Total Pageviews

Sunday, February 12, 2017

12.02.17 ஆன்மீக மலரும் நினைவுகள் - பகுதி 1

12.02.17 ஆன்மீக மலரும் நினைவுகள் - பகுதி 1

நேற்று மாலை எதேச்சையாக ‘ஓம் ஜெயஜகதீச ஹரே’ என்ற ஆரத்தி பாடலை என் பேத்தியுடன் சேர்ந்து பாட நேர்ந்தது. ஐந்து வயதேயான தமிழ் அறியாத அந்தப் பெண் மழலைத் தமிழில் என்னுடன் சேர்ந்து பாடத் தொடங்க அதைத் தொடர்ந்து ‘சதா மந்த ஹாசம்’ என்ற ஸ்ரீஅம்மா பகவான் சத்சங்கத்தில் நான் அடிக்கடி விரும்பிப் பாடும் பாடலைத் கண்ணை மூடி பாடிக்கொண்டிருந்தேன். என்னை அறியாமல் என் கண்களில் நீர் சுரந்து கொண்டிருந்தது. என் ஞாபகங்கள் என்னை பழைய நாட்களுக்கு இழுத்துச் சென்றது.

1978-79 என்று ஞாபகம். சென்னையில் வங்கியின் பிரதானக் கிளை ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்த நேரம். ஒரு நாள் வங்கி வாடிக்கையாளர் ஒருவரை முதன் முதலாக சந்திக்க நேர்ந்தது. அவருடைய கடன் கணக்கு சம்பந்தமான சில சிக்கல்களைப் பற்றி பேச்சு வார்த்தைகள் முடிந்த பின்னர் கிளம்பும் பொழுது அவர் எதேச்சையாக என்னிடம் கேட்டார், “நாளை பாபா அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அவரை தரிசனம் செய்ய உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?” என்று. பகவான் சத்ய சாயிபாபா சென்னை வருகிறார் என்ற அளவில் செய்தித்தாள்களில் படித்திருந்தேனே தவிர அவரைத் தரிசிப்பது பற்றி நான் ஆலோசித்தது இல்லை. சென்னை சத்ய சாயி கமிட்டியில் தான் ஒரு முக்கிய அதிகாரி என்றும் பாபாவை தரிசனம் செய்ய  நான் வருவதென்றால் எனக்காக முன் வரிசையில் அமர்வதற்கு அவரால் ஏற்பாடு செய்து தர முடியும் என்றும் பின்பு அவரே கூறினார். நானும் வருவதற்கு சம்மதித்தேன்.

சொன்னபடி, அப்பொழுதிருந்த சென்னை ஆபட்ஸ்பரி மண்டபத்தில் நான் மதியம் ஆஜரானேன். அன்று விடுமுறை நாள். அதனால் கூட்டம் எக்கச் சக்கம். இந்தக் கூட்டத்தில் எப்படி நான் உள்ளே போக முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அந்த வாடிக்கையாளர் என்னை முகப்பிலேயே அடையாளம் கண்டு கொண்டார். என்னை மட மடவென்று உள்ளே கூட்டிக்கொண்டு போய் முதல் வரிசையில் பத்து பதினைந்து பேரில் என்னை அமர்த்தினார். என் மனைவி பெண்கள் வரிசையில் அமர்ந்து கொண்டாள். “பாபா கிண்டியில் ஒரு நிகழ்ச்சிக்கு முதலில் செல்கிறார். அது முடிந்து இங்கே வருவார். இங்கே பஜனை நடந்து கொண்டிருக்கும். அமர்ந்து ரசித்துக் கொண்டிருங்கள். எனக்கு இன்னும் பலரை சந்திக்க வேண்டியிருப்பதால் என்னைத் தேட வேண்டாம். நானே பின்னர் உங்களை சந்திக்கிறேன்,” என்று கூறி விடை பெற்றுக் கொண்டார்.

சிறிது நேரத்திலெல்லாம் பஜனை தொடங்கி விட்டது. பஜனைக் குழுவின் பாடகர்கள், இசைக் கருவிகளை இசைப்பவர்கள் என்று ஒரு சிறிய கூட்டம் எனது வலது பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்தது. மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் அமர்ந்திருந்தனர். பஜனை தொடங்கியவுடன் மண்டபத்தில் எல்லோரும் அமைதியாயினர்.

ஒரு தியான ஸ்லோகத்தோடு பஜனையை கணீரெனத் தொடங்கிய ஒரு பெண்மணி ‘கஜவதனா கஜானனா’ என்ற பாடலை உச்சஸ்தாயியில் பாட ஓரு நிமிடம் நான் ஸ்தம்பித்து  நிமிர்ந்து உட்கார்ந்தேன். அப்படியொரு இனிமையான, சுண்டி இழுக்கக்கூடிய ஒரு குரலை முதன் முதலாக நேராகக் கேட்ட பொழுது எனக்கு மயிர் சிலிர்த்தது. என்னை அறியாமல் என் கண்களில் நீர் முட்டியது. தொடர்ந்து பல பஜனைப் பாடல்கள். நான் கண்களை மூடி பாடல்களைக் கேட்கத் தொடங்கினேன். ஒவ்வொரு பாடலுக்கு என் கண்களிலிருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு கொட்டத் தொடங்கியது.

இடையில் மேடையிலிருந்து ஒரு அறிவிப்பு. பாபா அவர்கள் கிண்டி நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்து விட்டார். அது முடிந்ததும் நேரே ஆபட்ஸ்பரிக்குத் தான் வரப் போகிறார். அது வரை பஜனைகள் தொடரும் என்று.

பஜனை தொடர்ந்தது. முதன் முறையாக பஜனைப் பாட்டுகளில் என்னை இழந்தேன். சிறு வயதில் எங்கள் தெருவிலிருந்த பஜனை மடத்தில் மார்கழி மாத பஜனைக்கு விளையாட்டாக சென்று வந்திருக்கிறேன். திரு முருகதாஸ் அவர்களின் பஜனை கேட்டிருக்கிறேன். டீ.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பக்திப் பாடல்களை விரும்பிக் கேட்டிருக்கிறேன். அவை எதிலிலுமே இல்லாத ஒரு ஈர்ப்பு, ஈடுபாடு அன்று நான் கேட்ட பாபா பஜனையில் இருந்தது. என்னவென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. ஆனால், தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்துக்கு பஜனை நடந்து கொண்டிருந்தது. நேரம் கடந்து கொண்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. என் கவனம் முழுவதும் பாட்டிலிலேயே இருந்தது. தொடர்ந்து நான் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தேன். கண்களிலிருந்து நீர் என்னால் அடக்க முடியாமல் கொட்டிக் கொண்டிருந்தது. பாபாவைப் பற்றியெல்லாம் கூட நான் யோசிக்கவில்லை.

மீண்டும் ஒரு அறிவிப்பு. பாபா அவர்கள் அன்றைக்கு ஆபட்ஸ்பரி வருவது ரத்தாகிவிட்டது. கிண்டியிலேயே அதிக தாமதமாகி விட்டதால் அவரால் வர இயலவில்லை என்று.
பஜனையும் அடுத்த ஒன்றிரண்டு பாடல்களுடன் நிறைவு செய்யப்பட்டது. ஆயிரத்துக்கும் மேலாக கூடியிருந்த அந்தக் கூட்டம் எந்த அமளியுமில்லாமல் அமைதியாக வெளியேறியது. யாருக்கேனும் பாபா வரவில்லையே என்ற ஏமாற்றம் இருந்திருந்தால் கூட அதை யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

வெகு நேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்து நானும் அமைதியாக வெளியேறினேன். என் நண்பரைக் கூடத் தேடவில்லை. மனைவியிடமும் அதிகமாக பேசவில்லை. மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்ச்சி. சோகம் என்றும் சொல்லலாம். பஜனைப் பாடல்களோடு பாடல்களாக உள்ளுக்குள்ளே அழுதிருக்கிறேன். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. பாபா வரவில்லையே என்ற ஏமாற்றமோ வருத்தமோ எனக்கு ஏற்படவில்லை.

அதற்குப் பிறகு பல ஞாயிற்றுக் கிழமைகளில் ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த பாபாவின் சுந்தரம் கோவிலுக்குப் போய் கூட்டத்தோடு கூட்டமாக பஜனையைக் கேட்டு வருவேன். சரியான நேரத்துக்கு துவக்குவார்கள். சரியான நேரத்துக்கு முடித்து விடுவார்கள்.

ஆனால், 1980-ல் வட இந்தியாவுக்கு மாற்றலாகிப் போன பின்பு பாபா இயக்கத்துடன் எனக்கு ஏற்பட்ட ஒரு பிணைப்பு அறுந்து விட்டது. ஆனால், பாபா பஜனையில் எனக்கு ஏற்பட்ட உணர்வு பூர்வமான அனுபவம் பின்பு ஸ்ரீஅம்மா பகவான் இயக்கத்தில் மீண்டும் கிடைத்தது. அப்பொழுதுதான் ஒரு தெய்வீக சக்தியுடன் எனக்கு ஒரு பிணைப்பு இருப்பதை முதன் முதலில் உணர்ந்து கொண்டேன்.

            
             அதைப் பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்…

No comments:

Post a Comment