Total Pageviews

Sunday, May 14, 2017

பவர் பாண்டி (தமிழ் திரைப்படம்)

பவர் பாண்டி (தமிழ் திரைப்படம்)

பல  நாட்கள் கழித்து, ஆர்ப்பாட்டமில்லாத, விரசமில்லாத, ஒரு தமிழ் படத்தைப் பார்த்த திருப்தி ‘பவர் பாண்டி’ படத்தைப் பார்த்தபோது கிடைத்தது. ஒரு நல்ல நடிகர் என்ற இடத்திலிருந்து ஒரு நல்ல இயக்குனர் என்ற இடத்துக்கு தனுஷ் உயர்ந்திருக்கிறார். (கமலஹாசன் தன் படத்தில் இதைப் பின் பற்றலாம்,) இள வயது பாண்டியாக தன்னையும், காதலியாக மடோனாவையும் காட்டிய தனுஷ், முதிய வயது பாத்திரத்துக்கு ராஜ் கிரனையும், ரேவதியையும் காட்டி வித்தியாசமாகச் செய்திருக்கிறார். இடையிடையே கொஞ்சம் சினிமாத்தனமும் காட்டியிருக்கிறார். அதைச் செய்யாமல் படம் ஓடாது என்ற கணிப்புக்கு வந்து விட்டார் போலிருக்கிறது. பல சிறிய கதாப் பாத்திரங்களை கையாண்ட விதம் நன்றாக இருக்கிறது. உதாரணத்துக்கு, மடோனாவுக்கு உறவினராக வரும் உடல் பருமனான ஒரு கிராமத்துப் பெண். ராஜ் கிரனுக்கு நண்பனாக வரும் பக்கத்து வீட்டுப் பையன். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் – அதாவது ரேவதியை அறிமுகப்படுத்திய பிறகு – படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் உண்மையிலேயே மனதைத் தொடுகிறது.

பல இடங்களில் வரும் டயலாக்குகள் இன்றுள்ள யதார்த்தத்தை காட்டுகிறது. 
உதாரணத்துக்கு:

‘உன் பையனுக்காக வாழறே, உன் பேரனுக்காக வாழறே, உனக்காக எப்போ வாழப் போறே’ என்ற அர்த்தத்தில் வரும் டயலாக்.

ராஜ் கிரனின் பையன் ப்ரசன்னா ஆஃபீசில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கூட வேலை பார்க்கும் ஒருவருக்கு அவருடைய அம்மா ஃபோன் செய்கிறார். பையன் உடனேயே, நான் இப்போ ஒரு மீட்டிங்கல இருக்கேன். பின்னால கூப்பிடுகிறேன் என்று ஃபோனை கட் செய்கிறார். அப்பொழுது, ப்ரசன்னா ‘என் தந்தையைப் புரிந்து கொள்ளாமல் நான் தொலைத்தது போல நீயும் நடந்துக்காதே, அம்மாவிடம் பேசு. மீட்டிங்ல இருந்தா என்ன?’ என்ற அர்த்தம் தொனிக்கும் டயலாக்.

அதே போல, ப்ரசன்னா தன் அப்பாவைத் தேடி இன்னொருவர் வீட்டுக்கு வரும் பொழுது அந்த இன்னொருவரின் அப்பா, ‘ஆமாண்டா, அப்பா வீட்டுல இருக்கும் போது அவர் சாப்பிட்டாரா, அவருக்கு ஏதேனும் தேவையா..அப்படின்னல்லாம் கேட்காம அப்பா தொலைஞ்ச போது லோ, லோன்னு அலையுங்கடா’ ன்னு அர்த்தம் தொனிக்கும் டயலாக்.

‘உன் மனசுல நான் இருக்கேனா,’ என்று ராஜ் கிரன் ரேவதியை கேட்கும் போது, ‘இப்ப எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு, அதைப் புர்ஞ்சுக்கோ’ன்னு வரும் டயலாக்.

ரேவதியின் பெண்ணாக  நடிக்கும் திவ்ய தர்ஷினி, ‘சின்ன வயசுல ஒரு பெண்ணோட கணவர் இறந்துட்டா வேறொரு துணையைத் தேடிக்கறதல தப்பு இல்லைன்னு நினைக்கிற இந்தக் காலத்துல அறுபது வயதானா மட்டும் அதே போல ஒரு துணையைத் தேடறது தப்புன்னு ஏன் தோன்றுகிறது’ என்ற அர்த்தத்தில் கேட்பது.

இப்படி பல இடங்கள்.

ஷான் ரோல்டன் இசை வித்தியாசமாக, காதைக் கிழிக்காமல், பாட்டுக்களின் வரிகள் கேட்கும் படியாக நன்றாக இருக்கிறது.

பல இளைஞர்களுக்கும் பெற்றோர்களுக்குமிடையே இன்றைக்கு நடக்கும் மௌன யுத்தத்தை பிரதிபலிப்பதாகப் படம் அமைந்திருக்கிறது. கஷ்டப்பட்டு தன் குழந்தைகளின் வாழ்வுக்காக பெற்றோர்கள் (முக்கியமாக அப்பாக்கள்) பல தியாகங்கள் செய்து வளர்க்கிறார்கள். ஆனால், அவர்களின் குழந்தைகள் பெரியவர்களான பிறகும், அப்பா ஓய்வெடுத்துக் கொண்ட பிறகும் அப்பா, அம்மாவுக்கென்று ஒரு வாழ்க்கையை அவர்களின் அடையாளம், முக்கியத்துவம், குறையாமல் அவர்கள் விருப்பம் போல ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியுமா என்ற யதார்த்தமான கேள்வியை கையிலெடுத்து படம் எடுத்திருக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் பல இளைஞர்களும் நியூக்ளியர் ஃபாமிலி முறையையே விரும்புகிறார்கள் போலத் தோன்றுகிறது. அப்படியே அப்பா, அம்மா அவர்கள் கூடவே இருந்தால் அவர்களின் சின்னச் சின்ன தேவைகளையும், விருப்பங்களையும் கவனிப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை என்பது போலவும் தோன்றுகிறது. குழந்தைகள் வளர்ந்த பிறகு அப்பா, அம்மாவால் அவர்கள் விரும்பிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியாமல தவிக்கிறார்கள் என்பது போலவும் தோன்றுகிறது. 

ஒரு பக்கம் குழந்தைகள், பேரக் குழந்தைகள் மீதுள்ள பாசம். இன்னொரு புறம் தனக்கு வேண்டிய சுதந்திரம், மரியாதை, அடையாளம் இவற்றை விட்டுக் கொடுக்க முடியாதது. இந்த இரண்டுக்கும் நடுவே பல பெற்றோர்கள் தவிக்கிறார்கள் என்பதை நானும் உணர்கிறேன்.


வயதான அப்பா, அம்மாக்களுக்கு இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கும். இளைஞர்களுக்கு எப்படியோ தெரியவில்லை. 

No comments:

Post a Comment