13.11.16 இந்த வார நாட்குறிப்பு
கடந்த வாரத்தில் இரண்டு
பெரிய பூகம்பங்கள் வெடித்ததில் வேறெதுவும் மனதில் ஓடாமல் வாரம் கழிந்தது. எல்லோருக்கும்
தெரிந்த விஷயங்களானாலும் அதைப் பற்றியும் கொஞ்சம் எழுத வேண்டியிருக்கிறது.
முதலாவது, 500 மற்றும்
1000 ரூபாய்த் தாள்கள் அன்றிரவு 12 மணிக்கு மேல் செல்லுபடியாகாது என்ற பிரதமர் மோடியின்
8-ஆம் தேதி புதன் கிழமை இரவு 8 மணி அறிவிப்பு. அன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்
முடிவுகளை உலகம் முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம். அந்தச் செய்தியையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார்
மோடி அவர்கள். இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகள். கணக்கில் வராத 500 மற்றும்
1000 ரூபாய்த் தாள்களாக பதுக்கி வைத்திருந்த பண முதலைகள் அன்றிரவு 12 மணிக்குள் எப்படி
தங்களிடம் உள்ள தாள்களை மாற்றுவது என்று புதுப் புது உத்திகளைத் தேடிக் கொண்டிருந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
முடிவுகள் 9—ஆம் தேதி (இந்திய நேரம்) வெளி வந்த பொழுது டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றது
பலருக்கு இரண்டாவது அதிர்ச்சி. அவரை எதிர்த்து நின்ற ஹிலாரிக்கு ஆஃப்ரிக்கன்-அமெரிக்கர்கள்,
மெக்சிகர்கள், அமெரிக்க பெண்மணிகள், வேற்று நாடுகளிலிருந்து அமெரிக்கா குடிபுகுந்தவர்கள்,
இப்படி பலருடைய ஆதரவு மட்டுமில்லாமல் வெளியுறவுச் செயலராகப் ஒபாமாவின் கீழ் 4—ஆண்டுகள்
பணி புரிந்த அனுபவம் வேறு. இவையெல்லாவற்றையும் மீறி அரசியலில் நேரடி அனுபவம் எதுவுமில்லாத
ட்ரம்ப் வெற்றி பெற்றது அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக அளவில் பலரை உலுக்கியது.
பிரதமரின் அறிவிப்பு பற்றி
வேறொருவர் மூலம் கேள்விப்பட்டு முழு விவரம் தெரிந்துகொள்வதற்கு தொலைக்காட்சிப் பெட்டியை
ஆன் செய்தேன். பிரதமரின் உரை முடிந்த பிறகு எல்லா சேனல்களிலும் அவர் அறிவிப்பைப் பற்றிய
செய்திகளும் அதைச் சார்ந்த விவாதங்களும் தான் ஓடிக்கொண்டிருந்தன.
நான் முக்கியமாக குறிப்பிட்டு
சொல்ல விரும்பியது புதிய தலைமுறையின் ரங்கராஜ் பாண்டேயின் கருத்தரங்கத்தைப் பற்றி.
பிரதமரின் அறிவிப்பின் முக்கியமான பகுதிகளை அவர் மீண்டும் மீண்டும் வலியுறித்தி சொன்னாலும்
அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விதம் மொத்தத்தில் எதிர்மறையாக இருப்பது போலவே தோன்றியது.
பிரதமரே தன்னுடைய உரையில்
500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை புழக்கத்திலிருந்து நீக்குவதால் தற்காலிகமாக பல இடைஞ்சல்கள்
சாதாரண மக்களுக்கு நேரலாம், இருந்தாலும் பொதுவான நாட்டு நன்மையை உத்தேசித்து மக்கள்
அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். சாதாரண பொது மக்களை
நிச்சயம் பாதிக்கும் என்று தெரிந்தும் பொது மக்கள் பாராட்டாத அப்படிப்பட்ட ஒரு முடிவை
பொதுவான நாட்டு நலன்களுக்காக – முக்கியமாக இந்தியாவில் கறுப்புப் பணம் ஒழிய வேண்டும்
என்ற நோக்கத்தோடு - துணிந்து மோடி எடுத்திருக்கிறார். ஒரு உண்மையான தலைவர் தன் தொண்டர்கள்
விரும்பும், பாராட்டும் முடிவுகளை மட்டும் எடுக்காமல் அவர்களுக்கு எது நல்லதோ அந்த
முடிவை அவர்கள் விரும்பாவிட்டாலும் எடுப்பார். அப்படித்தான் மோடியும் செயல்பட்டிருக்கிறார்.
ஆனால், பல்வேறு இடங்களில்
தேடித் தேடி மக்களின் பிரச்சினைகளை திரும்பத் திரும்பக் காட்டிக் கொண்டிருந்தது வேண்டுமென்று
எதிர்மறையான கருத்துக்களை உருவாக்குவதற்காகவே காட்டியது போல இருந்தது. அதே போல அடுத்த
இரண்டு நாட்களிலும் பொதுமக்கள் எல்லோரும் அவதிப்படுவது போலவே மீண்டும் மீண்டும் காட்டிக்கொண்டிருந்தார்கள்.
நான் கேள்விப்பட்ட வரையிலும்
பல இடங்களில் பொது மக்கள் மோடியின் அறிவிப்பை பல கஷ்டங்களிடையே சரியான முறையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
வங்கிகளிலும் எந்தப் பிரச்சினையும் செய்யாமல்
நெடு நேரம் காத்திருந்து வங்கிகளோடு ஒத்துழைத்திருக்கிறார்கள்.
வங்கியில் பணி புரிபவர்களும் வங்கிக்கு வந்திருந்த எல்லாரையும் நல்ல முறையில் கவனித்து
முடிந்த அளவு உதவி செய்திருக்கிறார்கள். அதையெல்லாம் தொலைக்காட்சியில் காட்டவில்லை.
எப்படிக் காட்டுவார்கள்? இந்த தொலைக்காட்சி சேனல்கள் எல்லாமே பல பெரிய பண முதலைகளுக்குச்
சொந்தமானதுதானே.
மோடி அரசின் முடிவால் நிச்சயமாக
பலருக்கு கஷ்டங்கள் இருந்திருக்கும் என்பதையும் நான் நம்புகிறேன். மறுக்க முடியாது.
ஏனென்றால் எனக்கே கஷ்டம் இருந்திருக்கிறது.
சென்னையில் கடந்த ஆண்டு
வெள்ளம் வந்தபோது எவ்வளவு மக்கள் அவஸ்தைப் பட்டார்கள் என்பதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு எங்கேயோ போய் ஒளிந்துகொண்டதை எத்தனை பேர் இன்னும் ஞாபகம்
வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அந்த சமயம் சென்னையை சுற்றி மின்சாரம் கிடையாது. தண்ணீர்
கிடையாது. போக்குவரத்து கிடையாது. பால் கிடையாது. எத்தனையோ கஷ்டங்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
1991-ல் இந்தியாவில் இறக்குமதி
செய்யப்படும் பொருட்களுக்கு பணம் கொடுக்க நமது நாட்டில் அன்னியச் செலவாணி இல்லை. அப்பொழுது
இருந்த பிரதமர் சந்திரசேகர் அரசாங்கமும் (ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. வெங்கிடரமணனும்)
துணிந்து இந்தியாவிலிருந்த தங்கத்தை இங்கிலாந்திலும், சுவிட்சர்லாந்திலும் அடகு வைக்க
முடிவெடுத்தது நமது நாடு திவாலாகாமல் காப்பாற்றியது. ஆனால், தங்கத்தை அடகு வைத்தபோது
இதே போலத்தான் நாட்டு மக்கள் (பல அறிவு ஜீவிகள் என்று படிக்கவும்) ‘தங்கத்தை அடகு வைப்பதா?’
என்று கொதித்தெழுந்தனர்.
மோடியின் அறிவிப்புக்குப்
பிறகு பல இடங்களில் சாதாரண பொதுமக்கள் பீதியடைந்திருக்கிறார்கள் என்பது போலத்தான் தோன்றியது.
பிரதமரின் அறிவிப்பு வந்த உடனேயே எல்லோரும் இரவு ஒன்பது – பத்து மணிக்கு மேல் பெட்ரோல்
பங்க்குகளுக்கு கூட்டம் கூட்டமாக விரைந்திருக்கிறார்கள். குழந்தைக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் வாங்க
முடியவில்லை என்று ஒரு சில தாய்மார்களின் அழுகை. சாப்பாட்டுக்கு கையில் இருக்கும்
500 ரூபாய்த் தாளைப் பயன்படுத்த முடியவில்லை என்று பலருக்கு கோபம், இப்படிப் பலரின்
எதிர்மறை வெளிப்பாட்டையே மாறி மாறிக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சிகளின் நோக்கமே எதிர்மறையாக இருந்தது போலத் தோன்றியது.
பணத்தை பதுக்கி வைத்திருந்த பலர் நகைக் கடைகளுக்கு ஓடி இரவு 12 மணி வரை பல நகைக் கடைகள்
திறந்திருந்ததை எந்தச் சேனலும் காட்டியதாகத் தெரியவில்லை. எப்படிக் காட்டுவார்கள்?
பொறுப்புள்ள செய்தி நிறுவனமாக
இருந்திருந்தால் பிரதமரின் அறிவிப்பின் நல்ல அம்சங்களை, அதன் நோக்கத்தை, அதனால் ஏற்படக்கூடிய
நல்ல மாற்றங்களைப் பற்றி பாசிடிவ்வாகவும் காட்டியிருக்கலாம். என்று எனக்குத் தோன்றியது.
9-ஆம் தேதி புதன் கிழமை
காலை 9;15 மணிக்கு பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொள்வதற்காக கம்யூட்டரை திறந்து
வைத்துக்கொண்டு ‘திக் திக்’ என்று காத்திருந்தேன். எதிர்பார்த்தது படி மார்க்கெட் விழுந்தது.
மும்பை பங்குச் சந்தை 1600 புள்ளிகள் விழுந்தது. கம்ப்யூட்டர் திரை முழுவதும் ரண களமாக
சிவப்பு நிறத்தை காட்டிக்கொண்டிருந்தது. வைத்த
கண் மாறாமல் ஒரு அரை மணி நேரம் பார்த்திருந்தேன்.
நான் எதிர்பார்த்தது போல பல பங்குகள் மீண்டும் ஏறத் தொடங்கின. 9.15க்கு நான்
ஒரு லட்சம் ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் அந்த அரை மணி நேரத்தில்
20-லிருந்து 25-ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்திருக்கலாம். என்ன செய்வது 9.15-க்கு அந்த
தைரியம் வரவில்லையே!
கம்ப்யூட்டர் திரை இப்பொழுது
ND TV-யில் அமெரிக்க அதிபர் தேர்தலைப் பற்றிய ப்ரணாய் ராயின் கணிப்பு மற்றும் கருத்தரங்கத்துக்குத்
தாவியது. ஹிலாரிக்கும் ட்ரம்புக்கும் இடையே ஓட்டு எண்ணிக்கை இடைவெளி முப்பதுக்கும்
மேல் என்ற அளவில் ஓடிக்கொண்டிருந்தது. அந்த இடைவெளி குறையாமல் கூடிக்கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் ட்ரம்ப் 248 எண்ணைத் தொட்டுவிட்டார். சரி, இனிமேல் மீதமிருக்கக்கூடிய
எல்லா இடங்களிலும் ஹிலாரி வென்றாலொழிய அதிபர் கனவை அவர் மறந்துவிட வேண்டியதுதான் என்று
முடிவு செய்தேன். இன்னும் ஒரு அரை மணி நேரம் கழித்து கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தால்
ட்ரம்ப் 270-இலக்கைத் தாண்டியிருந்தார். அவருடன் சேர்ந்து துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட
பென்ஸ் வெற்றி முழக்கம் செய்துகொண்டிருந்தார். ஒரு சில நிமிடங்களில் ட்ரம்ப் அவருடைய
பரிவாரங்களுடன் (முக்கிய ஆதரவாளர்களும் பின் தொடர) மேடைக்கு வந்து ஒரு ராஜ நடை போட்டார்.
இந்த முறை அமெரிக்க தேர்தலில் 231 மில்லியன் வாக்காளர்களில் 133 மில்லியன் வாக்காளர்களே
(அதாவது 57.6% சதவிகிதம்) தங்கள் ஓட்டை பதிவு செய்திருந்தனர். மீதி வாக்காளர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் யாரை
ஆதரிக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன இரண்டு போட்டியாளர்களையும் பிடிக்கவில்லையா? ஓட்டு
சதவிகிதம் கூடியிருந்தால் முடிவு எப்படி இருந்திருக்கும்? ஓட்டு பதிவு செய்தவர்களின்
விகிதம் இந்தியாவை விட மிகக் குறைவு. இவ்வளவுக்கும் அங்கே அதிபர் தேர்தலுக்கு சுமார்
46 மில்லியன் வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தை தேர்தலுக்கு முன்னேயே பதிவு செய்திருந்தனர்.
நான் எழுதி வெளியிட்ட புத்தகங்களை
அறிமுகம் செய்வதற்காக இந்த வாரத்தில் ஒரு நாள்
ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஒரு புத்தகத்தின் விலை நூறு ரூபாய் என்று நிச்சயித்திருந்தேன்.
இந்த ஆண்டு இது வரை சுமார் 15 பள்ளிகளில் என்னுடைய புத்தகத்தை 100 ருபாய் கொடுத்து
வாங்கிக் கொண்டிருக்கின்றனர். பள்ளி மாணவர்களின்
பயனுக்காக வாங்கும்பொழுது சுமார் 30 சதவிகிதம் விலையைக் குறைத்துக் கொடுத்து வருகிறேன்.
ஆனால், நான் சென்ற பள்ளியின் முதல்வர் என்னுடன் என் புத்தகத்தை வாங்குவதற்கு விலையில்
பேரம் பேசினார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நான் தீர்மானமாக அந்த பள்ளி முதல்வரிடம்
கூறினேன், “பள்ளிகளுக்கு என்னுடைய புத்தகத்தை இலவசமாக அன்பளிப்பாக கொடுப்பதில்லை. எல்லா
பள்ளிகளிலும் 100 ரூபாய் விலை கொடுத்தே வாங்கிக்கொண்டிருக்கின்றனர். எல்லா முதல்வர்களிடமும்
நான் சொல்லியிருக்கிறேன். என் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். என் புத்தகம் உங்கள்
எதிர்பார்ப்புக்கு வரவில்லையென்றால் நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்,
புத்தகத்தை நீங்களே வைத்துக்கொள்ளலாம் என்று. அதையே உங்களுக்கும் சொல்கிறேன்.” அப்படிச்
சொன்ன பிறகும் அந்த முதல்வர் என்னுடைய மூன்று புத்தகங்களுக்கும் 250 ரூபாய் தருவதாகச்
சொல்லிப் பேரம் பேசினார். நான் இறுதியாகச் சொன்னேன், “மன்னிக்க வேண்டும், என்னுடைய
புத்தகத்தை விற்பதற்காக நான் பேரம் பேச விரும்பவில்லை,” என்று. அடுத்த இரண்டு நிமிடங்களில்
அந்தப் பள்ளியை விட்டு வெளியேறி விட்டேன். ஒரு தொழில் வல்லுனரின் புத்தகத்தை வாங்கிக்கொள்வதற்கு
இப்படியும் ஒரு பள்ளியில் பேரம் பேசுவார்களா என்று எனக்கே வெட்கமாக இருந்தது. ஒரு தொழில்
வல்லுனருக்குரிய மரியாதையை அவருக்கு எப்பொழுதும் கொடுக்க வேண்டும், அவருடன் பேரம் பேசக்கூடாது
என்று நினைப்பவன் நான். யாருடன் கணக்கு வழக்கு நான் வைத்துக்கொள்ளக்கூடாது என்று இந்த
நிகழ்வு முன் கூட்டியே காட்டிக் கொடுத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.
…அடுத்த வாரம்
மீண்டும் சந்திக்கலாம்.
No comments:
Post a Comment