Total Pageviews

Saturday, May 31, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 4 : நமது அபிப்பிராயங்களைப் (BELIEFS) பற்றி

3-2-1 என்ற மனதை வயப்படுத்தும் பயிற்சி பற்றி உங்களுக்குத் தெரியுமா?



உங்களுடைய அபிப்பிராயங்களே உங்களுடைய குணங்களையும் பழகும் தன்மையையும் பாதிக்கிறது. 

உதாரணத்துக்கு:

“எனக்கு எல்லாமே சரியாக நடந்துகொண்டிருக்கிறது. நான் ஒரு அதிர்ஷ்டசாலி” என்ற நினைப்பு இருப்பவரை எடுத்துக்கொண்டால் அவர் பொதுவாக கீழ்க்கண்ட குணங்களைக் கொண்டவராக இருப்பார்:
  1. ·        எல்லோருடனும் அன்பாக, நட்புடன் பழகுவார்
  2. ·        மற்றவருக்கு  உதவி புரிவார்
  3. ·    மற்றவரின் முன்னேற்றத்துக்கு துணை புரிவார். பொறாமைப்பட மாட்டார்
  4. ·  தன்னிடம் இருப்பதைப் பற்றி அவருக்கு ஒரு பெருமிதம் இருக்கும் ஆனால் தற்பெருமை இருக்காது. தன்னிடம் இல்லாததை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்
அதே சமயம், “நான் ஒரு துரதிர்ஷ்டசாலி. எனக்கென்று வரும்பொழுது எல்லாமே கடினமாகிவிடும்” என்று ஒருவர் கருத்து கொண்டிருந்தால்,
  1. ·    மற்றவர்கள் மீது அடிக்கடி பழி சுமத்துவார்.
  2. ·     பொறாமைப் படுவார்.
  3. ·     மற்றவர்களை நிந்திப்பார்.
  4. ·     கோபப்படுவார் 
  5.   தன்னிடம் இருப்பதைப் பற்றி ஒரு பெருமையும் இருக்காது. இல்லாததையே பெரிதாக நினைப்பார்.

எனவே, மீண்டும் சொல்கிறேன். உங்களைப் பற்றி - உங்கள் வலிமையைப் பற்றி, பலவீனங்களைப் பற்றி,  வாய்ப்புகளைப் பற்றி, உங்களை எதிர்நோக்கியிருக்கும் சவால்களைப் பற்றி, நீங்கள் பிறந்து வளர்ந்த சூழ்நிலையைப் பற்றி - நீங்கள் என்ன மையக்கருத்து கொண்டிருக்கிறீர்களோ அதன்படியே உங்கள் பெர்ஸனாலிடியும் – அதாவது உங்கள் குணமும், தனிப் பண்புகளும், நடத்தையும், பாவனையும் அமையும்.

உங்களைப் பற்றி உங்களுக்குள் ஒரு சமமான கருத்து – அபிப்பிராயம் – ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் வலிமையை மையமாகக் கொண்டு உங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிரச்சினைகளுடன் உங்கள் நேரத்தை செலவிடாமல், தீர்வுகளுடன் உங்கள் நேரத்தை செலவிட வேண்டும்.

இந்த நிலையை எப்படி அடைவது?

நம்மைப் பற்றி நாமே ஏற்படுத்திக்கொண்ட பயனில்லாத கருத்துக்களை எப்படி மாற்றிக்கொள்வது?

என் சொந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட, பயன்பெற்ற 3-2-1 என்ற உத்தியைப் எப்படிச் செய்வது என்பது பற்றி இப்பொழுது நான் சுருக்கமாக சொல்லப் போகிறேன்.  .

“இந்த 3-2-1 என்ற பயிற்சியை காலை விழிப்பு வந்தவுடன் முதல் வேலையாக செய்வது மிகச் சிறந்தது.

காலை விழிப்பு ஏற்பட்டவுடன், விழிப்பு நிலை, தூக்க நிலை இந்த இரண்டுக்கும் நடுவேயுள்ள நிலையில் – இதை ஆல்ஃபா நிலை என்பார்கள் - உட்கார்ந்துகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ கண்ணை மூடிய நிலையில் நூறிலிருந்து கீழிறங்கி  நிதானமாக எண்ணத் தொடங்கவும்.

3 என்ற எண்ணுக்கு வந்ததும் அந்த 3 என்ற எண்ணை உங்கள் கண் முன்னே நிறுத்தி உங்களுக்குள்ளேயே மூன்று முறை, “என்னுடைய உடம்பு இப்பொழுது  நன்றாகத் தளர்ந்திருக்கிறது,” என்று சொல்லிக்கொள்ளவும்.

பிறகு 2 என்ற எண்ணை மனக்கண் முன்னே நிறுத்தி, அதேபோல் “என்னுடைய மனது இப்பொழுது நன்றாகத் தளர்ந்திருக்கிறது,.” என்று மூன்று முறை சொல்லிக்கொள்ளவும்.

முடிவாக, 1 என்ற எண்ணை மனக்கண் முன்னே நிறுத்தி, அதேபோல் “என் உடம்பும், என் மனதும் இப்பொழுது நன்றாகத் தளர்ந்திருக்கிறது,” என்று மூன்று முறை சொல்லிக்கொள்ளவும்.

(இதை முறையாகத் தொடர்ந்து பயிற்சி செய்யும் பொழுது,  நாளாவட்டத்தில் உங்கள் உடம்பும், மனதும் 3, 2, 1 என்ற எண்களை கண்களை மூடி நீங்கள் கற்பனை செய்து பார்த்த உடனேயே தானாகவே தளர்த்திக்கொள்ள பழகிக்கொள்ளும். இது ஒரு ஆட்டோ சஜஸ்ஷன் – AUTO SUGGESTION தான்.)

பின்பு கீழ்வருமாறு சொல்லிக்கொள்ளவும்,

“நான் இப்பொழுது ஒரு ஆழ்ந்த  ஆல்ஃபா நிலையில் இருக்கிறேன். இந்த நிலைக்கு என்னைக் கொண்டு வந்திருக்கும் நோக்கம் என்னவென்றால் …….. (இங்கே, எந்த நோக்கத்திற்காக இதை பயிற்சி செய்ய ஆரம்பித்தீர்களோ அதை சொல்லிக்கொள்ளவும்.)

(உதாரணத்திற்கு, ‘பணம் சேர்ப்பதைப் பற்றிய  என்னுடைய இப்போதைய கருத்து எனக்கு உதவி புரியவில்லை. அதனால், என் கருத்தை மாற்றிக்கொள்வது எனக்கு நன்மையாக இருக்கும். பணம் சேர்ப்பதைப் பற்றிய என்னுடைய கருத்து இந்த நிமிடமே மாறவேண்டும் என்று விரும்புகிறேன்.’)

இப்படிக் கூறிய பிறகு, எந்த நோக்கத்திற்காக இந்தப் பயிற்சியை தொடங்கினீர்களோ, அது இப்போதே நடந்துவிட்டதாக சிறிது நேரம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளவும். (உதாரணத்துக்கு, நீங்கள் நிறைய பணம் சேர்ப்பதாகக் கற்பனை செய்து பார்க்கவும்.)

பிறகு, இப்படி சொல்லிக்கொள்ளவும், “நான் இப்பொழுது 1,2,3,4,,5 என்று சொல்லி என் கண்களைத் திறந்துகொள்ளப் போகிறேன். இந்த பிரகாசமான உலகை பார்க்கப் போகிறேன். துடிப்பாக இருக்கப் போகிறேன். என்னுடைய வழக்கமான பணிகளை தொடரப் போகிறேன். அப்படி செய்யும்பொழுது, ………………. பற்றிய ((உதாரணத்திற்கு: பணம் சேர்ப்பதைப் பற்றிய) என் எண்ணங்கள் மாறத் தொடங்கியிருக்கும்.”

பின் மெதுவாக, கண்களைத் திறந்து உங்கள் அன்றாட வேலைகளை கவனியுங்கள். ஆரம்பத்தில் இந்தப் பயிற்சியை, தொடர்ந்து ஒரு நாள்கூட விடாமல் 21 நாட்களுக்கு செய்து பாருங்கள். பிறகு இது தானாகவே உங்களுக்கு பழக்கமாகிவிடும். நாளாவட்டத்தில், மிகக் குறுகிய இடைவேளையிலேயே உங்களை நீங்களே தளர்த்திக்கொள்ள பழகிக் கொள்வீர்கள். இந்த ஆல்ஃபா என்கிற அமைதியான மன நிலை மிகமிக சக்தி வாய்ந்த நிலை. இந்த ஆல்ஃபா நிலையிலிருந்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். உங்களைப் பற்றிய எதை வேண்டுமானாலும் 3-2-1 உத்தியை பயன்படுத்தி மாற்றிக்கொள்ள முடியும்.

(முக்கியமான பின் குறிப்பு: சில்வா ஜோஸின் 3-2-1 என்கிற மனதை வயப்படுத்தும் பயிற்சியைப் பற்றி சுருக்கமாக ஒரு சில மாறுதல்களுடன் சொல்லியிருக்கிறேன். இதைப் பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்ள இணையதளத்திலோ அல்லது அவரது புத்தகங்களிலோ படித்து அறிந்து கொள்ளலாம்.)

மாணவர்களே, இந்த உத்தியை நான் நடத்தும் ‘பெர்ஸனாலிடி வளர்ப்பு’ வகுப்புகளில் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். நடத்திக் காட்டியிருக்கிறேன். நல்ல பலனை தந்திருப்பதாக பயிற்சி செய்து பார்த்த மாணவர்கள் என்னிடம் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால், தொடர்ந்து பயிற்சி செய்யவேண்டும். தினம் பல் துலக்குவதற்கு நாம் சலித்துக்கொள்கிறோமா? இல்லையே, அதைப்போலத்தான்.  நான் இன்னமும் இதை தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன்.

நிச்சயமாக, நீங்களும் வெற்றிப் பாதையில் செல்லலாம். எந்த தடங்கலும் உங்களை ஒன்றும் செய்யாது. வாழ்த்துக்கள்.

                                                                    …… தொடரும்

No comments:

Post a Comment