுள்ளே எனக்கு ஒரு தைரியத்தையும் கொடுத்திருந்தது. அதனால், பல சவாலான பொறுப்புகளையும் அதையொட்டி வந்த பல சிக்கலான பிரச்சினைகளையும் எதிர்கொள்ளத் தயங்கியதில்லை. எப்படியோ ஒரு சுமுகமான தீர்வை அந்த இறைவனே ஏற்படுத்திக் கொடுப்பான் என்று நம்பினேன். அப்படியே நடந்தது. பிரச்சினைகளும், சவால்களும் எவ்வளவோ நேரினும் அதற்கான தீர்வுகளும் கூடவே எப்படியோ வந்தன. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது என் வாழ்க்கையில் நிச்சயம் உண்மை. பல முறை சந்தித்தது.

ஆனால், மனோதத்துவ முறையிலும் ஆன்மீகத்திலும் இது போன்ற பய உணர்ச்சிகளுக்கு விடை இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் இருந்திருக்கிறேன். அதற்காக இன்று நான் வெட்கப்படுகிறேன்.

வங்கி வேலையை உதறி விட்டு துபாயில் வேலை பார்த்த சமயம் முதன் முறையாக ஆன்மீகத்தில் என்னை இழுத்தது ஸ்ரீ அம்மா பகவானின் இயக்கம். (அன்றைய காலத்தில் கல்கி பகவான் என்றழைக்கப்பட்டார்.) அந்த இயக்கத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்ட பின்புதான் ஒரு சில காரண காரியங்களை (கர்மாவைப் பற்றி) (cause and effect) ஆராயத் தொடங்கினேன். என்னையே அறிந்து கொள்ள முயன்றேன். அங்கே நான் கற்றுக் கொண்ட பல விஷயங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமைந்தன.

மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக்கும் யோக முறைகளையும், மூச்சுப் பயிற்சி முறைகளையும் எனது 48-50-ஆம் வயதுகளில்தான் கற்றுக் கொண்டேன். உடலையும் மனதையும் நிதானப்படுத்தும் “யோக நித்ரா,” “நிதித்யாசனா”, “ஸுர்ய நமஸ்காரம்,” மற்றும் “சக்ர தியானம்” போன்ற யோக முறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அவற்றை தினமும் பயிற்சி செய்தேன்.

அதற்கும் மேலாக, “சரணாகதி” மனோநிலையை மேற்கொள்ளக் கற்றுக் கொண்டேன். நம்மால் செய்ய முடியப்போவது ஒன்றுமில்லை. “அவனிடத்தில்” சரணடைந்து விட்டால் நாம் வாழ்க்கையில் போராடத் தேவையில்லை. எல்லாவற்றையும் “அவன்” பார்த்துக் கொள்வான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் ஏற்பட்டது. அதுவரை என்னுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நான் போராடி வந்தேன். புதிய நம்பிக்கை வந்த பின் போராடுவதை விட்டு விட்டேன். I LET GO OFF THINGS FROM ME. அதனால் கவலையும், பயமும், போராட்டமும் பெருமளவு நின்று விட்டது.

ஸ்ரீஅம்மா பகவானின் “PSYCHOSOMATIC” வகையைச் சேர்ந்த பல பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு மனோரீதியான பல புதிய விஷயங்களை முதன் முறையாக நான் கற்றுக் கொண்டேன். மனம் சம்பந்தமான விஷயங்களில் எவ்வளவு பெரிய ஞானசூன்யமாக அது வரை நான் இருந்திருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டேன். வளரும் பருவத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு CHILDHOOD TRAUMA-தான் எனக்கு ANTICIPATORY FEAR வருவதற்கான காரணம் என்பதையும் கண்டு கொண்டேன்.  

அதே நேரத்தில், ஒரு சில பிரபல எழுத்தாளர்களின் நூல்களை படிக்க நேர்ந்தது. அவை என் எண்ணங்களில், அணுகுமுறையில், மனோபாவத்தில், கருத்துக்களில் பெரிய தாக்கத்தை உண்டாக்கின. உதாரணத்துக்கு, NEALE DONALD WALSCH–ன் CONVERSATION WITH GOD (மூன்று பாகங்கள்), DR. DEEPAK CHOPRA-வின் பல அரிய நூல்கள், ANTHONY ROBBINS–ன் AWAKEN THE GIANT WITHIN, அமெரிக்க தொலைக்காட்சியில் வாரா வாரம் ஒளிபரப்பப் பட்ட JOEL OSTEEN-ன் பிரசங்கங்கள் மற்றும் அவரது YOU CAN YOU WILL நூல் இப்படிப் பல. இவர்களின் பல நூல்கள் எனக்கு வாழ்க்கையில் ஒரு புதிய திசையைக் காட்டின. என்னுள்ளேயே உறங்கிக் கிடக்கும் அபார சக்தியை எனக்கு உணர்த்தின. இன்றும் அவர்களை என்னுடைய குருவாக மதித்து வணங்குகிறேன்.

அதே நேரத்தில் அமெரிக்க மனோதத்துவ நிபுணரான SILVA JOSE அவர்களின் “3-2-1” என்ற மனதை வயப்படுத்தும் ஒரு புது உத்தியைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அதை தினமும் பயிற்சி செய்து வந்தேன். மனதை ஒரு சில நிமிடங்களில் அமைதிப்படுத்துவதற்கும், முக்கியமான சில முடிவுகளை எடுப்பதற்கும் அந்தப் பயிற்சியை வழக்கப்படுத்திக் கொண்டேன்.

மற்றவர்களின் நன்மைக்காக தன்னலமற்று பிரார்த்தனை செய்யக் கற்றுக் கொண்டேன்.

இன்று, இந்தியாவில் இருக்கும் சமயத்தில், எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அல்லது அழைக்கிறார்களோ அங்கெல்லாம் நான் கற்றுக் கொண்டதை இளைய சமுதாயத்துக்குக் கற்றுக்கொடுத்து வருகிறேன். பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் என்னைப் பேசுவதற்கு அழைக்கிறார்கள். அந்த நேரங்களில் நான் கற்றுக் கொண்ட பயிற்சிகளை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறேன்.

இதில் ஒவ்வொன்றைப் பற்றியும் விவரமாக என்னால் எழுதவும் பேசவும் முடியும். ஆனால், எழுதப் போவதில்லை. ஏனென்றால், இன்று இவற்றையெல்லாம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை.

உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment