Total Pageviews

Showing posts with label North Eastern States of India. Show all posts
Showing posts with label North Eastern States of India. Show all posts

Friday, January 15, 2016

பகுதி 4 – வடகிழக்கு மானிலங்கள் – மலரும் நினைவுகள்

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் பொதுவாக பதட்டமான ஒரு சூழ்னிலையே நிலவி வந்தது. நான் குவாஹாத்தி போய்ச் சேர்ந்த சில மாதங்களிலேயே பொதுத் தேர்தல்கள் நடந்தன. அதுவரை ஒரு புரட்சி இயக்கமாக செயல்பட்டு வந்த ‘ஆஸு’ (AASU என்ற மாணவர்களின் அமைப்பு தீவிரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் கைவிட்டுவிட்டு பொதுத் தேர்தல்களில் ‘ஏ.ஜீ.பி’(AGP) என்ற அரசியல் கட்சியாக ஈடுபட்டது. அதுவரை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அவ்வளவு கோபம். ஏ.ஜீ.பி அசுர மெஜாரிட்டியுடன் பதவிக்கு வந்தது. ப்ரஃபுல்ல குமார் மொஹாந்தோ மிக இள வயதில் முதலமைச்சராக பதவியேற்றார். சட்டசபை முழுவதுமே இளைஞர்கள். நேற்றைய மாணவர்கள் இன்றைய அரசர்கள். மக்களின் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக இருந்தது.

வங்கியின் பயிற்சிப் பள்ளி

எங்கள் வங்கியின் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் வங்கிப்பணியில் பயிற்சி கொடுக்க ஒரு வங்கிப் பயிற்சி பள்ளி திறக்கவேண்டியிருந்தது. அதுவரை அலுவலர்களை பயிற்சிக்கு கொல்கத்தாவுக்கே அனுப்ப வேண்டியிருந்தது. அதிக நாட்கள் பயணத்திலேயே வீணாகிப்போய்விடும். போக வர பயணச் செலவும், தங்குவதற்கானச் செலவும் அதிகம். எங்களிடமோ அலுவலர்களும் அதிகாரிகளும் கணக்காகவே இருந்தனர். பயிற்சிக்கு அனுப்பப்பட்ட நாட்களில் கிளைகளில் வேலையும் மந்தமாகிவிடும். அதனால் பயிற்சிக்கு அனுப்புவதற்கே கிளை மேலாளர்கள் தயங்கினர். அதனால் குவாஹாத்தியிலேயே ஒரு பயிற்சிப் பள்ளி திறப்பது மிகவும் இன்றியமையாததாக இருந்தது.

பயிற்ச்சிப் பள்ளி தொடங்குவதற்கு இடத்தைத் தேடினோம். குவாஹாத்தியில் ஜூ ரோடில் சரியான இடம் கிடைத்தது. அந்த இடத்தின் சொந்தக்காரர் சட்டசபை அலுவலகத்தில் செயலராக பணி புரிந்து வந்தார். 

திடீரென்று ஒரு யோசனை. பயிற்ச்சிப் பள்ளியை திறப்பதற்கு முதலமைச்சரை அழைத்தாலென்ன என்று.

ஆனால் முதலமைச்சரை எப்படி சந்திப்பது? அவரோ புதியவர். மிகவும் பிஸியாக இருப்பவர். காலை வேளையில் சென்றால் முதலமைச்சரை எளிதாக சந்திக்கலாம் என்று எங்கள் பயிற்சிப் பள்ளியின் இடத்துக்கு சொந்தக்காரர் கூறினார்.

எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல் போனோம். முதலமைச்சரின் வீட்டில் நுழைந்தோம். ஒரு செயலர் எங்களை உள்ளே அழைத்துச் சென்று அமர்த்தினார். ஒரு சில நிமிடங்களில் ப்ரஃபுல்ல குமார் மொஹந்தோ வரவேற்பரைக்குள் வந்தார். மிக எளிமையான, இளமையான தோற்றம். அவருடைய குறுந்தாடி மிகப் பிரபலம். அறிமுகப்படுத்திக்கொண்டு வந்த நோக்கத்தை எடுத்துக்கூறினேன். தன் செயலரிடம் எங்கள் முன்னரே கலந்தாலோசித்தார். உடனேயே தேதியையும் நேரத்தையும் கொடுத்தார். சட்டசபை சபாநாயகர் புலகேஷ் பருவா என்பவரையும் நாங்கள் அழைக்க இருப்பதாகக் கூறினோம். மிக்க மகிழ்ச்சி என்றார். அவர்கள் இருவரும் அப்பொழுது நல்ல நண்பர்களாக இருந்தனர். பின்னால், சட்டசபை சபாநாயகர் புலகேஷ் பருவாவையும் திறப்பு விழாவுக்கு தலைமை தாங்குவதற்கு அழைத்தோம். உடனேயே ஒப்புக்கொண்டார்.

எல்லா இடங்களிலும் நடப்பது போல், எங்கள் பள்ளிக்கு முதலமைச்சர் வருவதற்கு முதல் நாள் அவசர அவசரமாக தார்ச் சாலை போட்டனர். வெற்றிகரமாக எங்கள் வங்கியின் பயிற்ச்சிப் பள்ளி அசாமில் திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு வங்கியின் மேலதிகாரிகளும் வந்திருந்தனர். வடகிழக்கு மானிலங்களில் பலம் பொருந்திய வங்கிகளாக இருந்த பாரத ஸ்டேட் வங்கி, யுனைடெட் வங்கி, யூ கோ வங்கிக்கு அடுத்த படியாக அசாமில் காலூன்றிய மற்ற வங்கிகளில் முதலாவதாக எங்களது வங்கியின் பயிற்சிப் பள்ளி அமைந்தது. அசாம் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும், கிராமப்புற மக்களுக்கு விவசாயத்துக்கும் சிறு தொழிலுக்கும் அதிக கடன் வசதி கொடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் வலியுறித்தினார். அசாமில் பொதுவாக எல்லா இடங்களிலும் வங்காளிகளின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள்தான் அதிகம் படித்தவர்களாக இருந்தனர். தேயிலைத் தோட்டங்களில் கூட ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான தோட்டங்கள் வங்காளத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த மார்வாரி சமூகத்தினருக்கே சொந்தமாக இருந்தது. ப்ளைவுட் தொழிற்சாலைகளும் அப்படியே. அரசாங்க உத்யோகத்தில் பெரும்பாலும் வங்காளிகள்தான். வியாபாரம் வங்காளிகளின் கையிலும் மார்வாரி சமூகத்தினர் கையிலும்தான் இருந்தது. கூலி வேலை செய்தவர்கள் பெரும்பாலும் பீஹாரிகள். அசாமியர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும் ஏழைகளாகவும் இருந்தனர். அதனால் வங்காளிகளுக்கும் அசாமியர்களுக்கும் கடும் பனிப்போர் நிலவி வந்தது. தங்களது வாழ்வாதாரத்தை வங்காளிகள் பறித்துக்கொண்டு விட்டனர் என்றே பெரும்பாலான அசாமியர்கள் நம்பி வந்தனர்.

அதிர்ச்சி தந்த இன்னொரு நாள்

ஒரு நாள் காலை பத்தரை மணியிருக்கும் என்று நினைக்கிறேன். எனது அலுவலகம் குவாஹாத்தியில் பிரதான சாலையான ஜீ.என்.போர்டலாய் சாலையில் முதல் மாடியில் அமைந்திருந்தது. அதுதான் குவாஹாத்தியின் மௌண்ட் ரோடு. நாங்கள் எங்கள் அலுவலகத்தில் எங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். சாலையில் மிதமான வாகனப் போக்குவரத்துதான் இருந்தது. அதனால் வாகனங்களின் சத்தம் அதிகமாக இல்லாமலிருந்தது.  

திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது போலிருந்தது. ஏதோ வாகனத்தின் டயர்தான் வெடித்துவிட்டது என்று நினைத்து நாங்கள் அதிகமாக அந்த சத்தத்தைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து பல வாகனங்கள் வேக வேகமான ‘சர், சர்’ என்ற சத்தத்துடன் போய்க்கொண்டிருந்தன. இன்னும் சற்று நேரத்தில் பல போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்சுகளின் இரைச்சல் எங்கள் அலுவலகம் முன்னே. என்னவோ ஏதோ என்று பதற்றத்தில் எங்கள் அலுவலகத்திலிருந்த பால்கனிக்கு விரைந்தோம்.

எங்கள் அலுவலகத்துக்கு நேரெதிரே யூ கோ வங்கியின் கிளை இருந்தது. அந்த வங்கியின் மேலாளரை ஒரு கொள்ளைக்காரக் கும்பல் சுட்டுத் தள்ளி வங்கியின் இரும்புப்பெட்டியிலிருந்து கணிசமான பணத்தையும் கொள்ளையடித்து நிமிடத்தில் ஓடிவிட்டனர்.  எல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்திருக்கிறது. வங்கியின் பல வாடிக்கையாளர்களும் மற்ற அலுவலர்களும் ஒன்றும் செய்யமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றனர்.

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. பட்டப்பகலில் இப்படி ஒரு துணிச்சலான கொள்ளை. கொள்ளைக்காரர்கள் உள்ளே நுழைந்து மேலாளரிடம் துப்பாக்கியைக் காட்டியிருக்கிறார்கள். மேலாளர் அசையாமல் இருந்திருந்தால் அவரை கொள்ளைக்காரர்கள் விட்டுவைத்திருப்பார்களோ என்னவோ. அவர் பாதுகாப்பு எச்சரிக்கை மணியை அழுத்த முயற்சி செய்திருக்கிறார். சுட்டுவிட்டார்கள். வேறு யாருக்கும் பாதகம் ஏற்படவில்லை. சில லட்சம் ரூபாய் வங்கிக்கு நஷ்டம். மிகவும் சங்கடமாக இருந்தது. அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் வங்கிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக உயர் மட்ட கூட்டம் நடந்தது. வங்கிகளுக்கு பல கடுமையான உத்திரவுகளை காவல் துறையினர் பிறப்பித்தனர். 

அவற்றையெல்லாம் அமல்படுத்த நடைமுறையில் பல சிரமங்கள் இருந்தன.

இருந்தும்…

ஒரு சில மாதங்களிலேயே யுனைடெட் வங்கியின் முக்கிய கிளையில் இன்னொரு பட்டப்பகல் கொள்ளை. வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்வதற்காக பணத்தை வங்கியின் பாதுகாப்பு வண்டியில் ஏற்றிகொண்டிருந்தனர். துப்பாக்கியேந்திய வீரர் மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். திடீரென்று ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். ஒரு சில நிமிடங்களில் வண்டியில் ஏற்றப்பட்ட பல கோடி ரூபாய்கள் அடங்கிய பணப்பெட்டியுடன் கொள்ளையர்கள் மறைந்து விட்டனர். இரண்டு மூன்று நாட்கள் சல்லடை போட்டு அரித்ததில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். தொலைந்த பணத்தில் ஒரு பகுதி மீட்கப்பட்டது.

வங்கிகளை குறி வைத்து இப்படி அடிக்கடி கொள்ளைகள் அங்கங்கே நடந்து வந்தன. எவ்வளவோ முயன்றும் எல்லா வங்கிகளிலுமே பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாகக் குறைவாகவே இருந்தன. நிர்வாகிகளை அலுவலர்கள் குறை கூறினர். பாதுகாப்பு உணர்ச்சியில்லாமல் செயல்படுவதாக அலுவலர்களை நிர்வாகிகள் குறை கூறினர்.


பொதுவாக வடகிழக்கு மானிலங்கள் எல்லாவற்றிலுமே இதே கதைதான். 

                                                       .... இன்னும் முடியவில்லை

Saturday, December 26, 2015

மலரும் நினைவுகள் - இந்தியாவின் வடகிழக்கு மானிலங்களைப் பற்றி

முன்னுரை:

பல இடங்களுக்கு மாற்றல்கள் கொடுக்கக்கூடிய பொதுத்துறை வங்கியின் ஒரு மேலதிகாரி பதவியை வகித்த காரணத்தால் இந்தியாவில் பல இடங்களில் வேலை பார்க்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்னிலை எனக்குக் கிடைத்தது. புதுப் புது இடங்கள். புதுப் புது மக்கள். புதுப் புது சூழ்னிலைகள். புதுப் புது சவால்கள், புதுப் புது அனுபவங்கள். அவற்றில் சிலவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்தது.  நினைவில் நின்றவை சில. நினைவுக்குக் கொண்டுவந்தவை சில. மறந்ததும் சில. ஆரம்பித்து வைக்கிறேன். தொடர்வேனா, முடிப்பேனா தெரியாது. நடக்க  நடக்க நாராயணன் செயல். பார்க்கலாம்.

முதலில் நான் தேர்ந்தெடுத்திருப்பது இந்தியாவின் வடகிழக்கு மானிலங்களைப் பற்றியது….

வட கிழக்கு மானிலங்கள்

1985-87-களில் வடகிழக்கு மானிலங்களில் அசாமின் தலைநகரமான குவாஹாத்தியை அலுவலகமாகக் கொண்டு இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறேன். புதிய தலை நகரமான டிஸ்பூர் அப்பொழுதுதான் உருவாகிக்கொண்டிருந்தது.

இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் ஏழு மானிலங்கள் – அசாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோராம். மிக அதிக அளவில் நீர், நில, கனிம, மனித வளங்களைக்கொண்ட இந்த மானிலங்கள்தான் பொதுவாக எல்லையோரப் பகுதிகளில் பதட்டமானதும் மிகவும் பின் தங்கிய மானிலங்களுமாகும். இந்திய நாட்டுக்கு வடகிழக்கு எல்லையில் அரணாக விளங்கும் இந்த மானிலங்களில் தான் எல்லையோர பாதுகாப்புக்காக இந்திய அரசாங்கம் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து வருகிறது. அதே சமயம் பாதுகாப்புக்காக செலவிடும் பணத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே இந்த மானிலங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசாங்கம் செலவிடுகிறது என்ற குற்றச்சாட்டும் இன்றும் தொடர்ந்து வருகிறது.

நீர்வளம்

ப்ரம்மபுத்ரா இங்குள்ள மிகப் பெரிய ஆறு. இமயமலையின் திபெத் பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த நதி இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்தில் புகுந்து அசாம் வழியாக பங்களாதேஷ் நாட்டுக்குள் ஓடி கடலில் கலக்கிறது. எந்த கட்டுப்பாடுமில்லாமல் தன் இஷ்டப்படி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சில இடங்கள் தவிர பொதுவாக ஆழமில்லாத பரந்து ஓடும் ஆறு. பல இடங்களில் இந்த ஆற்றின் ஓட்டம் பல முறை மாறியிருக்கிறது.

கல்கத்தாவிலிருந்து குவாஹாத்தி வழியாக திப்ருகர் நகரம் வரை தாவித் தாவிச் செல்லும் இந்தியன் ஏர்லயின்ஸ் விமான சர்வீஸ் இருந்தது. இந்தியாவின் பிற இடங்களிலிருந்து அசாம் சென்றடைய ப்ரம்மபுத்ராவின் குறுக்கே 1962-ல் கட்டப்பட்ட ஒரே ஒரு பாலம்தான் இருந்தது. சராய்கட் பகுதியில் இந்தப் பாலம் அசாமில் பொங்கைகான் என்ற இடத்தை குவாஹாத்தியுடன் இணைக்கிறது. இந்தப் பாலத்தில் மேலும் கீழுமாக இரண்டு அடுக்குகள். ஒன்றில் மோட்டார் வாகனங்களும், இன்னொன்றில் ரயிலும் போக முடியும். கல்கத்தாவிலிருந்து குவாஹாத்திக்கு விமானத்தில் செல்லும்பொழுதெல்லாம் இந்தப் பிரம்மாண்ட பாலத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். பிந்தைய காலங்களில் இன்னும் இரண்டு பாலங்களைக் கட்டி முடித்திருக்கிறார்கள். மூன்றாவது பாலத்தின் வேலை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. கல்கத்தாவிலிருந்து காம்ரூப் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினால் குறைந்தது 24 மணி நேரம் பயணம். சரியான நேரத்துக்குப் போய் சேர்ந்ததாக சரித்திரமே கிடையாது.

குவாஹாத்தியிலிருந்து விமானம் மூலமாக ப்ரம்மபுத்ராவைக் கடந்து தேஜ்பூர். மீண்டும் ப்ரம்மபுத்ராவைக் கடந்து ஜோர்ஹாட். மீண்டும் ப்ரம்மபுத்ராவைக் கடந்து வடக்கு லக்கிம்பூர். மீண்டும் ப்ரம்மபுத்ராவைக் கடந்து திப்ரூகர். அங்கிருந்து சில விமானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் ஜீரோ. பல முறை பறந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ப்ரம்மபுத்ராவைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

ப்ரம்மபுத்ரா ஆற்றின் கரையோரமாக பல நேரங்களில் காரை ஓட்டிக்கொண்டு திப்ரூகர் சென்றிருக்கிறேன். அருணாச்சல பிரதேசத்தில் இந்த ஆற்றின் முகத்துவாரம் ஒன்றில் ஒரு பெரிய அணை ப்ரம்மபுத்ரா போர்ட் என்ற மத்திய அரசாங்க நிறுவனத்தால் கட்டுவதாக இருந்தது. இடத்தின் பெயர் மறந்து விட்டது. நான் பணி புரிந்த வங்கிக்கு அங்கே கிளை திறப்பதற்கான அனுமதி ரிசர்வ் வங்கியிடம் பெறப்பட்டிருந்தது. அணை கட்டப்பட இருக்கும் இடத்தைப் போய் பார்த்திருக்கிறேன். அத்வானக்காடு. அங்கங்கே ஆதிவாசிகளின் குடிசைகள். ஆனால் இங்கே அணை கட்டுவதற்கு அன்றைய முதலமைச்சராக இருந்த அபாங்க் எதிர்ப்புத் தெரிவித்ததால் திட்டம் இழுத்துக்கொண்டிருந்தது. அங்கே வசித்து வரும் சுமார் 50000 ஆதிவாசிகளை இடம்பெயர வைக்க முடியாதென்று காரணம் காட்டப்பட்டது. அந்த திட்டத்தையே நாளடைவில் கைவிட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். விளைவு, தொடர்ந்து ஆண்டு தோறும் ப்ரம்மபுத்ராவில் வெள்ளம். கோடிக்கணக்கில் வெள்ள நிவாரணத்துக்கு செலவிடப்பட்டு வருகிறது. ஆனால் சீனா தன் பகுதியில் பிரம்மாண்டமான அணையைக் கட்டத் துவங்கியிருக்கிறது.

பல இடங்களில் ஆங்காங்கே வயல் பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் நிற்கும். எல்லாம் பிரம்மபுத்திராவிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் தான். தண்ணிருக்கு நடுவே நெற்பயிரும் உயர்ந்து நிற்கும்.  நெல் விதைத்தால் போதும். தானாகவே வளரும். வேறு எதுவும் செய்யவேண்டாம். தேங்கி நிற்கும் தண்ணீரில் வேண்டிய அளவு மீன்கள் வளர்கின்றன. மீன் பிடிக்கும் தூண்டிலை தண்ணீரில் போட்டால் போதும். வேண்டிய அளவு மீன் பிடித்துக்கொள்ளலாம். சாப்பாட்டுக்கு அரிசியும், பருப்பும் மீனும்தான். மக்கள் அதிகமாக உழைக்காமலேயே உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு கிடைக்கிறது. பொதுவாக மக்கள் எதற்கும் அவசரப்பட வேண்டியதில்லை. ‘லஹே, லஹே’ (மெதுவா, மெதுவா) இங்கே அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. மக்களுக்கு சுறுசுறுப்பு குறைவு என்று நாம் கருதினால் அதற்கு சரியான காரணம் இருக்கிறது.

மேலும், வடகிழக்கு மானிலங்கள் பொதுவாக மழை அதிகமாக பெய்யும் பகுதியும் கூட.  பல இடங்கள் மேடும் பள்ளமுமாக இருக்கும், நமது கேரளாவைப் போல. மழை அதிகமாக பெய்வதால் மரங்களுக்கும், செடி கொடிகளுக்கும் பஞ்சமேயில்லை. எங்கு பார்த்தாலும் மனித முயற்சியையும் மீறி மரக்காடுகள்தான். மரங்களை வெட்டி ப்ளைவுட்டாக மாற்றும் தொழிற்சாலைகள் அனேகம். அசாமிலிருந்துதான் ப்ளைவுட் இந்தியாவின் பல பகுதிகளுக்குச் செல்கின்றன. இந்த ப்ளைவுட் வியாபாரத்திலும் பல கோல்மால்கள். ஏ, பீ, சீ தரத்துக்கேற்ற எக்சைஸ் வரிகள். தரத்தை குறைத்து மதிப்பிட்டு அரசாங்கத்தை பல தொழிற்சாலைகள் ஏமாற்றுவதாக பேச்சு இருந்தது.

மரத்துக்கு அடுத்ததாக அங்கு அதிகமாக விளையும் பயிர் தேயிலை. உலகிலேயே மிக அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் பிரதேசம் அசாம்தான். தேயிலையைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மிக அதிகமாக ஆங்காங்கே இருக்கின்றன. வங்காளத்தில் டார்ஜிலிங்கில் பச்சைத் தேயிலை கிடைக்கிறது. ஆனால், வட கிழக்கு மானிலங்களில் விளையும் தேயிலையை பதப்படுத்தி சி.டி.சி தேயிலையாக விற்கின்றனர். குவாஹாத்தியில் தேயிலைக்கு பெரிய சந்தை இருக்கிறது. வாரம் தோறும் ஏலம் நடக்கும். உலக அளவில் வியாபாரிகள் பங்கேற்பர். பொதுவாக அக்டோபர் நவம்பரில் தொடங்கி, மார்ச்சில் முதல் அறுவடையும் தொடர்ந்து ஜூன்/ஜூலை வரை இரண்டாவது அறுவடையும் நடக்கும். பின் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒன்றும் இருக்காது. அந்தப் பருவத்தில் தேயிலைச் செடிகளின் வேண்டாத பகுதிகளை வெட்டி சுத்தம் செய்து அடுத்த பருவத்துக்கு காத்திருப்பார்கள்.

மரத்திலும் சரி, தேயிலையிலும் சரி பல நலிந்த தொழிற்சாலைகளும் மிக அதிகமாக காணப்பட்டன.

ஆரஞ்சுப் பழம், தேங்காய், பலாப்பழம், இஞ்சி, அன்னாசிப் பழம், எலுமிச்சைப் புல், சிட்ரனலா புல் போன்ற நறுமண மூலிகைகள் மற்றும் பல விவசாயப்பொருட்களுக்கும் வடகிழக்கு மானிலங்கள் பெயர் பெற்றவை. ஆனால், விளைந்த பொருட்களை சேமித்து வைத்து, சரியான விலைக்கு விற்பனை செய்து உற்பத்தியாளரான விவசாயிக்கு சரியான லாபம் கிடைக்க ஏதுவான கிடங்குகள், குளிர்சாதன கிடங்குகள், மார்க்கெட்டுகள், விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் வசதி, தொலைதூரம் விவசாயப்பொருட்களை எடுத்துச்செல்லும் வாகன வசதி இவைகள் கம்மி. அதனால் இடைத்தரகர்களே அதிக லாபம் பார்த்தனர்.

பொதுவாக அசாமின் மேல் பகுதிகள் தேயிலைத் தோட்டங்களினாலும், மரத் தொழிற்சாலைகளினாலும் செழிப்பாக காணப்படுகின்றன. கீழ்ப் பகுதிகள் வெறும் விவசாயத்தை நம்பி இருப்பதால் மக்கள் அவ்வளவு செல்வ செழிப்போடு இருப்பதாகத் தெரியவில்லை.

வட கிழக்கு மானிலங்களில், முக்கியமாக அசாமில் நீர் வளத்தை சரியாகப் பேணிப் பாதுகாத்தால், ஓரளவு நவீன விவசாய முறைகளைப் பயன்படுத்தினால், மக்களுக்கு நவீன ஒருங்கிணைக்கப்பட்ட விவசாய முறைகளை சொல்லிக்கொடுத்தால், ப்ரம்மபுத்ராவின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டால்,   நதி நீர் வழி போக்குவரத்தை மேம்படுத்தினால், மேலும் சில முக்கிய இடங்களில் ப்ரம்மபுத்ராவின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டு அசாமுக்கும் மற்ற இந்திய பகுதிகளுக்குமிடையேயுள்ள தூரத்தை குறைத்தால்,….இப்படிச் சில கனவுகள் நிறைவேறினால், இந்தியா முழுவதற்கும் தேவையான பெரும்பாலான உணவுப் பொருட்களை வட கிழக்கு மானிலங்களிலேயே உற்பத்தி செய்து விடலாம் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் மற்ற பகுதிகளை தொழிற்சாலைகள் மயமாக்கிவிடலாம்.
                                                                                                                                                …தொடரும்


எனக்கு எதையையுமே மேலெழுந்தவாரியாக சுருக்கமாக எழுதத் தெரியவில்லை. உணர்ந்ததை உணர்ந்தபடியே எழுத வேண்டும் என்று ஆசை. தொடர்ந்து பொறுமையாகப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.