Total Pageviews

Monday, May 22, 2017

குற்றம் கடிதல் – தமிழ் திரைப்படம்

குற்றம் கடிதல் – தமிழ் திரைப்படம்

2015-ல் வெளி வந்து தேசிய விருது பெற்ற, பல திரைப்பட விழாக்களில் படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்னமேயே பங்கு கொண்ட ஒரு தமிழ் படம். நேற்று எதேச்சையாக கண்ணில் பட்டது. பார்த்தேன்.

ஒரு (குறும்புக்காரன் என்று தெரிந்து கொள்ளாத) ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவனை ஆசிரியை அவனுடைய இடக்கான குறும்புப் பேச்சுக்காக வகுப்பில் சக மாணவர்கள் முன்னிலையில் அடித்து விடுகிறாள். மாணவன் மயங்கிக் கீழே விழுந்து தலையில் அடி. பள்ளியினர் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். இது ஒரு பெரிய பிரச்சினையாகிவிடும் என்று பயந்து அந்த ஆசிரியை மெர்லினை கொஞ்ச நாட்களுக்கு அவளுடைய கணவருடன் தலைமறைவாக இருக்கச் சொல்லிக் கேட்டுக்கொள்கிறார். மாணவனுடைய நிலைமை மோசமாகி கோமா நிலைக்கு சென்று விடுகிறது.

ஒரு பள்ளி மாணவனை ஆசிரியை அடிக்கலாமா அடிக்கக் கூடாதா? பெரிய சர்ச்சை. ஊடகங்கள் இந்தப் பிரச்சினையை பெரிதாக்க முயற்சிக்கின்றனர். விசாரணை நடக்கிறது.

இறுதியில், சர்ஜரிக்குப் பிறகு மாணவன் பிழைத்து விடுகிறான். அவனுக்குச் சிறு வயதிலேயே ஏற்பட்ட ஒரு முளைக் காயத்தினால்தான் அப்படி மயங்கி விழுந்தான். ஆசிரியை அடித்தது ஒரு விபத்து. அவள் அடித்ததினால் மயங்கி விழவில்லை என்பது நிரூபணம் ஆகிறது. ஆனால், ஆசிரியை தன் தவறை வெளிப்படையாக ஊடகங்கள் முன்னே ஒப்புக்கொள்கிறாள். ‘ஒரு மாணவனை வளர்ப்பதற்குத்தான் பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்புகிறார்கள். அந்த மாணவனை தன்னுடைய பிள்ளையாக நினைத்து அவனை திருத்தி, நல் வழிப்படுத்தி அவன் வளர்ச்சிக்கு உதவுவதுதான் ஒரு ஆசிரியையின் கடமை,” என்று சொல்லி தன் தவறை ஒப்புக்கொள்ள்கிறாள்.

ஒரு சமூகப் பிரச்சினையை மிகவும் ஜாக்கிரதையாக இயக்குனர் பிரம்மா கையாண்டிருக்கிறார். ஆரம்பத்தில் படம் மெதுவாகப் போவது போல உணர்ந்தாலும் மாணவன் அடி வாங்கி கீழே விழுந்த பிறகு விறுவிறுப்பாகப் போகிறது. பல இடங்களில் மனதைப் பிசைகிறது. முக்கியமாக, ‘சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா’ பாடலை பல காட்சிகளோடு இணைத்துக் காட்டும் இடங்களில் கண்ணில் நீர் வருவதை தடுக்க முடியவில்லை.


படத்துக்கு எல்லா நடிகர்களும் புதியவர்கள். கதா நாயகி ராதிகா பிரசித்தா பல மேடை நாடகங்களை எழுதி, இயக்கி நடித்தும் இருக்கிறார்.  நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தோன்றுகிறது. படத்தில் வரும் எல்லா கதாப் பாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கொஞ்சம் சினிமாத்தனத்தை தவிர்க்க முடியாமல் சேர்த்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மொத்தத்தில் தேசிய விருது பெறுவதற்கு மிகவும் தகுதியான ஒரு படம். படத் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் பாராட்டுக்கள். 

No comments:

Post a Comment