05.02.17 ஞாபக சக்தி (MEMORY)
கடந்த ஒரு வாரத்தில் மதிய
உணவு என்ன சாப்பிட்டேன் என்று நினைவு படுத்திப் பார்த்தேன்.
04.2.17 சனிக் கிழமை –
பொங்கல், கொத்சு, சட்னி, மோர் சாதம், மோர் மிளகாய் வற்றல், கூட்டு
03.02.17 வெள்ளிக் கிழமை
– சப்பாத்தி, பயங்கன் பர்த்தா
02.02.17 வியாழக் கிழமை
– நினைவில்லை
01.02.17 புதன் கிழமை
– நினைவில்லை
31.01.17 செவ்வாய்க் கிழமை
– நினைவில்லை
30.01.17 திங்கட் கிழமை
– நினைவில்லை
29.01.17 ஞாயிற்றுக் கிழமை
– கோவிந்தா ரெஸ்டாரண்டில் சலாட், சாதம், தால், பழங்கள் கலந்த யோகர்ட், பேன் கேக், டோரிட்டோ,
பக்கோடா, வறுத்த உருளைக் கிழங்கு
நேற்று சாப்பிட்டது தெளிவாக
நினைவு இருந்தது. முந்தா நேற்று சாப்பிட்டது ஒரு மாதிரியாகத்தான் நினைவு இருந்தது.
அதற்கு முந்தின தினங்களில்…எனக்கு நினைவில்லை. ஆனால் ஒரு வாரம் முன்பு சாப்பிட்டது
மட்டும் ஏன் நினைவிருக்கிறது? ஏனென்றால் அன்று நாங்கள் கார்ட்ச்னர் குகைகளுக்குச் செல்லும்
வழியில் டூசான் என்ற இடத்தில் இருந்த ‘ஹரே க்ருஷ்ணா’ இயக்கத்தைச் சேர்ந்த ‘கோவிந்தா’
ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டோம். பல உள்ளூர் அமெரிக்கர்கள் கும்பல் கும்பலாக வந்து சாப்பிட்டுக்
கொண்டிருந்தனர். உள்ளூர் மக்களுக்காக மசாலா, உப்பு காரமில்லாத ‘சாத்விக்’ உணவு. எப்படி
மறக்க முடியும்?
இடைப்பட்ட நாட்களில் வழக்கமான
சலிப்பூட்டக்கூடிய (சுவையாக இருந்தாலும்) ROUTINE சாப்பாடு. விசேஷமாக நினைவில் வைத்துக்கொள்ள
எதுவுமில்லை.
எப்படி ஞாபகப்படுத்திக்கொள்வது?
சரி மனைவியிடம் கேட்போம் என்று விசாரித்தேன். அவள் நினைவு கூர்ந்தது படி:
வியாழக் கிழமை – சப்பாத்தி,
மட்டர் பன்னீர் (அதில் ஒரு பகுதி இன்னும் ஃப்ரிட்ஜில் உட்கார்ந்து கொண்டிருப்பதால்
அவளுக்கு இன்னும் நினைவில் இருக்கிறது)
புதன் கிழமை – சாதம், வற்றல்
குழம்பு, பீன்ஸ் கரி
செவ்வாய் கிழமை – சப்பாத்தி.
என்ன கறி சமைத்தோம் என்று அவளுக்கும் நினைவில்லை. அதைப் பற்றிக் கொஞ்சம் அலசிப் பார்த்தோம்.
சட்டென்று நினைவுக்கு வந்தது. திங்களன்று மாலையிலேயே அடுத்த நாளுக்காக பல ஆண்டுகளுக்கு
முன்பு எங்கள் நண்பர் ஒருவர் எங்களுக்கு சமைத்துக் காட்டிய ஒரு விதக் கூட்டை சமைத்தோம்
என்று ஞாபகம் வந்தது.
திங்கட் கிழமை – லெமன்
ரைஸ், பீட்ரூட் கறி (ஞாயிற்றுக் கிழமையன்று
வெளியே டூர் போய் வந்த பின்பு அடுத்த நாள் சமையலுக்காக பீட்ரூட்டை நான் நறுக்கிய
போது ‘ஒரே ஓரு பீட்ரூட் நறுக்கினால் போதும்’ என்று மனைவி சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது.)
சமையல், சாப்பாடு என்று
மட்டுமில்லை, எல்லா விஷயத்திலும் அவளுக்கு என்னை விட ஞாபக சக்தி அதிகம்தான்.
என்னடா, இவன் என்னென்ன
சாப்பிட்டான் என்று தெரிந்து கொள்வது அவ்வளவு முக்கியமான வேலையா என்று நினைக்கிறீர்களா?
இல்லை. ஞாபக சக்தியைப்
பற்றிய MOONWALKING WITH EINSTEIN என்ற ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
அதில் எழுதியிருந்த பல கருத்துக்களைப் பற்றிக் கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்த்ததில் எழுந்ததுதான்
இந்த ஆராய்ச்சி.
1. நமது ஞாபக சக்தியை ஒரு பெரிய பொருட்டாக
நாம் கருதுவதில்லை. WE TAKE IT FOR GRANTED. நமது நினைவு கூறும் ஆற்றல் கூடப் பிறந்ததா அல்லது
அது நாம் வளர, வளர நமது அனுபவங்களையொட்டி நமது மூளையில் ஏற்படும் மாற்றங்களா என்பது
பற்றி விஞ்ஞானம் இன்னும் தீர்மானமாகச் சொல்லவில்லை.
2.
ஒரு வேற்று நபரோடு அல்லது பொருளோடு, அல்லது நிகழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்காமல் நம்மால்
பல நினைவுகளை வெளிக்கொணர முடிவதில்லை. அதே
போல எந்த ஒரு வேற்றுப் பொருளோடும் சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை நாம் ஞாபகம் வைத்துக்கொள்வதுமில்லை.
3.
ஒரு விஷயத்தைப் பற்றிய சீரிய கவனம் இருந்தால்
மட்டுமே அது நினைவு வைத்துக்கொள்ளத் தகுதியுடையதாகிறது. இல்லையென்றால், அந்த விஷயம் நிராகரிக்கப்பட்டு நமது நினைவை விட்டு அகன்று விடுகிறது.
4.
காலம் என்று ஒன்று இல்லையென்றால் நினைவு
என்பதற்கு தேவையோ இடமோயிருக்காது. ஆனால், நினைவு என்று ஒன்று இல்லையென்றால் காலத்துக்கு
ஏதேனும் வேலையிருக்குமா? WITHOUT TIME THERE MAY BE NO NEED FOR MEMORY. BUT
WITHOUT MEMORY THERE MAY NOT BE ANY TIME. நினைவுகள் என்று ஒன்று இருப்பதினாலேயே காலம்
கடந்து செல்வதை நம்மால் உணர முடிகிறது. ஒருவருக்கு
அம்னீஷியா என்ற ஞாபக மறதி வியாதி வந்து விட்டால்
ஒரு குறிப்பிட்ட காலத்தின் நிகழ்வுகள் எல்லாம் மறந்து போய்விடக் கூடும். நேற்று
என்பது என்ன, கடந்த வாரம் என்பது என்ன என்பது கூட அவருக்கு மறக்கக் கூடும். 1967-ல்
கே. ஆர். விஜயா, ரவிச்சந்திரன், சோ இணைந்து நடித்து சோ அவர்கள் கதை, வசனம் எழுதி வெளிவந்த
‘நினைவில் நின்றவள்’ என்ற படம்தான் தமிழில்
அம்னீஷியாவை கருத்தாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்று நினைக்கிறேன்.
5.
காலத்தை வேகமாக போவதாகவோ அல்லது மெதுவாக
ஊர்ந்து போவதாகவோ உணர்வது அவரவருடைய தனிப்பட்ட கணிப்பு. ஒரு மருத்துவ மனையில் ஒரு நோயாளி
அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை கவனித்துக் கொள்ளும் இன்னொருவர் அவரருகேயே
போரடித்து விழித்திருக்கிறார். அவருக்கு நேரம் மிக மெதுவாக ஊர்வது போல ஒரு உணர்வு. வெகு நேரம் கழித்து விழித்துக்
கொண்ட நோயாளியோ ‘நேரம் போனதே தெரியவில்லை’ என்கிறார். கடந்ததென்னவோ ஒரே நேரம்தான்.
ஆனால் இரண்டு நபர்கள் வெவ்வேறு விதமாக உணர்கிறார்கள். ஒரு சுவாரசியமான புத்தகத்தைப் படிக்கும் பொழுது நேரம்
போவதே தெரிவதில்லை. அதே சமயம், தெரியாத்தனமாக நடு ராத்திரியில் விழிப்பு வந்து தூக்கம்
கெட்டுப் போய்விட்டால் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணி நேரம் போவது போலத் தொல்லையாகத்
தோன்றும்.
6. ஞாபக சக்தியில் இரண்டு முக்கிய வகைகள்
உண்டு.
Ø
முதலாவது, ஒரு சில விஷயங்களைப் பற்றிய
ஞாபகம் நமக்கு இருக்கிறது என்ற உணர்வு. நமது காரின் நிறம், குழந்தையின் பிறந்த தேதி, ஒரு சில எண்கள்…இதிலும்
இடம், காலம் சாராதது, சார்ந்தது, என்று இரண்டு வகைகள் உண்டு.
§
முதலாவது என்னுடைய அல்லது நெருங்கிய உறவினர்,
நண்பர் அவர்களின் தொலைபேசி எண், தி. நகரிலிருந்து பாரி முனைக்குப் போவதற்கு எந்த எண் பஸ்ஸில் போக வேண்டும் …இது போன்றது. இவை இடம்
காலம் சம்பந்தப்படாதது.
§
இரண்டாவது எப்பொழுது, எங்கே, எப்படி போன்ற
கேள்விகளுக்கு பதில் கொடுக்கக் கூடியவை. வழக்கமாக சாப்பிடும் கோப்பையில்தான் இன்று
காஃப்பி குடித்தோமா என்ற ஞாபகம். இன்று பஸ்ஸில் போகும் பொழுது வழக்கமாக வரும் ஓட்டியோ
அல்லது கண்டக்டர்தான் இருந்தாரா..இது போன்றது.
§
முதலாவது பல தகவல்களைப் பற்றிய நம்மிடைய
அறிவு. இரண்டாவது அந்த விஷயங்களைப் பற்றிய நமது அனுபவங்களின் ஞாபகம்.
Ø
இரண்டாவது: ஒரு சில விஷயங்கள் நமக்குத்
தெரியும் என்ற குறிப்பிட்ட விழிப்புணர்வு இல்லாமல் இருத்தல். சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட
பின் நம்மை அறியாமலேயே கீழே விழாமல் சைக்கிளை ஓட்டுவது, நம்மை அறியாமல் நமது கால்கள்
நம்மை நம் வீடு நோக்கி நகர்த்துவது, சிறிய வயதில் அம்மாவின் கைப் பிடித்து எழுதக் கற்றுக்
கொண்டது… போன்றவை இதில் அடங்கும்…
7.
பல தகவல்களை உருவங்களாக (IMAGES) ஞாபகப் படுத்திக்கொள்ளும் பழக்கம் இயற்கையாகவே மனிதனுக்கு
இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு ஒருவரிடம் இரண்டு புகைப்படங்களைக் காட்டி ஒரு படத்தில்
இருப்பவர் பெயர் பூஜாரி என்றும் இன்னொரு படத்தில் இருப்பவர் பூஜாரியாக இருப்பவர் என்று
கூறுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அதே இரண்டு புகைப்படங்களையும்
காட்டி அந்தப் புகைப்படங்களோடு தொடர்புடைய பெயர்களை நினைவு கூறச் சொன்னால் பெரும்பாலும்
கோவிலில் பூஜை செய்யும் பூஜாரியை ஞாபகம் வைத்திருப்பார். மற்ற பெயரை மறந்திருப்பார்.
ஏனென்றால் கோவிலில் பூஜை செய்பவரை தன்னை அறியாமலேயே மனதில் உருவகப்படுத்தி நினைவில் வைத்திருந்திருப்பார்.
8.
அடிப்படையில், ஞாபக சக்தி என்பது நமது
மூளையில் நியூரான்களுக்கிடையே ஏற்படும் ஒரு நெட்வொர்க். நம்முடைய ஒவ்வொரு எண்ணமும்,
உணர்வும், இந்த நெட்வொர்க்கை மாற்றியமைக்கக் கூடிய தன்மை வாய்ந்தது. ஆனால், நமது உடம்பின்
செல்கள் எப்படி இந்த ‘நினைவு மையத்தை’ ஏற்படுத்திக்கொள்கின்றன என்பதை இன்னமும் விஞ்ஞானம்
கண்டுபிடிக்கவில்லை.
9.
சாதாரணமாக ஒருவரின் மூளையில் ஒரு சமயத்தில்
சுமார் 7 தகவல்களைத்தான் கையாள முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுவும் கூட அந்த
7 தகவல்களின் மீது அவரது முழு கவனமும் இருந்தால்தான்.
10.
ஒருவருக்கு அதீதமான ஞாபக சக்தி இருந்தாலோ
அல்லது அதீதமான ஞாபக மறதி இருந்தாலோ விபத்துதான். மறதி என்பது இறைவன் கொடுத்த வரம்.
ஒரு தகவலை ஞாபகம் வைத்துக்கொள்ள
மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்து மனப்பாடம்
செய்யும் ROTE METHOD-ஐயே நம்பி வந்திருக்கிறோம். இப்பொழுதுள்ள கல்வி முறையில் ஒரு
பெருங்குறை என்னவென்றால் ‘டன்’ கணக்கில் புதுப் புதுத் தகவல்களை மாணவர்கள் மீது திணிக்கிறோம்.
ஆனால், அந்தத் தகவல்களை எப்படி நினைவு வைத்துக்கொள்வது என்பதைப் பற்றி எந்த யுக்தியைப் பற்றியும் பொதுவாக சொல்லிக் கொடுப்பதில்லை.
உதாரணத்துக்கு, ஒரு பெரிய எண்ணை நினைவு வைத்துக்கொள்ள அதை மூன்று அல்லது நான்கு துண்டுகளாக
பிரித்துக்கொண்டால் எளிதாகி விடுகிறது. உதாரணத்துக்கு 9846123594 என்ற செல்ஃபோன் எண்ணை
நினைவு வைத்துக்கொள்ள 984 612 3594 என்று மூன்று துண்டுகளாகவோ அல்லது 98 46 12 35
94 என்று ஐந்து துண்டுகளாகவோ நினைவு வைத்துக்கொள்வது எளிது.
ஒரு
முக்கியமான கேள்வி: 15 வயதில் நான் எப்படி இருந்தேன் என்பது
எனக்கு ஓரளவு ஞாபகம் இருக்கிறது. இன்று எப்படி இருக்கிறேன் என்பதும் எனக்குத் தெரிகிறது.
அந்த 15 வயதே ஆன என்னை இன்றைய எனக்குப் பக்கத்தில் நிறுத்தி வைத்தால் எத்தனையோ மாற்றங்கள்.
என்னுள்ளே அன்று இருந்த கோடிக் கணக்கான அணுக்கள் இறந்து போய் புதிய அணுக்கள் தோன்றி
விட்டன. இருந்தும் அன்று இருந்த என்னையும் இன்றைய என்னையும் பிணைத்து அந்த இருவருக்கும்
ஒவ்வொரு பொழுதிலும் ஏதோ ஒரு தொடர்ச்சி இருப்பது போல எனக்கு ஒரு மாயத் தோற்றத்தை என்னுள்ளே
ஏதோ ஒன்று ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது எது? ஆத்மா
, ஆவி ,
கடவுள் என்று எந்தப் பெயரும் வைத்துக்கொள்ளலாம் ஆனால் ஞாபக சக்தி என்று மட்டும்
ஒன்று இல்லாதிருந்தால் தொடர்ச்சி இருப்பது
போன்ற எண்ணம் நமக்கு ஏற்படுமா?
…ஒரு முழு நீள புத்தகமே
எழுதலாம் போலிருக்கிறது. அவ்வளவு தகவல்கள் இணைய தளத்தில்.
No comments:
Post a Comment