Total Pageviews

Sunday, December 25, 2016

25.12.16 இந்த வார நாட் குறிப்பு பகுதி 2: என் இளமைக் கால தீவிர ஆசைகள்…

25.12.16 இந்த வார நாட் குறிப்பு
பகுதி 2: என் இளமைக் கால தீவிர ஆசைகள்…

என்னுடைய ஐந்து வயது பேத்தி பல நேரங்களில் எதை எதையோ கற்பனை செய்துகொண்டு என்னென்னவோ பேசுவாள் அல்லது கேட்பாள்…ஆங்கிலத்தில்தான்…அவள் பேசுவதில் பாதி எனக்குப் புரிவதில்லை…அவளது அமெரிக்கன் ஆங்கில உச்சரிப்பு எனக்குப் புரிவதில்லை. தமிழைப் புரிந்துகொள்கிறாள். ஆனால், பேசுவதில்லை. நாம் திருப்பி ஏதேனும் கேட்டால், JUST PRETEND என்று கூறுவாள். ஒரு ஆசிரியை போல, ஒரு பாடகி போல, ஒரு இசையமைப்பாளர் போல, இன்னும் பல கற்பனைகள் அவளுக்கு இந்த வயதிலேயே. அப்படியே நடித்துக் காட்டுகிறாள். ஆம், மனதில் எதையோ கற்பனை செய்துகொண்டு நடிக்கும் பழக்கம் சிறு வயதிலேயே ஆரம்பித்து விடுகிறது.

என்னுடைய  நினைவுகள் என் பழைய காலத்துக்கு ஓடியது. நானும் சிறு வயதில் என்னென்ன கற்பனை செய்திருக்கிறேன். என்னென்ன அடைய வேண்டும் என்று தீவிர ஆசை கொண்டிருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தேன்.

நான் வளர்ந்த திருநெல்வேலியில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திருவிழா நடக்கும். அந்த சமயம் நகரசபைக்கு எதிரே இருந்த ஒரு திறந்த வெளியில் பொருட்காட்சி நடக்கும். பொருட்காட்சியில் என்னைக் கவர்ந்த ஒரு சில விஷயங்கள் மரணக் கிணறு, ஜி.டி. நாயுடுவின் ஷோ ரூம் (தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயத்தில் அவரின் புது முயற்சிகள், பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இப்படி பல அம்சங்கள் இருக்கும்), சினிமாக் கலைஞர்களின் இன்னிசைக் கச்சேரி, சர்கஸ் இப்படி ஒரு சில.

எனக்கு என்றுமே திரையிசையின் மீது பலமான ஈர்ப்பு சிறு வயதிலிருந்தே இருந்திருக்கிறது. கோடை காலங்களில் பல தெரு முனைக் கோவில்களில் கொடை என்ற பெயரில் மழை வேண்டி விழாக்கள் நடக்கும். அந்த விழாக்கள் நடக்கும் சமயம் மாலை நேரங்களில் உள்ளூர் (சில சமயம் வெளியூர்) கலைஞர்களின் திரையிசை இன்னிசைக் கச்சேரி நடக்கும். அவர்கள் பல வித வாத்தியக் கருவிகளுடன் நிகழ்ச்சி நடத்துவதை திறந்த வாய் மூடாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். மறைந்த எம்.எஸ்.விஸ்வனாதன் – ராமமூர்த்தியின் இசை மீது தீராத காதல் வயப்பட்டிருக்கிறேன். (இன்று வரை அது மாறவில்லை). அவர்களைப் போல் ஒரு திரைப்பட ம்யூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். வாத்தியக் கருவிகளை வாங்க வேண்டும் என்று ஆசை. அவைகளை வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. வீட்டிலோ பொருள் வசதி கிடையாது. நானும் எனது இளைய சகோதரனும் நன்றாகப் பாடுவோம். பலர் எங்களை விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்று கூப்பிட்டிருக்கின்றனர். தரையில் செய்தித் தாளை விரித்துப் போட்டு அதையே ‘பாங்கோஸ்’ என்ற கருவியாகக் கருதி கொட்டுப் போடுவேன். உடைந்த சிலேட்டு பலகையின் மீது சோடா பாட்டில் மூடிகளை ஆணி வைத்து வரிசையாக அடித்து அதையே ‘மொராக்கஸ்’-ஆக பயன்படுத்தி ‘சல், சல்’ என்று ஓசை வருமாறு தட்டுவேன். ஒரு பாதி தேங்காய் மூடியை நன்றாக மழிக்க சிரைத்து அதன் மீது ஒரு சிறிய கட்டையைக் கொண்டு தட்டுவேன். (ரயில்களில் பல பிச்சைக்காரர்கள் இப்படிப் பயன்படுத்துவதை பலர் பார்த்திருக்கலாம்) எங்களுடைய இள வயது நண்பர் – அவரை எஸ்.ஜி.எஸ் என்று சுறுக்கமாகக் கூப்பிடுவோம் – அவரும் எங்கள் இசைக்குழுவில் உறுப்பினர். ஒரு மொட்டை மாடியில் அமர்ந்து எங்களுடைய ‘மினி’ இன்னிசைக் கச்சேரியை நடத்துவோம். அப்பொழுதே திரைப்படங்களில் நான் ஒரு ம்யூசிக் டைரக்டர் ஆகி விட்டது போலவே கற்பனை செய்திருக்கிறேன். ‘அவளுக்கென்ன, அழகிய முகம்’ என்ற பாடல் காட்சியில் – சர்வர் சுந்தரம் என்ற படத்தில் – திரு விஸ்வநாதன் அவர்கள் அந்தப் பாட்டை ரிக்கார்டிங் செய்வது போல ஒரு காட்சி வரும். ‘ஆஹா...இப்படித்தான் ரிக்கார்டிங் நடக்கும் போலிருக்கிறது’ என்று நானும் ஒரு திரைப்படத்துக்கு இசையமைப்பது போல கற்பனை செய்து பார்த்துக்கொள்வேன்.

திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் முதுனிலை பட்டப் படிப்பின் போது ஓரளவு என்னால் பல வாத்தியக் கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. புல் புல் தாரா, ஹார்மோனியம், தபலா, பாங்கோஸ், இவைகளை எந்த ஆசிரியர் உதவியின்றி நானாகவே நன்றாக வாசிக்கக் கற்றுக்கொண்டேன். ஹாஸ்டலின் ஆண்டு விழாவின் போது நானாகவே டியூன் செய்த ஒரு இசைத் துண்டை புல் புல் தாராவில் ‘டைட்டில்’ இசையாக வாசித்துக் காட்டினேன். என்னுடன் என் ஹாஸ்டல் நண்பராகவும் எனக்குக் வழிகாட்டி குருவாகவும் இருந்த திரு.ஜெயக்குமாருக்கு நன்றி.

ஆனால், என்னுடைய இந்த ஆசை என் வாழ்வில் நிறைவேறவேயில்லை. நிறைவேற்றிக்கொள்ள நானும் தீவிர முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. வாழ்க்கைச் சுழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே என்னுடைய ஆசையை என்னுள்ளேயே புதைத்துக்கொண்டேன்.

சிறு வயதில் சர்கஸ் பல பார்த்ததில் எனக்குப் பிடித்த ‘ட்ரபீசியம்’ – உயரத்தில் நான்கு புறமும் தொங்கவிடப்பட்ட கம்பிகளிலிருந்து ஆண்களும், இளம் பெண்களும் – பல சமயம், கீழே வலை கூட கட்டாமல் – ஆடுவதை பிரமித்துப் பார்த்திருக்கிறேன். வளர்ந்து வந்த சிறு பிராயத்தில் ஏற்பட்ட ஒரு சில அனுபவங்கள் எனக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பையும், கோபத்தையும் உண்டாக்கியிருக்கின்றன. ஒரு சில நேரங்களில், வீட்டை விட்டு ஓடிப் போய் ஏதேனும் ஒரு சர்க்கசில் சேர்ந்து ‘பார்’ விளையாட்டு வீரனாகிவிடலாம் என்று தோன்றியிருக்கிறது. அது போன்ற ஆசை அடிக்கடி என் மனதில் உதித்து என்னை வாட்டியிருக்கிறது. நல்ல காலமாக, அப்படியெதுவும் எனக்கு நடக்கவில்லை. சர்க்கசில் சேரும் ஆசை மனதளிவிலேயே புதைந்து விட்டது. அந்த ஆசை தீவிரமாக என்னை உலுக்கியதென்னவோ உண்மைதான்.

கொஞ்சம் அறிவு வந்த பிறகு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த  காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று தீவிர ஆசை என்னை பிடித்துக்கொண்டது. அதற்கு நான் தகுதியுடையவனா என்பதைப் பற்றியெல்லாம் நான் யோசித்ததில்லை. என்னுடைய ஒரே தகுதி கடுமையாக உழைப்பதற்கு நான் தயாராக இருந்தேன் என்ற ஒன்று மட்டுமே. முதுனிலை பட்டப் படிப்பின் போது திருச்சி, செயின்ட் ஜோஸஃப் கல்லூரியில் என்னுடைய வேதியியல் பிரிவின் தலைவராக இருந்த மதிப்புக்குரிய பாதிரியார் காஸ்மீர் அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். பொருளாதார வசதியில்லாமல் எனது படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்த அந்த நாட்களில் அவரது ஆதரவில்லாமல் நான் என் படிப்பை முடித்திருக்க முடியாது. எனது தேர்வுகள் நெருங்கும்  நேரத்தில் ஒரு பொதுத் துறை வங்கியில் ஆஃபீசராகச் சேருவதற்கு  நான் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த நேரத்தில் மதிப்புக்குரிய பாதிரியார் காஸ்மீர் அவர்கள் என்னிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். இந்தியன் இன்ஸ்டிட்யூட்  ஆஃப் சயன்ஸில் என்னுடைய ஆராய்ச்சிப் படிப்புக்கும் அது முடித்தவுடன் ஃப்ரான்சில் அவர் படித்த பல்கலையில் அதற்கும் மேல் படிப்பதற்கும் முழு பொருளாதார ஆதரவைத் தருவதாக எனக்கு வாக்குறுதி கொடுத்தார். வேதியியல் படித்து விட்டு வங்கியில் போய் ஏன் என்னுடைய  நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று எவ்வளவோ வாதிட்டார். இருந்தும் குடும்ப சூழ்னிலை காரணமாக அவரது வார்த்தைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை அவருக்கு எடுத்துக் கூறினேன். இறுதியில் என்னுடைய முதுனிலை படிப்பின் தேர்வுகளை முடித்துவிட்டு வங்கியிலேயே சேர்ந்து விட்டேன். விஞ்ஞானியாகும் என்னுடைய கனவையும் என்னுள்ளேயே புதைத்துக்கொண்டேன். அதே போல, அந்த வங்கியின் முதல்வராக வர வேண்டும் என்று ஆரம்ப நாட்களிலிருந்து தோன்றிய ஆசையை நாளாவட்டத்தில் என்னுள்ளேயே புதைத்து விட்டு ஒரு சமயத்தில் அந்த வங்கியை விட்டே வெளியேறிவிட்டேன்.

இசை மீது நாட்டம் இருந்தது போல கதை, கவிதை, கட்டுரை, நாடகம்,  எழுதுவதிலும் எனக்கு நல்ல ஈடுபாடு இருந்தது. உணர்ச்சிகளால் கட்டுப்பட்ட, விரைவில் உணர்ச்சி வசப்படக்கூடிய எனக்கு இயல்பாகவே எழுத முடிந்தது. பெரிய எழுத்தாளனாக வர வேண்டும் என்று குறிப்பாக ஆசையிருந்ததில்லை என்றாலும் எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் நிலைத்து நின்றது. ஆனால் நான் வேலையிலிருந்து ஓய்வு பெறும் வரை அதற்கு நேரம் தான்  வரவில்லை.

ஸ்ரீஅம்மா பகவானின் தீவிர பக்தனாக இருந்த காலங்களில் (1998-2009 வரை) சுமார் 16 பாட்டுக்கள் எழுதி, நானே அதற்கு இசையமைத்து, பாடி, தபலா வாசித்து, ரிக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன். வாரா வாரம் நடந்த ‘சத் சங்கங்களில்’ என்னுடைய பாட்டுக்களையே பொதுவாகப் பாடுவேன். நான் இசையமைத்த பாடல்களில் மூன்று ஹிந்தி மொழியில் அமைந்தவை. (எனக்கு அவ்வளவாக ஹிந்தி தெரியாது என்பது இங்கே முக்கியமானது)

2006-க்குப் பிறகு தீவிரமாக எழுதத் தொடங்கினேன். முதலில் என்னுடை ‘ப்ளாக்’-கிலும் (வலை) பிறகு தனியாக புத்தகங்களாகவும் எழுதத் தொடங்கினேன். எல்லாம் வல்ல அந்த இறைவன் அருளால் இன்று வரை மூன்று சிறு கதைப் புத்தகங்களையும், மூன்று முழு நீளக் கதைப் புத்தகங்களையும், ஒரு பொது அறிவுப் புத்தகத்தையும் எழுதி நானே சொந்த வெளியீடாக வெளியிட்டிருக்கிறேன். என்னுடைய மூன்று சிறு கதை தொகுப்புகளையும் எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மூன்று பள்ளிகளில் ‘non-detailed book’ –க்காகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதில் எனக்குப் பெருமைதான்.

இரண்டு முக்கியமான விஷயங்கள்.

முதலாவது, என்னுடைய ஆசைகள் நிறைவேறவில்லையே என்று நான் என்றும் வருத்தப்பட்டு கொண்டதில்லை. ஆசைப்பட்டது நிறைவறவில்லையென்றால் கிடைத்ததைக் கொண்டு மகிழ்ந்துகொள்ளும் குணம் எனக்கு இயல்பாகவே அமைந்திருந்தது என்று  நம்புகிறேன். கிடைத்ததை விரும்பி ஏற்றுக்கொண்டதால் சறிவு என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் என் வாழ்க்கையில் நடந்ததாக நான் கருதவில்லை.

இரண்டாவது, ஒவ்வொருவருக்கும் ‘ஸ்வதர்மம்’ மற்றும் ‘ஸ்வபாவம்’ என்றிருக்கிறது என்பதை பின்னால் ஸ்ரீஅம்மா பகவானுடன் கழித்த நாட்களில் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆண்டவனாகப் பார்த்து எனக்கு எது ‘ஸ்வதர்மமோ’ அந்த மாதிரியுள்ள செயல்களிலேயே என் வாழ்க்கை கழிந்திருக்கிறது. அவை என் ஸ்வபாவத்துக்கும் ஏற்றதாக அமைந்திருக்கின்றன. ‘ஸ்வதர்மாவுக்கு’ ஏற்காத செயல்களில் ஈடுபடும் பொழுதுதான் அவை வெற்றியடைய மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பல நேரங்களில் அந்த செயல்கள் நமக்கு ஒத்து வராது. நமது ஸ்வதர்மா எது என்பதை நாம் கண்டுகொண்டு செயல்பட்டால் குறைந்த தடங்கல்களுடன் வெற்றியடையலாம் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம்.


இன்னும் எவ்வளவோ எழுதலாம்தான்…