Total Pageviews

Tuesday, November 22, 2016

20.11.2016 இந்த வார நாட்குறிப்பு

20.11.2016 இந்த வார நாட்குறிப்புகடந்த வாரம் முழுவதும் எங்கே திரும்பினாலும் பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாததின் தாக்கத்தைப் பற்றியே இருந்தது. பல இடங்களில் சகஜ நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டிருப்பது போலவே தோன்றுகிறது. சராசரி மக்களுக்கு ஒரு வாரத்துக்கு எவ்வளவு பணம் தேவைப்படுமோ அந்த அளவு பணம் பொதுவாக கிடைத்துக் கொண்டிருந்தது என்றுதான் தோன்றுகிறது. அடிமட்ட மக்களுக்கு அதுவும் கிராமப் புற மக்களுக்கு, அதிலும் குறிப்பாக வங்கிகளின் சேவையை அதிகமாக பயன்படுத்தாதவர்களுக்கு சில சங்கடங்கள் இருந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த வகையைச் சேர்ந்த மக்களை வங்கிச் சேவைக்குள் கொண்டு வரவேண்டும் (inclusive banking) என்ற அரசாங்கத்தின் அடிப்படை எண்ணம் மோடி ஆட்சி வந்த பிறகு எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுது தூங்கியவர்கள் இப்பொழுது அவஸ்தைப் படுகிறார்கள். அரசாங்கத்தின் பல நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்கள் இந்த அடிமட்ட ஏழை மக்கள் தான்.

இருந்தும், பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாது என்ற மோடியின் அறிவிப்பிற்குப் பிறகு பொதுவாக எந்த வங்கியிலும் ரகளை நடக்கவில்லை. (பல அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன போலத் தோன்றுகிறது) ஒரு சில சங்கடங்களுக்கிடையே பெரும்பாலான மக்கள் கிடைக்கும் பணத்தை வைத்துக்கொண்டு சமாளிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும், கீழ்மட்ட மக்களிடையே கொஞ்சம் தேவையில்லாத பீதி இருப்பதும் தெரிகிறது. பெரும்பாலான தொலைக்காட்சிகள் எதிர்மறையாக கருத்துக்களையே பரப்பி வருவதாகத் தெரிகிறது.

தங்கள் வங்கிக் கணக்குகளை பதுக்கல்காரர்களுக்கு வாடகைக்கு கொடுத்த பல சாமானிய மக்கள் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் பணப் பரிமாற்றத்துக்கு விரல்களில் மை வைக்க ஆரம்பித்த பிறகு பல வங்கிகளில் நீள வரிசைகள் மறைந்துவிட்டன.

வட இந்தியாவில்தான் அதிகமான எதிர்ப்புகள் இருப்பது போலத் தோன்றுகிறது. அங்கேதான் படிக்காதவர்கள் அதிகம் இருக்கிறார்கள் போலும். முக்கியமாக பின் தங்கிய மானிலங்களான உ.பி, பிஹார் போன்ற இடங்களில். அங்கேதான் படிக்காதவர்களையும், ஏழைகளையும் வைத்து அரசியல் செய்வது இந்தியா சுதந்திரம் அடைந்த நாட்களிலிருந்து வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது.

அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள் செல்லுபடியாகாமல் போனதிலிருந்து பல எதிர்க் கட்சிகளுக்கு ஏழை பாழைகள் மீது அதீதமாக கருணை பொங்கி வழிகிறது. பா.ஜ.க அரசாங்கத்தை அடி, அடியென்று அடிப்பதற்கு இன்னொரு ஆயுதம் அவர்கள் கையில் கிடைத்திருக்கிறது. வழக்கம் போல நாடாளுமன்றம் செயல்படாமல் செய்திருக்கின்றனர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த பொழுதும் எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க பாராளுமன்றத்தை வேறு பல காரணங்களுக்காக ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இனி எதிர்காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தொடரும் என்று  நம்புவோமாக.

இவ்வளவு ரகளையிலும் பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ரொம்பவும் அடக்கி வாசித்து வருகிறார். ஓரளவு நேர்மையாக ஆட்சி நடத்த வேண்டும் என்று முனைபவர்களில் அவரும் ஒருவர் என்று நான் நம்புகிறேன். துணிச்சலாக மதுவிலக்கை அமல் படுத்தியிருக்கிறார். ஆனால், லாலுக் கட்சியுடன் கூட்டணிதான் நெருடலாக இருக்கிறது.

மதுரை ரயில் நிலையத்தில் தென்காசி வருவதற்கு நான் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னே நின்றிருந்துவர் பழைய ஒரு 500 ரூபாய்த் தாளைக் கொடுத்து விருதுநகருக்கு ஒரு டிக்கட் கேட்டார். டிக்கெட் பத்து ரூபாய்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். டிக்கெட் கௌண்டரில் இருந்த பெண்மணி எந்த எதிர்ப்பும் சொல்லாமல் டிக்கெட்டையும் கொடுத்து மீதிப் பணத்தையும் நூறும் பத்துமாகக் கொடுத்தார்.  விருதுநகருக்கு டிக்கெட் வாங்கியவர் கண்டிப்பாக விருதுநகருக்கு பயணப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். யாருக்கு உதவி செய்யவோ அல்லது கமிஷனுக்காகவோ 500 ரூபாயை மாற்றிக் கொடுத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.

ஆங்கிலத்தில் நான் எழுதி வெளியிட்ட “THE PATH” என்ற கதைப் புத்தகத்தின் முதல் பிரதி www.pothi.com-லிருந்து என் கைக்கு வந்து சேர்ந்தது. புத்தகத்தின் அட்டை மிக நன்றாக வந்திருந்தது பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தென்காசி சுந்தரம் பிரஸ் ப்ரகாஷ் அவர்களுக்கு மீண்டும் நன்றி. THE PATH நூலை நீங்களும்தான் படித்துப் பாருங்களேன்.

                                                            … மீண்டும் சந்திக்கலாம்.No comments:

Post a Comment