Total Pageviews

Showing posts with label Florence. Show all posts
Showing posts with label Florence. Show all posts

Wednesday, January 06, 2016

"Hornet Flight" by Ken Follette

Just finished reading Ken Follett’s HORNET FLIGHT. (2002)

The story centers round the World War II, during 1941, the low point of the war. England throws wave after wave of RAF bombers across the English Channel, but somehow the Luftwaffe, the Nazi Germany’s Air Force is able to shoot them all down at will.

On a small Danish island across the North Sea, a bright eighteen-year-old boy with a talent for engineering, stumbles upon a secret German installation.

With England preparing itself for its largest aerial attack on Germany, they are looking frantically to find out the secret about Germany’s capability to guess England’s air attack in advance.

How the Danish teenager’s discovery is connected with the ultimate success of England’s war effort against Germany is the crux of the story.

When I started reading the book, initially I felt the story was dragging. However, as I kept reading the novel it began engrossing me all through, till the final page.

The story is a suspenseful depiction of what a teenager can accomplish despite all odds.

One appreciable feature about many English novels is that a lot of research goes into while writing them and this book is not an exception. (I had tried to emulate this practice while writing my novel: WHAT IF OUR DREAMS COMETRUE! I had traveled to several towns and villages along the banks of the River Tamirabarani, and I had read a number of books, reports, blogs, websites about the river and its plains, while writing this novel.) There are elaborate descriptions about the Hornet Moth plane of those years and about how the flight could be repaired and operated by someone who has sufficient inquisitiveness about the engineering aspects of an air-plane. I had continuously visualized every scene clearly as I kept reading the book.

The broad descriptions about Copenhagen, the capital of Denmark and its islands kindles in me an interest to visit places like Denmark, Sweden and Norway. During the earlier years, reading Dan Brown’s INFERNO spurted a sudden interest in me to visit Florence in Italy, and eventually, in the next few months during early 2013, I landed in Italy on my way from India to USA. I had a wonderful eight days sight-seeing trip inItaly hopping from Rome to Naples, to Florence, to Venice and back to Rome. Let me hope, I get to visit Denmark too, soon.


Overall, quite a captivating novel by Ken Follett.
******************************************************
You felt interested?

Do you want to read my books?
Lonely
What If Our Dreams Come True!

Look for them in www.pothi.com for print version
"What, If Our Dreams come True" is also available on www.amazon.com for kindle reading

My other works:
Short Stories for Young Readers - Book 1
Short Stories for Suceess for Young Readers - A New Lexicon Unfolded
Short Stories for Young Readers - For Personality Development - Book 1

Write to me for availability of my books: neelkant16@yahoo.com


Sunday, April 20, 2014

எனது இத்தாலி பயணம் - பகுதி 4 : ஃப்ளோரென்ஸ்

எனது இத்தாலி பயணம்பகுதி 4: ஃப்ளோரென்ஸ்

Baptistry, Florence


Bell Tower (Companile)
Duomo, Florence


Loggia dei lanzi
The Baptisry, The Cathedral and the Pisa Tower
           
      இரண்டரை மணி நேரப் பயணத்துக்குப் பின் மாலை சுமார் 6.45-க்கு எங்கள் ரயில் ஃப்ளோரென்ஸ் நகரத்தை சென்றடைந்தது. இங்கும் நாங்கள் தங்க வேண்டிய இடம் ரயில் நிலையத்துக்கு வெகு அருகாமையில் ஒரு ஐந்து நிமிடத்தில் நடந்துபோகும் தூரத்தில்தான் இருந்தது. ரயில் நிலையத்துக்கு எதிரேயே மேக் டோனால்டை (MC DONALD) பார்த்ததும் கொஞ்சம்  ஆறுதலாக இருந்தது. குறைந்த பட்சம் காஃபியும், ஃப்ரென்ச் ஃப்ரையும், காரசாரமான ஸாஸும் கிடைக்கும். ஆனால், அநியாயமாக ஸாசுக்குத் தனியாக பணம் வாங்குகிறார்கள். யூரோப்பை சுற்றி பார்த்தபின்பு தான் அமெரிக்கா எவ்வளவு ‘சீப்’ என்பது புரியும். அமெரிக்காவில் எங்களுக்குத் தெரிந்து பல பொருட்களின் விலை பல ஆண்டுகளாக அப்படியே ஆணி அடித்த மாதிரி ஏறாமல் இருக்கிறது. பெட்ரோல் விலை மட்டும்தான் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது.

ஃப்ளோரென்ஸில் எங்களுக்கு BED AND BREAKFAST  என்று பரவலாக அழைக்கப்படும் ஒரு தங்கும் விடுதியில் ஏற்பாடு. இது ஹோட்டல் போல் கிடையாது. பெரிய ஒரு கேட்டின் உள்ளே ஒரு கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஒரு வீட்டை இப்படி தங்கும் விடுதியாக மாற்றியிருக்கிறார்கள். விடுதியின் உரிமையாளர் எங்களுக்காகக் காத்திருந்தார். ரோம், நேப்பிள்ஸ் நகரங்களில் நாங்கள் ஹோட்டல்களில் முன்பதிவு செய்தவுடனேயே எங்கள் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டுவிட்டார்கள். ஃப்ளோரென்ஸில் அப்படிச் செய்யாமல் நாங்கள் வருவதற்காக காத்திருந்தார். என்னுடைய கார்டுதான் பறிபோய் விட்டதே! என்ன செய்வது என்று முழித்துக்கொண்டு விடுதிக்குள் நுழைந்தபோது, சரியான நேரத்தில் என் மகளிடமிருந்து ஃபோன். வேறொரு கிரெடிட் கார்ட் நம்பரைக் கொடுத்து எங்களை தர்ம சங்கடத்திலிருந்து காப்பாற்றினாள். அமெரிக்காவில் கூட பல ஹோட்டல்களில் முன் பதிவு செய்யும்பொழுது இது மாதிரி  கிரெடிட் கார்ட் நம்பரை மட்டும் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். நாம் செக்-இன் செய்யும் பொழுதுதான் பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள். எல்லாம் பரஸ்பர நம்பிக்கையில்தான் ஓடுகிறது.

இரண்டாவது மாடியிலிருந்த அந்த விடுதியில் நான்கு அறைகள் விருந்தாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உரிமையாளரும் அங்கே வேலை பார்க்கும் ஒரு பங்களாதேஷியும் ரொம்ப நல்ல மாதிரி. விருந்தோம்பலை அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.. இத்தாலியில் பல இடங்களில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள். சிறிய வியாபாரத்திலும் இருக்கிறார்கள். (லண்டனில் கூட பல இந்திய ரெஸ்டாரெண்டுகள் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்களாலேயே நடத்தப்படுகிறது.) இங்கும் எங்களுக்கு WI-FI அறையில் இலவசமாக கிடைத்தது. அதனால் இன்டெர்னெட்டில், தமிழ் நாடு, இந்தியா தேர்தல் செய்திகள், ஈ.மெயில் எல்லாம் பார்க்க முடிந்தது.

இரவில் விடுதியின் மிக அருகாமையிலேயே உள்ள ஒரு ரிஸ்டோரெண்ட்டில், அதிசயமாக, நம்மூர் சரவணபவன் ரசம் போன்ற அரிசிச் சோறு கலந்த ஒரு சூப் கிடைத்தது. ருசித்து சாப்பிட்டோம். ஆனால், அங்கேயே அமர்ந்து சாப்பிடுவதற்கு 5 யூரோக்கள் தனியாக பில்லில் சேர்த்துவிட்டார்கள். இது எங்களுக்கு முதலில் தெரியாது.

அன்று இரவும் சீக்கிரமேயே படுத்துத் தூங்கிவிட்டோம்.

நாள்: 5

ரோம் மற்றும் நேப்பிள்ஸ் நகரத்தில் HOP ON பஸ்ஸில் எங்களுக்கு கிடைத்த எதிர்மறையான அனுபவத்தினால், ஃப்ளோரென்ஸ் நகரத்தை கால் நடையாகவே சுற்றிப் பார்க்கத் தீர்மானித்திருந்தோம். காலையில் சற்றுக் குளிர் இருந்தது. போகப்போக வெயில் ஏறி இதமாக இருந்தது.

ஃப்ளோரென்ஸ் நகரை இத்தாலியில் ஃப்ரென்ஸி என்று அழைக்கிறார்கள். உயர்ந்த பண்டைய நாகரீகம், பண்பாடு, கலை, சரித்திரம் மற்றும் அழகாகத் தோற்றமளிக்கும் LANDSCAPE, இவற்றுக்கெல்லாம் பெயர் பெற்ற டொஸ்கானா (TUSCANY) என்ற இத்தாலியின் மையப்பகுதியைச் சேர்ந்தது. கி.பி 15 முதல் 17-ஆம்  நூற்றாண்டுகளில் எழுந்த இத்தாலியின் மறுமலர்ச்சி (ITALIAN RENAISSANCE) இந்த டொஸ்கானா பகுதிகளில்தான் உதயமானது. கி.பி 19—ஆம் நூற்றாண்டில் இத்தாலி சாம்ராஜ்யத்தின் தலை நகரமாக ஃப்ளோரென்ஸ் செயல்பட்டிருக்கிறது. மறுமலர்ச்சி காலத்தின் கலைகளின் அடையாளச் சின்னங்கள், (முக்கியமாக கட்டிடக் கலை) அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் (முக்கியமாக பிட்டி அரண்மனை, - PITTI PALACE, யுஃபிஸ்ஸி கேலரி – UFFIZI GALARY) அங்கங்கே சிதறிக் கிடக்கின்ற இந்த ஊருக்கு மிக அதிகமாக சுற்று பயணிகள் உலகம் முழுவதுமிலிருந்து வருகிறார்கள். யுனெஸ்கோவினால் (UNESCO) இங்குள்ள பல கட்டிடங்கள் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஃப்ளோரென்ஸுக்கு அருகிலேயே உலகப் புகழ் பெற்ற பிஸ்ஸாவின் சாய்ந்த கோபுரம் வேறு.

ஃபிலிப்போ ப்ரூனல்லச்ஷி (FILIPPO BRUNELLESCHI) என்ற பிரபல கட்டிடக் கலை நிபுணரால் கட்டி முடிக்கப்பட்ட, அரைக் கோள வடிவத்தில் கூரை அமைந்துள்ள, டூமோ (DUOMO) என்றழைக்கப்படும் பிரம்மாண்டமான ஸாண்டா மேரியா டெல் ஃபளோரா (SANTA MARIA DEL FLORE) கேதிட்ரல் இதில் மிகவும் முக்கியமானது. 1296-ல் கட்டத் தொடங்கப்பட்ட இந்த கட்டிடம் 140 ஆண்டுகளுக்குப் பிறகு 1436-ல் கட்டி முடிக்கப்பட்டது. எல்லாம் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டது. கேதிட்ரலின் உட்சுவர்களிலும், கூரையிலும் பல நூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டுவரும் ஓவியங்கள். சரித்திர காலங்களை கண்ணெதிரே கொண்டு வருகிற சிற்பங்கள். எதிரே ஃப்ளோரென்ஸ் பாப்டிஸ்ட்ரி (FLORENCE BAPTISTRY). அருகில் கியோட்டோ (GIOTTO) என்பவரால் கட்டப்பட்ட கம்பெனைலெ (COMPANILE) என்றழைக்கப்படும் 278 அடி உயரமுள்ள மணிக்கூண்டு. மிக அருகில் பிளாஸோ வெஜ்ஜியோ (PALAZZO VECCHIO) என்கிற  நகர்மன்ற கட்டிடத்தின் எதிரே பியாஸா டெல்லா சினோரியா (PIAZZA DELLA SIGNORIA) என்கிற நகர்கூடம். இடது பக்கத்தில் பல ஆர்ச்சுகளைக் கொண்ட லோகியா டெ லேன்ஸி (LOGGIA DEI LANZI) என்கிற இன்னொரு திறந்தவெளி கலைக்கூடம். பிளாஸோ வெஜ்ஜியோ-விற்கு முன்னே உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஏஞ்செலோ என்ற சிற்பி செதுக்கிய ‘டேவிட்’ சிலையின் நகல். இதன் ஒரிஜினல் பாதுகாப்பாக அருங்காட்சியகத்தில் இருக்கிறது. விசேஷ பார்வையாளர்கள் மட்டுமே ஒரிஜினலைப் பார்க்கமுடியும். இன்னொரு புறத்தில் உஃபிஸ்ஸி கலைக்கூடம். அன்று  ஞாயிற்றுக் கிழமை என்பதால் உள்ளே போவதற்கு பெரிய க்யூ நின்று கொண்டிருந்தது. எங்களால் போக முடியவில்லை. அடுத்த நாள் திங்கட்கிழமை கலைக்கூடத்துக்கு ஓய்வு.













ஆர்னோ நதி பழைய ஃப்ளோரென்ஸ் நகரத்தை பிளந்துகொண்டு செல்கிறது. குறுக்கே போன்டே விஜ்ஜியோ (PONTE VECCHIO) – அதாவது பழைய பாலம் என்று அர்த்தம் கொண்ட மிகப் பழமையான ஒரு பாலம் பாலத்தின் ஓரம் முழுவதும் கடைகள் – பெரும்பாலும் நகைக்கடைகள். பாலத்தின் மேலே புகழ்பெற்ற வாசரியின் (VASARI) கூரைவேயப்பட்ட ஒரு நடைபாதை. பார்ப்பவர்களுக்கு அப்படி ஒரு நடைபாதை இருப்பதாகத் தெரியாது. இந்த நடைபாதை உஃப்பிஸி கலைக்கூடத்தையும் பிட்டி அரண்மனையையும் இணைக்கிறது. இந்த பழைய பாலம் கி.மு 4 – 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும், பின்னர் இடிக்கப்பட்டு தற்போது இருக்கும் பாலம் 14-ஆம் நூற்றாண்டில் புதியதாகக் கட்டப்பட்டது என்று அறிகிறேன். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் குண்டு வீச்சுகளிலிருந்து தப்பித்த ஒரு சில கட்டமைப்புகளில் இதுவும் ஒன்று. பிட்டி அரண்மனையையொட்டி பசுமையான போபோலி தோட்டம் (BOBOLI GARDEN). நிறைய நடக்கவேண்டியிருக்கும் என்பதால் நாங்கள் உள்ளே போகவில்லை




என்னை இத்தாலிக்கு சுண்டியிழுத்தது INFERNO என்கிற புத்தகத்தில் எழுததப்பட்டிருந்த இந்த புராதனக் கட்டிடங்கள்தான்..

        மிக அழகான குறுகிய கடைத்தெருக்கள், குதிரை வண்டி சவாரி, மதுரை புதுமண்டபம் போலத் தோற்றமளிக்கும் ரிபப்ளிகள் சதுரத்தின் (REPUBLICAN SQUARE) கல் மண்டப கடைகள். திரும்பிய இடங்களிலெல்லாம் சிறிய, பெரிய ரெஸ்டாரண்டுகள், ஐஸ்கிரீம் கடைகள், கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகள். இப்படி எவ்வளவோ ஃப்ளோரென்ஸில்.




        மாலை நேரத்தில் ஆர்னோ நதிக்கரையில் வெகு தூரம் நடந்தோம். பலர்  நடந்தும், சைக்கிளிலும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். இரண்டு கரைகளிலும் பழமையும் புதுமையும் கலந்த கட்டிடங்கள்.

        ஃப்ளோரென்ஸின் அழகில் மயங்கி, நேப்பிள்சில் எங்கள் பர்ஸ் பிக்பாக்கெட் செய்யப்பட்டதைக்கூட முழுவதுமாக மறந்துவிட்டோம்.

நாள் 6

               உலகப் புகழ் பெற்ற பீஸ்ஸாவின் சாயும் கோபுரம் (LEANING TOWER OF PISA) பார்க்கப் போவதாக இன்று திட்டம். காலை 8.05-க்கு ரயில் டிக்கெட் புக் செய்திருந்தோம். சென்னை புறநகர் பயணம் மாதிரி. ஒன்றரை மணி நேரப் பயணம். ஊருக்குப் புதுசு என்று எங்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஃப்ளோரென்ஸ் ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி எங்கள் டிக்கெட்டை மிஷினில் பதிவுசெய்து கொடுத்து, பின்பு இன்னொரு மிஷினில் VALIDATE  பண்ணியும் கொடுத்து உதவினாள். எங்கள் ரயில் பெட்டிவரை கூட வந்து காட்டிக்கொடுத்தாள். ‘ஆஹா, இத்தாலியில் இவ்வளவு உதவி செய்யும் மனிதர்களா!” என்று ஆச்சரியப்பட்டோம். எல்லாம் முடிந்த பிறகு எங்களிடம் இரண்டு யூரோ பண உதவி கேட்டாள். இதை ஒரு தொழிலாக தினமும் செய்துகொண்டிருக்கிறாள் போல. ஏனென்றால், மறு நாளும் இந்தப் பெண்மணியை ரயில் நிலையத்தில் சந்தித்தோம். தெரிந்துகொண்டதாக கை காட்டிச் சென்றாள்.

        பீஸ்ஸா ரயில் நிலையத்தில் நுழைவிலிருந்த ஒரு நியூஸ் பேப்பர் கடையில் இரண்டு பஸ் டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டோம். லேம் ரோஸா (LAM ROSSA) என்கிற சிவப்பு நிற பஸ்ஸில் ஏறவேண்டும் என்பதையெல்லாம் ஏற்கெனவே இன்டெர்னெட்டில் பார்த்து வைத்துக்கொண்டாலும், மற்ற சில பயணிகளுடன் இதை உறுதி செய்துகொண்டு, சாயும் கோபுரம் அருகேயுள்ள ஒரு பஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். சாயும் கோபுரம் வளாகத்தின் முன்னே பல கூடாரங்கள். எல்லாம் சுற்றுலாப் பயணிகளுக்காக கடைகள். இத்தாலியில் பெரும்பாலான வீதியோரக்கடைகளில் நன்றாகவே பேரம் பேசலாம். பேச வேண்டும். இல்லையென்றால் நல்ல விலையில் பொருட்களை தலையில் கட்டி விடுவார்கள்.

        வளாகத்தின் உள்ளே பிரம்மாண்டமான பாப்டிஸ்ட்ரி (BAPTISTRY), கேதிட்ரல், மற்றும் அதன் பின் புறத்தில் பீஸ்ஸா சாயும் கோபுரம். கி.பி 1173-ல் ஆரம்பித்து மூன்று கட்டமாக இந்தக் கோபுரத்தை கட்டி முடிக்க சுமார் 200 ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. இது கட்டப்பட்ட இடத்தின் இளகிய மண்ணின் தரத்தினாலும், சரியான அஸ்திவாரம் இல்லாததினாலும் தன் எடையைத் தாங்க முடியாமல் ஆரம்பத்திலிருந்தே இந்தக் கோபுரம் தொடர்ந்து சரியத் தொடங்கியிருக்கிறது. 1990-க்கும் 2001-க்கும் இடையே மேற்கொண்ட புதுப்பிக்கும் வேலையினால், 5.5 டிக்ரியாக சரிந்திருந்த இந்த கோபுரம் இப்பொழுது 3.99 டிக்ரியாக சரிவில்  நிறுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோபுரத்தின் உயரம் 183 அடி. 294 படிக்கட்டுகள். கோபுரத்தின் மேலே ஏறுவதற்கு டிக்கெட். பாப்டிஸ்ட்ரி உள்ளே போவதற்கும் டிக்கெட். குறுகிய படிக்கட்டுகள் வழியாக எங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் மேலே ஏறிச்சென்றோம். ஏறும்பொழுது ஒரு பக்கமாக கோபுரம் சரிந்து நிற்பதை உணர முடிந்தது. மேலே ஏறியபின் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது. இதைவிட உயரமான சில கோபுரங்களையும், மலையுச்சிகளையும் ஏறிப் பார்த்திருக்கிறோம். ஏன், தென்காசி அருகிலுள்ள திருமலைக்கோவில் அல்லது தோரணமலை முருகனைக் காணக்கூட குறைந்தது 500 படிகள் ஏறவேண்டும். அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரத்துக்கருகே நைல்ஸ் என்கிற இடத்தில் இதே பீஸ்ஸா சாயும் கோபுரத்தைப் போல அதன் அரை அளவு உயரத்தில் ஒரு கோபுரத்தை 1934-ல் கட்டி முடித்திருக்கிறார்கள்.











        பீஸ்ஸா வளாகத்தில் ஒன்றிரண்டு மணி நேரத்துக்கு மேல் ஒன்றுமில்லை என்பதால், கொஞ்ச நேரம் கடைகளை சுற்றி பார்த்துவிட்டு இன்னொரு பஸ்ஸில் ரயில் நிலையம் வந்தடைந்தோம். மீண்டும் ரயில் டிக்கெட் ஃப்ளோரென்ஸ்ஸுக்கு வாங்கிக்கொண்டு, ப்ளாட்ஃபாரத்திலிருந்த ஒரு மிஷினில் VALIDATE செய்துகொண்டு ரயில் ஏறினோம். 15 – 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் ஃப்ளோரென்ஸ்க்கும் பீஸ்ஸாவுக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கிறது.

        மதிய நேரத்தில், எங்கள் அறைக்கு வந்து சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, மீண்டும் ஃப்ளோரென்ஸ் ஊரை சுற்றக் கிளம்பினோம். DUOMO முழுவதும் ஏறினோம். செங்குத்தான படிக்கட்டுகள். சுமார் 500 அடி உயரம். கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. மேலேயிருந்து நகரின் பல பகுதிகளின் கண்கொள்ளாக் காட்சி.

        அடுத்த நாள் காலை எட்டரை மணிக்கு எங்களுக்கு வெனிஸ் செல்வதற்கான ரயில் பயணம் இருந்தது.

        …… தொடரும்