Total Pageviews

Sunday, December 25, 2016

25.12.16 இந்த வார நாட் குறிப்பு - பகுதி 1

25.12.16 இந்த வார நாட் குறிப்பு
பகுதி 1

அமெரிக்காவில் செலவிடும் நாட்களில் எனக்கென்று தனியாக ஒரு வெளி உலக வாழ்க்கை கிடையாது. அதனால், தினப்படியான தனிப்பட்ட வெளி உலக அனுபவமும் குறைவு. குழந்தைகளுடனும் பேரக் குழந்தைகளுடனும் செலவிடும் ஒரு சில மணி நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தனிமைதான் நமது வாழ்க்கை. இங்கே வருவதென்றால் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு நம்மை தயார் செய்துகொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், வயதான பிறகு குழந்தைகளுடன் கொஞ்ச காலத்தை செலவிட அமெரிக்காவுக்கு அடிக்கடி வரும் என்னைப் போன்றவர்களுக்கு அமெரிக்க வாழ்க்கை நரகமாகிவிடும்.

பொதுவாக, குழந்தைகள் கூட்டிக்கொண்டு போகாமல் நம்மால் தனியாக வெளியே எங்கும் போக முடியாது. அதே போல குழந்தைகளின் நண்பர்கள்தான் நமக்கும் இங்கு நண்பர்கள். பொதுவாக சந்திக்கும் நேரங்களில் மிகவும் மரியாதையாகவே நம்மை நடத்துகிறார்கள். இருந்தும் என்ன காரணத்தினாலோ அவர்களுடன் நெருங்கிப் பழக முடிவதில்லை. அவர்களும் நம்மிடம் ரொம்ப நெருங்குவதில்லை. தனிமைதான் நமது முக்கிய நண்பர்.

என்னிடம் அமெரிக்க வாகன ஓட்டுனர் உரிமம் இருந்ததால் கடந்த வாரம் நானே என் மகளின் காரை ஓட்டிக்கொண்டு போய் பொது நூலகத்தில் நூலக உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டேன். புத்தகங்கள்தான் இங்கே வரும் நேரங்களில் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள். மற்றபடி பொழுது போக்குவதற்கு NETFLIX, AMAZON PRIME VIDEO, ONLINE LIBRARY AP, இப்படி எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டு விட்டேன். இதற்கு முன்னால் வந்த நேரத்தில் BREAKING BAD, 24, HOUSE OF CARDS போன்ற தொலைக் காட்சித் தொடர்களை ரசித்துப் பார்த்திருக்கிறேன்.

என்னுடைய ஓய்வு நேரத்தை பொழுது போக்கிலேயே செலவிடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. நமது வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் ஆக்கவளமுடையதாக இருக்க வேண்டும் என்று நம்புபவன் நான். புகார்கள் சொல்லாமல், உருப்படியாக எனது நேரத்தை செலவிடுவதற்காக இந்தியாவிலிருந்து பல ஸ்லோகப் புத்தகங்கள், ஒரு சில ரெஃப்ரென்ஸ் புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறேன். இந்த முறையும் வழக்கம் போல ஒரு சில செயல் திட்டங்களுடன் தான் வந்திருக்கிறேன்.

  1.    துப்பறியும் சங்கர் என்ற தலைப்பில் ஐந்து நீண்ட சிறு கதைகள் அடங்கிய புத்தகம் எழுத வேண்டும். சங்கர் ஒரு பள்ளி மாணவன். இளம் துப்பறிஞர். சேகர், சுதா இவரது இணை பிரியா நண்பர்கள். இந்த மூவர் அணி பல சின்னச் சின்ன குற்றங்களை துப்பறிந்து கண்டு பிடித்திருக்கிறது. இந்தப் புத்தகத்தின் முதல் கதையைத் தொடங்கி விட்டேன். பாதிக்கு மேல் கதையை எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் நிறுத்தி வைத்திருக்கிறேன். துப்பறியும் கதைகளை எழுதுவதற்கு குறுக்கு வழிகளில் யோசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இப்பொழுது உணர்கிறேன். ஃபேஸ்புக்கில் நண்பர்களிடம் ஐடியா கேட்கலாம் என்று நினைக்கிறேன். (எழுத்தாளர் சுஜாதா முன்னொரு சமயம் ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் கருத்தைக் கேட்டு ஒரு தொடர் கதையை எழுதியிருக்கிறார் என்று ஞாபகம்.) (என்னுடைய முதல் ஆங்கில சிறு கதைகள் அடங்கிய புத்தகத்தில் இதே சங்கர் பாத்திரத்தைக் கொண்டு ஒரு சிறு கதை எழுதியிருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால்தான் அது போன்று தமிழிலும் எழுதலாம் என்று நினைத்தேன்.)
  2.    ஆங்கிலத்தில் LONELY என்ற ஒரு முழு நீளக் கதைப் புத்தகத்தை ஏற்கெனவே எழுதி வெளியிட்டிருக்கிறேன். அதனுடைய தொடர்ச்சியாக LONELY 2 என்ற இன்னொரு முழு நீளக் கதையை எழுதலாம் என்று எண்ணம். கதைக்கான கரு தயாராகிவிட்டது.
   3.    மாணவர்களுக்காக கடந்த ஆண்டு I WANT TO KNOW ABOUT…INDIA, ITS STATES, AND THE IMPORTANT CITIES” என்ற தலைப்பில் ஒரு பொது அறிவு புத்தகத்தை E-BOOK-ஆக வெளியிட்டிருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்தப் புத்தகத்தையொட்டி ஜூலை 2016-ல் ஒரு வினாடி-வினா போட்டியும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிடையே வெற்றிகரமாக நடத்தியிருக்கிறேன். அதே போல இன்னொரு பொது அறிவுப் புத்தகம் எழுதலாம் என்று எண்ணம். எதைப் பற்றி என்று இன்னும் தீர்மானமாகவில்லை.
    4.    கர்னாடக சங்கீதத்தை எனக்கு ரசிக்கத்தான் தெரியுமே தவிர அதைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது. பல பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டு என்ன ராகத்தில் அவை அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த முறை ஒரு சில ராகங்களைத் தேர்ந்தெடுத்து அந்த ராகத்தில் அமைந்த பல பாடல்களை உன்னிப்பாகக் கேட்டு ராகங்களைப் பற்றிய அறிவை இன்னும் கொஞ்சம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு தீர்மானமும் வைத்திருக்கிறேன்.
  5.    ஏற்கெனவே எனக்குத் தெரிந்த சமஸ்க்ருதம் மொழியை இன்னும் கொஞ்சம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு சில புத்தகங்களை இந்தியாவிலிருந்து கொண்டு வந்திருக்கிறேன்.
  6.    இந்தியாவில் இருக்கும் பொழுது எவ்வளவு முயன்றும் யோகா பயிற்சியை தினமும் செய்ய முடியவில்லை. டயபடிக் என்பதால் எப்படியும் தினமும் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதில் சமரசம் செய்வதில்லை. அமெரிக்கா வந்த இந்த முறையாவது யோகாவை தினமும் செய்ய வேண்டும் என்றும் ஒரு தீர்மானம்.

ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு செயல் திட்டத்துடன் தான் நான் அமெரிக்க வருகிறேன். ஒரு சில செயல் திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. ஒரு சில முடிவதில்லை.   நிறைவேறிய குறிக்கோளைப் பற்றி மகிழ்ச்சி. நிறைவேறாமல் விட்டுப்போனவைகளைப் பற்றி மன வருத்தம் கிடையாது. எதிர்மறையான அபிப்பிராயங்களை சுமந்துகொண்டு வாழ்க்கையை நான் நடத்த விரும்பவில்லை. எது வாழ்க்கையில் நடக்கிறதோ அதை விரும்பி ஏற்றுக்கொண்டு அதையே எனக்கு சாதகமாக்கிக்கொள்வது தான் என்னுடைய நெடு நாளைய பழக்கம். வாழ்க்கை எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

பார்க்கலாம், இந்த முறை எது எதை என்னால் நிறைவேற்ற முடிகிறது என்று.

*****