Total Pageviews

Saturday, May 27, 2017

28.05.17 இந்த வார நாட்குறிப்பு: மரணத் தறுவாயில் நிற்பவர்களின் வாழ்க்கையின் 5 பெரிய வருத்தங்கள்

28.05.17 இந்த வார நாட்குறிப்பு: மரணத் தறுவாயில் நிற்பவர்களின் வாழ்க்கையின் 5 பெரிய வருத்தங்கள்

கடந்த வாரம் Harvard’s Graduate School of Education-ன் Dean-ஆகப் பணிபுரிந்த James E. Ryan என்பவர் எழுதிய “Wait, What? And Life’s Other Essential Questions” என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் Bronnie Ware என்ற ஒரு நர்ஸ் எழுதிய The Top Five Regrets of the Dying என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். மரணத் தறுவாயில் இருக்கும் பல நோயாளிகளைப் பராமரித்து வந்த Bronnie Ware அந்த நோயாளிகளின் மிகப் பெரிய வருத்தங்கள் என்ன என்பதை கேட்டறிந்து அதைப் பற்றியே ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். வாழ்க்கையின் இறுதித் தருணத்தில் இருக்கும் பலரும் பொதுவாக தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வருத்தம் என்று குறிப்பிட்டிருப்பது எது என்று தெரிந்தால் எல்லோரும் ஆச்சரியப்படக்கூடும்.

ஒரு பொருளை அடைய விரும்பி அதை அடைவதற்கு வாழ்நாளில் ஒரு முறையேனும் ஒரு சிறிய முயற்சியைக் கூட ஆரம்பித்து வைக்கவில்லை என்பதுதான் அவர்களின் மிகப் பெரிய வருத்தம். இது எவ்வளவு பெரிய உண்மை என்பது கொஞ்சம் யோசித்தால் தானாகத் தெரியவரும்.

நாம் எல்லோரும் பல பொருட்களுக்கு, பல சிறிய அல்லது பெரிய குறிக்கோளுக்கு ஆசைப்படுகிறோம். ஆனால், அதை அடைவதற்காக என்ன முயற்சி செய்தோம் என்று பார்த்தால் பொதுவாக எந்த முயற்சியும் செய்திருக்க மாட்டோம். வெறும் ஏக்கத்தோடேயே வாழ்க்கையை ஓட்டியிருப்போம். மற்றவர்கள் அதே பொருளை அல்லது இலக்கை அடையும் பொழுது அவர்களைப் பார்த்து நாம் பொறாமைப் பட்டிருப்போம் அல்லது குற்றம் குறை கண்டிருப்போம். இது என்னால் இயலாது என்று முயன்று பார்க்காமலேயே அல்லது முயற்சிக்க ஆரம்பிக்காமலேயே முடிவுக்கு வந்திருப்போம். அல்லது பல காரணங்கள் காட்டி நம்மால் ஏன் இயலவில்லை என்பதை நியாயப்படுத்தியிருப்போம். வெளி உலகத்தை, மற்றவர்களை, நமது சூழ்னிலைகளைக் குற்றம் கூறியிருப்போம்.

ஆனால், வயதான பிறகு நிதானமாக யோசிக்கும் பொழுது  வாழ்நாள் முழுவதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறோம் என்பது தெரியவரும். அந்த தருணத்தில் முயற்சி செய்வது என்பது பல காரணங்களுக்காக உண்மையிலேயே முடியாததாக இருக்கலாம். அல்லது தாமதமாக இருக்கலாம். மரணம் நெருங்கி விட்டால் வேறொன்றும் செய்ய இயலாமல் நம்மை நாமே வருத்திக்கொண்டு துன்பப்படுகிறோம்.

ஒரு பொருளுக்கு அல்லது ஒரு குறிக்கோளுக்கு ஆசைப்பட்டால் அதைப் பற்றி ஏதேனும் செய்ய வேண்டும். எவ்வளவுதான் மனதுக்குள் திட்டம் தீட்டினாலும், அதைப் பற்றி ஆலோசித்தாலும், பேசினாலும், எழுதினாலும் செயலில் இறங்காமல் ஒரு காரியமும் நிறைவேறாது. நாம் எடுக்கும் செயல் சரியாக வரும் என்று எந்த உத்திரவாதமும் கிடையாது. ஆனால், செயலில் இறங்காமல் அந்தக் காரியத்தை நோக்கி நாம் நகரவும் மாட்டோம். குட்டை போல ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்போம். ஒரு ஆறு போல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அது எங்கேயும் நிற்காது. எத்தனை தடுப்புகள் வந்தாலும் அதை தாண்டியோ, தன் பாதையை மாற்றியோ பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும். அது போலத் தான் நாமும் எதற்கு ஆசைப்பட்டாலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

முதலில் ஆசைப்பட்டதை நோக்கி செயலில் இறங்க வேண்டும். அதற்காக எதையும் யோசிக்காமல் செயலில் இறங்க வேண்டும் என்ற அர்த்தமில்லை. கண்டிப்பாக சிந்திக்க வேண்டும். ஆனால், சிந்திப்பதை மட்டுமே ஒரு செயலாக எடுத்துக் கொள்ளக்கூடாது. செயலிலும் இறங்க வேண்டும். ஆயிரம் மைல் தூரப் பயணமானாலும் முதல் அடியை எடுத்து வைத்தாக வேண்டும்.

ஓரளவு சிந்தித்து, திட்டமிட்டு செயலில் இறங்க வேண்டும். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லையென்றால் மீண்டும் சிந்தித்துப் பார்த்து செயலை மாற்ற வேண்டும். இலக்கையல்ல.

“சிந்தித்துப் பார்த்து செயலை மாற்று, தவறு சிறிதாய் இருக்கையில் திருத்திக்கோ” என்று ஒரு கவிஞர் திரைப்படத்தில் பாடியிருக்கிறார். எவ்வளவு உண்மை!

ஒரு குறிக்கோளை அடைவது அல்லது ஆசைப்பட்டதை அடைவது என்பது ஒரு முடிவு அல்ல. ஒரு செய்முறைதான். Achieving what one desires is not an end by itself. It is just a process in life. It is the process that makes life interesting, and not the end by itself. இந்த செய்முறைதான் வாழ்க்கையை இனிதாக்குகிறது. முடிவு அல்ல.

இன்றைய மாணவர்களும், சிறுவர்களும், இளைஞர்களும் இதைக் கண்டிப்பாக உணர வேண்டும். நீங்கள் எதற்கேனும் ஆசைப்பட்டால் அதைப் பற்றிய ஏதேனும் ஒரு செயலில் இறங்குங்கள். Take the first step. Make the Beginning.

இதை நானும் என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன். என்னுடைய மரணத் தறுவாயில் இந்த விஷயத்தில் மட்டுமாவது எனக்கு எந்த வருத்தமும் இருக்காது என்பதை  நிச்சயமாக நம்புகிறேன்.


அப்படியானால் வேறு விஷயங்களில் வருத்தமிருக்குமா என்று கேட்டால்….இந்தக் கணம் என்னுடைய கடைசி மூச்சுக்கான சமயமாக இருந்தால்… கண்டிப்பாக 5 வருத்தங்கள் இருக்கும் என்று நம்புகிறேன். அவை என்ன? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment