Total Pageviews

Monday, May 29, 2017

28.05.17 ஓடி ஓடி தியேட்டருக்குப் போய் பார்த்த படம்

28.05.17

பதினோறு மணியாயிடுச்சு…பதினொண்ணு இருபத்தைஞ்சுக்குப் படம். இன்னிக்கு ஞாயிறு.  தியேட்டர்ல கூட்டம் வேற இருக்கும். தியேட்டரை கண்டுபிடிச்சு போய் சேரச்சே லேட் ஆயிடும். சீக்கிரம் கிளம்புங்க,” என்று மனைவி விரட்டிய பிறகு சுறுசுறுப்பாகி கிளம்பி விட்டேன்.

பையன் அவனுடைய காரைக் கொடுத்து விட்டான். வழியையும் சொல்லி விட்டான். அங்கங்கே வேகக் கட்டுப்பாடு அறிவிப்பு பலகையைப் பார்த்துக் கொண்டு காரின் வேகத்தை அங்கங்கே சமப்படுத்திக்கொண்டு பையன் சொன்ன வழியில் சரியாகச் சென்று தியேட்டர் வாசலில் நிறுத்தி விட்டேன். கார் நிறுத்துமிடத்தில் நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நல்ல கூட்டம் இருக்கும் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டு வேக வேகமா தியேட்டருக்குள் நுழைந்தோம்.

மணி 11.20. டிக்கெட் கொடுக்கும் இடத்தில் எங்களுக்கு முன்னே ஒரே ஒரு குடும்பம் மட்டுமே நின்று கொண்டிருந்தது. மேலே தொங்கிக் கொண்டிருந்த மின் பலகையில் நாங்கள் பார்க்க வந்த படத்தின் பெயரைக் காணோம். ஒரு வேளை வலையில் பார்த்த செய்தி தவறாக இருக்குமோ என்று ஒரு பதைபதைப்பு.

நாங்கள் பார்க்க வந்த படத்துக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு அரங்கத்துக்கு வேகமாக ஓடினோம். ஆரம்ப சீனை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.  

1 முதல் 9 வரையுள்ள அரங்கங்கள் வலது பக்கம். 10 முதல் 16 வரை இடது புறம். ஆம். அந்தக் காம்ப்ளெக்சில் 16 அரங்கங்கள். எங்களுடையது 11-ஆவது அரங்கம்.

அரங்கத்தின் நுழைவாயிலில் யாரும் எங்களை செக் செய்யவில்லை. உள்ளே விளம்பரப் படங்கள் தொடங்கி விட்டன. ‘அப்பாடா, படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை,’ என்று ஒரு நிம்மதி.

அரங்கத்தில் அரையிருட்டு. கடைசி வரிசையில் தெற்கிந்திய இளம் தம்பதிகள் இரண்டு பேர். மூன்றாவது வரிசையில் வடக்கிந்திய குடும்பத்திலிருந்து ஒரு நாலு பேர். எங்கள் இரண்டு பேரையும் சேர்த்தால் அரங்கத்தில் மொத்தம் எட்டு பேர். சுமார் முன்னூறு பேர் அமரக்கூடிய அரங்கம். எப்படித்தான் இவர்களுக்கு கட்டுப்படியாகிறதோ தெரியவில்லை.

“ஆஹா, நமக்காகவே ஸ்பெஷல் ஷோ போலிருக்கு” என்று நினைத்துக் கொண்டேன்.

விளமபரப் படங்கள், வரக் கூடிய படங்களுக்கான ட்ரெயிலர்கள் எல்லாமாக ஒரு பத்து நிமிடங்கள் ஓடின. படம் ஆரம்பிப்பதற்கான ஸ்லைடு போட்டாகி விட்டது. இருட்டில் தடவிக்கொண்டு இன்னும் ஒரு ஐந்தாறு பேர். ஆக மொத்தம் அரங்கத்தில் 13-14 பேர்.

டைட்டில் போட்டாகி விட்டது. “பாகுபலி 2 – முடிவு” ஹிந்தி டப்பிங் படம்.

சுமார் 2 மணி 50 நிமிடங்கள் இடைவெளிக்காகக் கூட நிறுத்தாமல் ஓடியது. முடிவும் போட்டாகி விட்டது. படத்தில் இணைந்த பல இத்யாதிகளின் பெயர்கள் வரிசையாக வேகமாக திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

இடையே ஒரு சிறிய டயலாக், “மஹேந்திர பாகுபலியின் பையன் தான் வருங்காலத்தில் மகிஷ்மதியின் மன்னராக வருவானா?” என்று. அதற்கு பதில் டயலாக். “அந்த சிவனைத் தவிர யாருக்குத் தெரியும்?” என்று. பூடகமாகச் சொல்கிறார்களோ, “பாகுபலி 3” வருமா, வராதா என்று அந்த சிவனுக்குத்தான தெரியும் என்று.

“பாகுபலி 2 – முடிவு” - படம் ரேட்டிங் 60% - கம்ப்யூட்டர்கள் நன்றாக நடித்திருக்கின்றன.

முடிவுரை: இந்தப் படம் ரிலீசாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஒரு தீவிர விருப்பம் நேற்று வரை எனக்கு வரவில்லை. சும்மா இல்லாமல் என் பையன் நேற்று, “ நாளைக்கு லீவு நாள்தான். நீங்கள் இரண்டு பேரும் வேண்டுமானால் பாகுபலி 2 படத்தை பார்த்து விட்டு வாருங்கள். உங்கள் ஒபினியனைக் கேட்டுவிட்டு அடுத்த நாள் நாங்கள் இருவரும் போய் வருகிறோம்,” என்று கூறி விட்டான்.

இன்னொரு மாதம் பொறுத்திருந்தால் கண்டிப்பாக ஏதேனும் ஒரு வலையில் இதைக் கண்டிப்பாகப் பார்க்கலாம் என்று தான் இருந்தேன். (பணம் கொடுத்து வைத்திருக்கிறோம் சில வலைத் தளங்களுக்கு. ஓசியில் இல்லை) தியேட்டரில் பார்த்து 1500 கோடி இலக்கை எட்டுவதற்கு எங்களாலான காணிக்கையை கொடுத்து வந்துவிட்டு ஜன்ம சாபல்யம் தீர்ந்து விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.


பின் குறிப்பு: பாகுபலி 1-ஐ வலையில் தான் (நல்ல பிரதி) ஒரு மாதம் முன்பு பார்த்திருக்கிறேன்.  நன்றாக இருந்தது. Technically Superb. 2 is a continuation of the same trend with minor differences.

No comments:

Post a Comment