Total Pageviews

Sunday, May 14, 2017

08.05.17 நாட் குறிப்பு (மூன்றாம் பகுதி)

மாற்றம் ஒன்றுதான் என்றுமே மாறாதது என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான் என்பதை பல பதிவுகளில் தெளிவு படுத்தியிருக்கிறேன். ஆனால், அந்த மாற்றங்கள் உலகையே புரட்டிப் போடும் பொழுது பல விதமான பாதிப்புகள்.

கடந்த வாரம் KLAUS SCHWAB என்பவர் எழுதிய THE FOURTH INDUSTRIAL REVOLUTION என்ற அருமையான நூல் இங்குள்ள பொது நூலகத்தில் கையில் கிடைத்தது. WORLD ECONOMIC FORUM என்ற பன்னாட்டு பொருளாதார நிறுவனத்தின் நிறுவனரும், செயல் தலைவருமான KLAUS SCHWAB எழுதிய நூல். 2016-ல்தான் வெளி வந்திருக்கிறது.

மனித குலத்தின் சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட புரட்சி என்றால் முக்கியமாக மூன்றை சொல்ல வேண்டும்.

முதலாவது, மனிதன் காடுகளில் வேட்டையாடும் நிலையிலிருந்து விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டது.

இரண்டாவது பதினைந்தாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் குட்டென்பெர்க் அச்சடிக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடித்தது. அதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற் புரட்சி.

மூன்றாவது, 20-ஆம் நூற்றாண்டில் இன்டெர்னெட் கண்டுபிடிக்கப்பட்டு பரவலானது.

இன்டெர்னெட் கண்டுபிடிப்பின் தொடர்ச்சி என்று ஒரு சிலரால் கருதப்பட்டாலும் இப்பொழுது  இன்று காணப்படும் தொழில் நுட்ப வளர்ச்சியின் சென்றடைவதின் வேகத்தையும், ஆழத்தையும், தாக்கத்தையும் கூர்ந்து பார்க்கும் பொழுது இன்று  நிகழ்வது ஒரு புதிய - நான்காவது தொழில் புரட்சி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது என்கிறார் ஆசிரியர்.

இந்த நான்காவது தொழிற் புரட்சி நாம் வாழும் விதத்தையும் நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு/உறவு கொள்ளும் முறையையும் அடிப்படையிலேயே மாற்றிக் கொண்டு வருகிறது. அதன் அளவு, செயற் பரப்பு, மற்றும் வீச்சு எல்லாமே இது வரை கண்டிராத அளவு மனிதனைத் தாக்குகிறது.  

உதாரணத்துக்கு …

சில நூறு கோடி மக்கள் கைகளில் ஸ்மார்ட் ஃபோன்கள். அவைகள் மூலம் பல லட்சக் கோடிக் கணக்கான தகவல்கள் ஒரே நேரத்தில் பரிமாற்றம், அந்தத் தகவல்களை சேமித்து வைக்கும் ராட்சத கிடங்குகள், அரிய தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கக் கூடிய ஒரு சக்தி …இதையெல்லாம் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் பிரமிப்பாக இருக்கிறது. இதனால் இன்னும் ஏற்பட இருக்கும் மாற்றங்களையும் தாக்கங்களையும் முழுமையாக இன்னும் நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா என்பது சந்தேகமே.

செயற்கை அறிவுத் திறம் (Artificial Intelligence), இயந்திர மனிதன் மற்றும் இயந்திர மூளை (Robotics), தானாகவே இயங்கும் வாகனங்கள் (Self-driving cars), சென்சார்கள் மயம் (the internet of things), 3-டியில் அச்சடிக்கும் தொழில் நுட்பம் (3-D Printing), நானோ தொழில் நுட்பம் (Nano technology) , பயோ டெக்னாலஜி, (மின்)சக்தியை சேமிக்கும் கிடங்குகள் (Energy Storage), க்வாண்டம் கணிப்புகள் (Quantum Computing) போன்ற துறைகளில்  நிகழ்ந்து வரும் மற்றும் நிகழக்கூடிய சாத்தியக் கூறுகள் மற்றும் இவைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் சங்கமம் எல்லாமே பிரமிப்பாக இருக்கிறது.

இந்த நான்காவது தொழிற் புரட்சி எல்லா தொழில்களையும், எல்லா வர்க்கத்தினரையும், எல்லா சமுதாயங்களையும், எல்லா அரசாங்கங்களையும், பல்வேறு விதங்களில் பாதிக்கிறது. பாதிக்கப் போகிறது.

புதிய தொழில் மாடல்கள், உற்பத்தி முறைகள், போக்குவரத்து முறைகள், ஒரு பொருளை அல்லது சேவையை வாடிக்கையாளருக்குச் சேர்க்கும் முறை இப்படி பலதும் புரட்டிப் போடப்படுகின்றன.

ஒருவர் வேலை பார்க்கும் விதம், ஒருவருக்கொருவர் தகவல், கருத்து, மற்றும் செய்தி பரிமாறிக்கொள்ளும் விதம், பொழுது போக்கும் விதம், எல்லாமே என்றுமில்லாத அளவு பாதிக்கப் படுகின்றன. பாதிக்கப்படப் போகின்றன.   

அதே போல ஒரு அரசின்/நாட்டின் கல்வி முறை, மருத்துவ முறை, போக்குவரத்து முறை எல்லாம் பாதிக்கப் படுகின்றன. பாதிக்கப்பட போகின்றன.

மக்களின் நடையுடை, பாவனை, பழக்க வழக்கங்கள், பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு, இயற்கை பாதுகாப்பு எல்லாம் பாதிக்கப் படுகின்றன. பாதிக்கப்பட போகின்றன.
            
    ஒரு சில உதாரணங்களுக்கு…
     Ø  உடலிலேயே பொருத்திக் கொள்ளக்கூடிய மருத்துவ உபகரணங்கள், அவை மூலம் உடம்பு, மருத்துவ நிலை, கண்காணிப்பு பரவலாகிக் கொண்டிருக்கின்றன். இன்று காணப்படும் பேஸ் மேக்கர்கள் ஒரு ஆரம்பம்தான். உடம்புக்குள்ளே ஒட்டிக்கொள்ளும், ஸ்மார்ட் தூசி, ஸ்மார்ட் மாத்திரைகள், டிஜிட்டல் பச்சைக் குறிகள் (tattoos) வந்து கொண்டிருக்கின்றன.
     Ø  செயற்கை அறிவுடைய ஸ்மார்ட் கண்ணாடிகள் – உதாரணத்துக்கு கூகுள் கண்ணாடிகள் – மூலம் கண் பார்வையினாலேயே வலையில் பிணைந்து கொள்வது, தகவல் பரிமாறிக்கொள்வது
     Ø  ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முழு அறையை அடைத்துக் கொண்டு நின்ற கம்ப்யூட்டர்கள் குறுகி பின்னர் ஒரு மேஜையளவாகவும், பின்னர் லேப்டாப் வடிவமாக நமது மடியளவாகவும், அதற்கும் பின்னர் செல்ஃபோன் வடிவத்திலும் ஸ்மார்ட் வடிவத்திலும் கையளவாகவும் இன்று சிறு கைக்கடிகாரம் அளவு வரை குறுகி விட்டன.
    Ø  3 ஜி/4ஜி சேவைகள் மூலம் எந்த நேரத்திலும் தகவல் சேகரிப்பு, பரிமாற்றம், கண்காணிப்பு போன்றவை இன்று ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லா நாடுகளிலும் எல்லா மக்களிடமும் கைவசம் இருக்கின்றன. உலக மக்கள் தொகையில் சுமார் 43 சதவிகித மக்களிடம் இன்டெர்னெட் இணைப்பு இருக்கிறது. 2014-ஆம் ஆண்டு மட்டும் சுமார் 120 கோடி ஸ்மார்ட் ஃபோன்கள் வியாபாரம் ஆகியிருக்கிறது. 2015-ல் டேப்லட் கம்ப்யூட்டர்களின் வியாபாரம் மற்ற கம்ப்யூட்டர்களின் வியாபாரத்தை விட அதிகரித்திருக்கிறது.
  Ø  நம்மிடம் இருக்கும் டேட்டாக்களை (புகைப் படங்கள், பத்திரங்கள், தகவல்கள், புத்தகங்கள், தனிப்பட்ட கணக்கு வழக்குகள், இப்படிப் பல) சேமித்து வைக்கும் வசதிப் பெருக்கம். இன்று இன்டெர்னெட் பயன்படுத்தும் பலரிடமும் டன் கணக்கில் டேட்டாக்கள் தேங்கிக் கிடக்கின்றன.
  Ø  எல்லாமே இன்டெர்னெட் மயம் என்கிற போது எங்கு பார்த்தாலும் இன்டெர்னெட்டுடன் இணைப்பு செய்யப்பட்ட சென்சார்கள் மயம். எல்லாமே ரிமோட் மயம். ஃபோர்ட் ஜி. டி மாடல் கார்களில் ஒரு கோடி கம்ப்யூட்டர் கோடிங் இணைப்புகள் இருப்பதாகத் தகவல். சமீபத்தில் வெளி வந்த ‘ஐ. டி’ ஆங்கிலத் திரைப்படத்தில் (ஜேம்ஸ் பாண்ட் புகழ் பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்தது) ஒரு ஐ. டி நிபுணர் இளைஞன் எப்படி ஒரு பெரிய முதலாளியின் குடும்பத்தையே நாசம் செய்ய முற்படுகிறான் என்று காட்டுகிறார்கள்.
  Ø  வீடுகளில் கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கு மட்டுமே இதுவரை இன்டெர்னெட் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. இப்பொழுது ஒரு வீடு முழுவதையும் இயக்குவதற்கு இன்டெர்னெட் பயனுக்கு வந்து கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் மின் இயந்திரங்கள், மின் விசிறிகள், குளிர்சாதனங்கள், செக்யூரிடி கருவிகள், தண்ணீர் குழாய்கள் இப்படிப் பலதும் ரிமோட் கன்ட்ரோலில் இன்டெர்னெட் வழியாக இயங்கத் துவங்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு, குளிர் பிரதேசங்களில் தானாகவே தன்னை சூடுபடுத்திக் கொள்ளும் ஒரு கார். ‘நெஸ்ட்’ என்ற ஒரு செயலி இதையெல்லாம் தானாகவே செய்து கொள்ளும்.
   Ø  ‘ஸ்மார்ட்’ நகரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நகரத்தின் முழு கண்காணிப்பு, கட்டுப்பாடு, இயக்கம் எல்லாமே இன்டெர்னெட் மூலமாக தானாகவே நடக்கும். சிங்கப்பூர், பார்சலோனா போன்ற நகரங்கள் பல முன் மாதிரியான ஸ்மார்ட் வழிகளை செயல்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டில் சான்டேண்டர் என்ற நகரத்தில் சுமார் 20000 சென்சார்கள் மூலம் நகரத்தை முழுவதுமாக இணைக்கும் ஒரு பரிசோதனையை செய்து வருகிறார்கள்.
 Ø  காரோட்டியில்லாமலேயே இயங்கக் கூடிய கார்கள் வந்து கொண்டிருக்கின்றன. 2020-ல் கூகுளின் தானியங்கி கார் வெளிவந்து விடும் என்று நம்புகிறார்கள்.
  Ø  பல முக்கியமான முடிவுகளை செயற்கை மூளை, செயற்கை அறிவு, செயற்கை மனிதன் மூலமாக எடுக்கப்படும் நாள் மிக தூரத்தில் இல்லை. புதியதாக வந்திருக்கும் கான்செப்ட் நெட் 4 என்ற செயலி ‘ஐ. க்யூ’ தேர்வில் ஒரு நான்கு வயதுக் குழந்தையை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறது. வெகு விரைவில் ஒரு அறிவு முதிர்ந்த மனிதனுடன் போட்டி போடும்.
  Ø  இப்பொழுது பலத்த சர்ச்சையிலிருக்கும் ‘பிட் காயின்’ ‘ப்ளாக்செயின்’ போன்ற செயலிகள் எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி பல பொருளாதார நிறுவனங்களுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றன. இது எங்கே போய் முடியும் என்று யாருக்கும் தெரியாது.
  Ø  முக்கியமாக 3டி அச்சடிக்கும் தொழில் நுட்பம் (அதாவது வெவ்வேறு மூலப் பொருட்களைப் பயன்படுத்தி பல அடுக்குகளில் அச்சடித்து தத்ரூபமாக ஒரு பொருளை உருவாக்குவது போன்ற ஒரு தொழில் நுட்பம்) வேகமாக வளர்ந்து வருகிறது. மனித உடல் உறுப்புக்களைக் கூட 3டி அச்சடிக்கும் தொழில் நுட்பத்தில் தயாரிக்கலாம் என்றிருக்கிறார்கள். 2014-ல் சைனாவில் இந்த முறையில் ஒரு நோயாளியின் முதுகெலும்புத் தண்டின் ஒரு பகுதியை தயாரித்துப் பொருத்தியிருக்கிறார்கள்.

இன்னும் எவ்வளவோ 2025-க்குள் வந்து விடும் என்று கணிப்பெடுத்திருக்கிறார்கள்.

முடிவுரை: (மூன்றாம் பகுதிக்கு)

தற்போதைய இந்திய அரசாங்கம் இதையெல்லாம் மனதில் கொண்டுதான் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். தொலை நோக்குப் பார்வையுடன் இந்த விஷயத்தை அணுகினால் இந்த நான்காம் தொழிற் புரட்சியால் ஏற்படும் நல்ல பலன்களை (சமயத்தில் சில கெடுதலான பலன்களையும் சேர்த்து) அனுபவிக்கலாம். ஆனால், இந்த தொழில் நுட்பத்தின் வளர்ச்சியையும் அதனால் ஏற்பட இருக்கும் மாற்றங்களையும் யாராலும் தடுக்க முடியாது. ஆக்க பூர்வமாக்க முயற்சிக்கலாம். அவ்வளவே. இந்த புரட்சியில் இந்தியாவின் பங்கு இருக்குமா என்பதை விஷயம் தெரிந்தவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வெறும் குண்டுச் சட்டியில் அமர்ந்து கொண்டு குதிரை ஓட்டினால் ஒரு பயனும் இல்லை. 

No comments:

Post a Comment