Total Pageviews

Sunday, January 10, 2016

நான் வசிக்கும் அக்ரஹாரம் தெருவில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது.......

நான் வசிக்கும் அக்ரஹாரம் தெருவில் ஒரு பிள்ளையார் கோவில் இருக்கிறது. கோவிலுக்கென்று வருமானம் எதுவும் கிடையாது. ஆனால், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இருக்கின்றன.ஊர்க்காரர்களுக்குச் சொந்தமாக இருந்த இந்தக் கோவிலை சில ஆண்டுகளுக்கு முன்பு ஏனோ அரசிடம் ஒப்படைத்து விட்டனர். சென்ற ஆண்டு தொடக்க காலம் வரை இரண்டு வேளையும் இந்தக் கோவிலில் பூஜை செய்து வந்த அர்ச்சகர் அரசிடமிருந்து தனக்கு மாத வருமானம் சரியாகக் கிடைப்பதில்லை என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடமிருந்தும் தனக்கு சரியான வருமானம் இல்லை என்றும் காரணம் காட்டி தான் வேலையிலிருந்து நின்று கொள்வதாக அறிவித்துவிட்டார். தமிழ் நாடு அறநிலையத் துறையின் ஒரு வேளை பூஜைத்திட்டத்தின் கீழ் எங்கள் கோவில் அடங்குவதால் கோவிலை ஒரு வேளை மட்டும் திறந்தால் போதும் என்று அரசு அதிகாரிகளும் கூறி விட்டார்கள்.

அது முதல் அந்த அர்ச்சகர் காலை வேளை மட்டும் ஐந்து நிமிடத்துக்குக் கோவிலைத் திறந்து வைக்கிறார். மாலை  நேரத்தில் திறப்பதில்லை. மாலையில் திறந்து வைக்கச் சொன்னால் மின்சாரக் கட்டணம் கட்டுவதற்குக்கூட அவருக்கு பணம் அரசிடமிருந்து ஒழுங்காக வந்து சேர்வதில்லை என்கிறார். வெளி வேலைக்குப் போனால் தனக்கு அதிக வருமானம் கிடைப்பதாகக் கூறுகிறார். ஊர் மக்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர்களின் வாக்குறுதிகளை ஒரு சில முன் அனுபவங்களை காரணம் காட்டி நம்ப மறுக்கிறார். தனியாக மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை நான் அவருக்கு கொடுக்க முன் வந்தேன். என்னைப் போல் வேறு ஒன்றிரண்டு ஊர்க்கார்களும் கொடுக்கத் தயாராக இருப்பார்கள் என்றும் கூறினேன். அதற்கும் அந்த அர்ச்சகர் மறுத்து விட்டார். தெருவில் பலருக்கு வசதியிருந்தும் கோவிலை திறந்து வைப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவதில் என்ன காரணத்தினாலோ அவர்களுக்கு தயக்கம் இருக்கிறது. நானாக எதுவும் செய்ய முனைந்தால் ஊர்க்காரர்கள் அதிகமாக ஈடுபாடு எதுவும் காட்டுவதில்லை. அதை அவர்கள் விரும்புவதுமில்லை என்று பின்னால் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நான் ஒன்றும் அப்படி தினமும் கோவில் சென்று வழிபடும் தீவிர பழக்கம் கொண்டவனில்லை. இருந்தாலும், சிறு வயதில் அக்ரஹாரத்தில் வளர்ந்து வந்ததால் அந்த அக்ரஹார வாழ்க்கையின் நினைவுகள் இன்றும் நமது பழைய பழக்க வழக்கங்களை பின் பற்றுவர்கள் மத்தியில் எனக்கு ஒரு மன நிம்மதியைக் கொடுக்கிறது. அக்ரஹாரத்தில் நடக்கும் எல்லா விசேஷங்களுக்கும் என்னாலான உதவிகளை தாராளமாகச் செய்து வருகிறேன்.

மூடியிருக்கும் கோவில்களை பலர் திறக்க முயற்சி எடுக்கின்ற இந்த நேரத்தில் ஒழுங்காக தினமும் இரண்டு வேளை திறக்கப்பட்டு பூஜை நடந்து வந்த ஒரு சின்ன அக்ரஹாரக் கோவில் இன்று ஒரு வேளை மட்டும், அதுவும் ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே திறக்கப்படுவது மனதுக்கு மிகவும் நெருடலாக இருக்கிறது. தெருவில் பலர் என்னை விட வயதில் மூத்தவர்கள், அனுபவமுள்ளவர்கள். ஆனால், என்ன காரணத்தினாலோ ஒன்று சேர்ந்து முயற்சி எடுக்க மறுக்கிறார்கள். இவ்வளவுக்கும் அந்தத் தெருவில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு விதத்தில் ஒருவருக்கொருவர் சொந்தக்காரர்கள் வேறு.

நான் அந்த ஊரையோ தெருவையோ சேர்ந்தவனில்லை என்பது ஒரு முக்கியமான விஷயம். நான் வெளியாள். வாடகை வீட்டில் குடியிருப்பவன். சென்னை பிடிக்கவில்லை என்பதாலும், கிராமப்புற ஊரில் ஏதேனும் ஒரு சமூக அறக் கட்டளை சேவையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற விருப்பத்தால் இந்த ஊருக்கு எதேச்சையாக வந்தவன்.

இதுவும் இறைவனின் ஒரு திருவிளையாட்டுதானோ, என்னவோ! ஊர் மக்களுக்கு என்ன உணர்த்த நினைக்கிறான் என்று புரியவில்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.


No comments:

Post a Comment