Total Pageviews

Tuesday, May 13, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 3 : நமது அபிப்பிராயங்களைப் (BELIEFS) பற்றி

மாணவர் உலகம் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட என்னுடைய கட்டுரைத் தொகுப்பின் பகுதி இது.


ரோஜாச் செடிகளில் முள்ளிருக்கிறது என்று நாம் குறைபட்டுக் கொள்ளலாம். அல்லது முட்புதர்களுக்கு நடுவேகூட ரோஜா மலர்கிறது என்று மகிழ்ந்து கொள்ளலாம்.” – ஆப்ரஹாம் லிங்கன்

இன்று நாம் சாதனையாளர்களாக கருதும் பலரும் கூட பல முறை வாழ்க்கையில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடிப்பதற்கு முன்பு ஆயிரக்கணக்கான முயற்சிகள் செய்து தோல்வியடைந்திருக்கிறார்..தன் தோல்விகளைப் பற்றி அவர் என்ன சொன்னார் தெரியுமா, “ஒரு மின்சார விளக்கு ஏன் வேலை செய்வதில்லை என்பதை பத்தாயிரம் வழிகளில் நான் உணர்ந்திருக்கிறேன்.” என்று.

வின்சென்ட் வா கோ என்பவர் ஒரு பிரபல டச்சு ஓவியர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரது ஓவியங்களில் ஒன்றை மட்டும்தான் அவரால் விற்க முடிந்தது. வெறுத்துப்போய் பல ஓவியங்களை தீயிலிட்டு எரித்து விட்டார். ஏமாற்றங்களால் விரக்தியடைந்து பாதிக்கப்பட்ட அவர் தன்னுடைய வாழ்க்கையையே விரைவில் முடித்துக்கொண்டார். ஆனால், அவரது மறைவுக்குப் பின்னே, அவரது ஓவியங்கள் மிகப் பிரபலமாயின. நான்கு ஓவியங்கள் நூறு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ஐநூறு கோடி ரூபாய்க்கு) விலை போனது.

ஸ்டீஃபன் கிங் என்பவர் பிரபல திகில் கதைகள் எழுத்தாளர். அவரது முதல் கதை ‘கேரீ’யை முப்பது முறை பதிப்புக்கு அனுப்பி முப்பது முறையும் திருப்பிப் பெற்றதில் விரக்தியடைந்து அந்த கதையையே தூக்கி குப்பையில் விட்டெறிந்தார். ஆனால், அவரது மனைவி அந்த ஃபைலை எப்படியோ காப்பாற்றி 31-ஆவது முறையாக பதிப்புக்கு அனுப்பிவைத்தார். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம். அந்தக் கதைப் புத்தகம் முதல் பதிப்பிலேயே முப்பதினாயிரம் பிரதிகள் விற்பனையாயின. அவரது பல கதைப் புத்தகங்கள் கோடிக்கணக்கில் விற்கப்பட்டிருகின்றன.

‘ஹாரி பாட்டர்’ கதைகளை எழுதி இன்று கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஜே.கே. ரௌலிங் என்பவர் வெற்றியடைவதற்கு முன்னால் விவாகரத்து வாங்கிக்கொண்ட, அரசாங்கம் அளித்த பல நலத்திட்டங்களின் மூலமே வாழ்க்கையை ஓட்டிய ஒரு பெண்மணி. “என்னுடைய தோல்விகள் என்னை அதள பாதாளத்திற்கு எடுத்துச் சென்றன. அந்த அதளபாதாளம்தான் என் வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரு அடிக்கல்லாக பயன்பட்டது” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேச அழைத்தபோது கூறினார்.

கஜனி முகம்மதை எடுத்துக்கொள்ளுங்கள். சோம்நாத் கோவில் மீது முப்பது முறை படையெடுத்து தோல்வியடைந்திருக்கிறார். அவரது முப்பத்தொன்றாம் முயற்சியே வெற்றியடைந்தது.

இப்படிப் பல சரித்திரங்கள்……

உங்களது வெற்றிகள் என்பது, உங்களது முயற்சிகளின் பலன்களை –வெற்றி தோல்விகளை  - நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

வாழ்க்கை என்பது நீங்களாகவே உங்களுக்காகவே கட்டிக்கொள்கிற ஒரு வீடு. அதை எப்படி கட்டிக்கொள்கிறீர்கள் என்பது தான் உங்களது மகிழ்ச்சியைத் தீர்மானிக்கும். இன்டெர்நெட்டில் படித்த ஒரு கதை. ஐரோப்பாவில் ஒரு மரத்தச்சர். மிகத் திறமைசாலி. பல வருடங்கள் தன்னுடைய முதலாளிக்காக பல மர வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கிறார். வெகு வருடங்களாக வேலை பார்த்து அலுத்துப் போனதில் ஓய்வு பெற விரும்பி தன் முதலாளியிடம் தன் மனதை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் முதலாளியும், ‘சரி, நீங்களும் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், ஓய்வெடுக்கும் முன்னே ஒரே ஒரு வீடு மட்டும் கட்டிக்கொடுத்துவிட்டு ஓய்வெடுத்துக்கொள். செலவைப் பற்றி கவலைப்படவேண்டாம்.” என்று கூறியிருக்கிறார். மரத்தச்சருக்கோ வெகு கோபம். ஆனால், முதலாளியின் உத்தரவை தட்டிப் பழக்கமில்லை. வேலையை ஒத்துக்கொண்டு, ஏனோதானோ என்று ஒரு மர வீட்டை ஒரு மாதிரியாக கட்டிமுடித்து சாவியை தன் முதலாளியிடம் கொண்டு கொடுக்கிறார். சாவியை வாங்கிக்கொண்ட அந்த முதலாளி,. “இந்த வீட்டை உனக்கு ஒரு வெகுமதியாய் கொடுப்பதற்காகவே உன்னை கட்டச் சொன்னேன். உனக்காக உள்ள வீட்டை உன்னைவிட வேறு யார் சிறப்பாக கட்ட முடியும்?”என்று கூறி வீட்டுச்சாவியை அந்த தச்சரிடமே கொடுத்து விடுகிறார். தச்சர் தன் தலையில் அடித்துக்கொள்கிறார். “அடடா, இந்த வீடு எனக்காகவே கட்டப்படுகிறது என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டதே. அப்படித் தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவு அருமையாக பார்த்துப் பார்த்து கட்டியிருப்பேன்.” என்று தன்னை நொந்து கொள்கிறார்.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இப்படித்தான். இது நம்முடைய வாழ்க்கை என்பதை உணராமல் யாருக்கெல்லாமோ வாழ்வதாக நினைத்துக்கொண்டு நமது வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கிறோம்.

மீண்டும் சொல்கிறேன். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் அந்த அபிப்பிராயம்தான் உங்கள் வாழ்க்கை. உங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்திலும் உங்களுக்கு ஒரு சாய்ஸ் இருக்கிறது. நீங்கள் என்ன சாய்ஸ் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? நீங்கள் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ்தான் உங்களது நாளைய தினத்தை தீர்மானிக்கப்போகிறது. வெற்றியடைவதையே உங்கள் சாய்ஸாக தேர்ந்தெடுங்கள். அது உங்கள் மனப்பான்மையைப் பொறுத்திருக்கிறது. உங்கள் பெர்ஸனாலிடியைப் பொறுத்திருக்கிறது.

அது சரி, உங்களைப் பற்றிய உங்களுடைய கருத்துக்கள் உங்களுக்கு எப்படித் தோன்ற ஆரம்பித்தது?

மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால், உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்களுக்கு பெரும்பாலும் நீங்கள் பொறுப்பல்ல., உங்கள் பெற்றோர்களே முதற்காரணம்.  நான் இப்படிச் சொல்வதை பெற்றோர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

புதியதாகப் பிறக்கும் குழந்தைக்கு ஆரம்பத்தில் அதனது சுமார் ஒரு வயது வரை ‘தான்’ என்று உணர்வு இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது தான் வேறு மற்றவை வேறு என்று பகுத்து, பிரித்துப் பார்க்கும் மனப்பான்மை குழந்தைப் பருவத்தில் ஒரு வயது வரை பொதுவாக இருப்பதில்லை. அதுவரை எல்லாமே அதற்கு ஒன்றுதான். ஆனந்த நிலை. பிறகு படிப்படையாக, ‘இது என்னுடையது, இது என்னுடையதல்ல’ என்ற உணர்வு பிறக்கிறது. அந்தப் பருவத்தில், பெற்றோர்கள் அந்த குழந்தையை எப்படி நடத்துகிறார்கள், என்ன பேசுகிறார்கள், எப்படி வளர்க்கிறார்கள் என்பதைப் பொறுத்து, ஒவ்வொரு அனுபவத்திற்கும் அந்த குழந்தை ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்கிறது. அந்த அனுபவம் தொடரும் பொழுது, அந்த அபிப்பிராயத்தை உறுதி செய்துகொள்கிறது அல்லது மாற்றிக்கொள்கிறது. தான் கேட்டது, பார்த்தது, அனுபவித்தது இவைகளின் மொத்தக் கலவையின் மேல் தான் உருவாக்கிக்கொண்ட அபிப்பிராயம்தான் சுய அபிப்பிராயம்.

“நீ ராணி மாதிரி வருவே” என்று அடிக்கடி பெற்றோர்களின் புகழ்ச்சியைக் கேட்டு வளரக்கூடிய குழந்தை தன்னை ஒரு ராணியாகவே பாவித்துக்கொள்ளும்.

“ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ?” என்று புலம்பல்களைக் கேட்டு வளரும் குழந்தை தன்னை ஒரு பாரமாகவே நினைத்து வளரும்.

“நீ ஒரு நோஞ்சான இருக்கியே, இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது” என்பதை அடிக்கடி கேட்டு வளரும் குழந்தை ஒரு தாழ்வு மனப்பான்மையுடனேயே, ‘இது என்னால் முடியாது’ என்ற எண்ணத்துடனேயே வளரும்.

‘இதெல்லாம் ஒண்ணுமேயில்லை. சும்மா முயற்சி பண்ணு.” என்று ஊக்கப்படுத்தப்பட்ட குழந்தை ஊக்குவித்தால் முயற்சி செய்து பார்க்கும்

இப்படி பல கருத்துக்களை பெற்றோர் நாம் சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுது கூறக்கேட்டிருப்போம். அந்த கருத்துக்களை பெரும்பாலும் பெற்றோர்கள் தன்னிச்சையோடில்லாமல் அன்பினால், குழந்தைகளின் மேல் உள்ள கரிசனத்தினால், அல்லது சில சமயம் தங்களுடைய விரக்தியினால் கூறியிருப்பார்கள். ஆனால், அந்த வார்த்தைகளுக்கு குழந்தைகள் தங்களுக்குள் ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடும், அந்த அபிப்பிராயம் நேர்மறையாகவோ, எதிர் மறையாகவோ அமையலாம். எதிர் மறையாக அமைந்தால் அது தன் குழந்தையை பாதிக்கக் கூடும் என்ற விழிப்புணர்ச்சி பெற்றோருக்கு இருந்தால் அவர்கள் குழந்தைகளிடம் மிகவும் கவனமாக பேசுவார்கள். கவனமாக வளர்ப்பார்கள். நேர்மறையான அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.

ஆனால், பெற்றோர்களுக்கோ இன்று ஏகப்பட்ட பிரச்சினைகள். இதையெல்லாம் நுண்ணிப்பாக கவனிப்பதற்கு நேரமில்லை. அவர்கள் வளர்ந்த விதம் அப்படி. அவர்கள் சூழ்நிலை அப்படி.

அதன் பிறகு, வளரும் பருவத்தில் பெற்றோர்களைத் தவிர்த்து, உறவினர்கள், பெரியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், தினம் தினம் நாம் சந்திக்கும் நபர்கள் இவர்களுடன் நாம் பழகும்போது நமக்கு ஏற்படும் அனுபவத்தையொட்டி நாம் தொடர்ந்து நமது அபிப்பிராயங்களை புதிது புதிதாக அமைத்துக்கொள்கிறோம், அல்லது மாற்றிக்கொள்கிறோம்.

இப்படி நமக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு நாம் கொடுத்துக்கொண்ட அர்த்தங்கள் தான் நமது அபிப்பிராயங்கள், நமது பெர்ஸனாலிடி, நமது வாழ்க்கயும் கூட.

இந்த அபிப்பிராயங்கள் நமது ஆழ்மனதில் போய் உட்கார்ந்து கொள்கின்றன. நம்மை ஆட்டிப் படைக்கின்றன. விழிப்பு நிலையில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களைவிட, நமது ஆழ்மனதில் ஏற்படுத்திக்கொண்ட காயங்கள், கவலைகள், அச்சங்கள், வருத்தங்கள் இவைகள்தான் நம்மை ஆட்சி செய்கின்றன.

அப்படியானால், நமது ஆழ்மனதில் நாம் ஏற்படுத்திக்கொண்ட இந்த கருத்துக்களை மாற்ற முடியாதா?

முடியும். அதற்கும் பயிற்சி இருக்கிறது. எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக்கொடுக்கப் போகிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள்.

                                                                    ………. தொடரும்

No comments:

Post a Comment